அமெரிக்க அதிபர் தேர்தல் அலசல்: பைடன் வெற்றியைவிட டிரம்ப் தோல்வியே கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இடதுசாரி முற்போக்குப் பார்வை கொண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் (குறைந்த அளவினர் என்றாலும்) வெற்றி, இளம் தலைமுறையினரின் குரலாக நம்பப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் |ஜோ பைடன்
டொனால்ட் டிரம்ப் |ஜோ பைடன்

நடந்து முடிந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வரலாற்றில் தனியோர் இடமிருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

இதுவரையிலான அதிபர் தேர்தலில் மிக அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்களாக ஜோ பைடனும் டொனால்ட் டிரம்பும் இருக்கிறார்கள். இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் பைடன் 74 மில்லியன் வாக்குகளும், டிரம்ப் 70 மில்லியன் வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணம் வரை டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. பல நீதிமன்றங்களில் அவர் சார்பாக  மறுவாக்கு எண்ணிக்கை கோரும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவுக்கான இழுபறி இன்னும் எத்தனை நாள்களுக்கு அல்லது வாரங்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.

பைடனின் வெற்றியை சாத்தியமாக்கிய மாநிலங்களில் டிரம்ப்பைவிட மிகக் குறைந்த வாக்கு வித்யாசத்திலேயே பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய  கருத்துக் கணிப்புகளும், செய்தி ஊடகங்களும் பைடனுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கணித்தன. டிரம்புக்கு எதிராகப் பெரும் எழுச்சி இருக்கும் என்று அறைகூவின. ஆனால், தேர்தல் முடிவுகள் காட்டியதோ வேறொரு கள  நிலவரத்தை.

எல்லா நேரங்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒரேமாதிரியாக இருப்பது இல்லை, அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி.

டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியின் அடித்தளம்  அப்படியேதான் இருக்கிறது. கிராமப்புற மக்களின் வாக்குகள், பெரும்பான்மையான கிறிஸ்துவ வெள்ளை இனத்தவரின் (ஆண்கள் மற்றும் பெண்கள்) வாக்குகள் 2016 தேர்தலைப் போன்றே டிரம்புக்கே கிடைத்திருக்கின்றன.

அரிசோனா மாநிலம் தவிர்த்த மற்ற மாகாண லத்தீன் அமெரிக்க வாக்காளர்கள் பெரும்பான்மையாக டிரம்ப்புக்கு ஆதரவாகவே நின்றிருக்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சியின்  வாக்கு வங்கி என்பது அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களும் புறநகரங்களும் ஆகும். இந்த முறையும் அவை பைடனுக்கே ஆதரவாக நின்றன.

94% ஆப்ரிக்க அமெரிக்க பெண் வாக்காளர்கள் பைடன் வெற்றி பெறுவதில்  பெரும் பங்கு வகித்தனர். கல்லூரி சென்று படித்த மக்களின் வாக்குகளும் பைடனுக்கே விழுந்தன.

இந்தக் கடும்போட்டியில் பைடனின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று?

கரோனா நோய்த் தொற்று - டிரம்ப் இதைக் கையாண்ட விதம் அவருக்கு எதிரான பெரும் அலையை கொண்டுவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அவ்வாறு எந்த ஓர் அலையும் அடிக்கவில்லை. நகர்ப்புற மக்களிடம் மட்டுமே இதன் தாக்கம் இருந்தது. இது இந்த நோய் பற்றிய தாக்கம் சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது.

தேர்தல் நாள் அன்றைக்கு மட்டும் ஒரு லட்சம் மக்கள் நோய்  தொற்றுக்கு உள்ளானார்கள். இதுவரை இறந்தவர்களில் அதிகம் பேர் இனச்  சிறுபான்மையினர். அவர்களின் வாக்குகள் பைடனுக்கு ஆதரவாக விழுந்ததில் ஆச்சரியமில்லை.

பொருளாதாரம் - டிரம்ப்பின் முதல் மூன்றாண்டுகள் ஆட்சி பொருளாதாரத்தில் பெரும் சாதனை படைத்தது. கரோனா மட்டும் வரவில்லையென்றால் இன்றைய பைடனின் வெற்றி என்பது சந்தேகம்தான்.

இனப் பிரச்சினை - வெள்ளைக் காவல்துறையின் அத்துமீறலால் நேரிட்ட ஜார்ஜ் பிலாய்ட் மரணம் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. பெரும்பான்மையான ஆப்ரிக்க - அமெரிக்க மக்கள், ஆசிய மக்கள் தங்கள் கோபத்தை இந்தத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்ற கணிப்பு பொய்க்கவில்லை.

ஆனால், இந்த பிரச்சினையை ஒட்டி எழுந்த காவல்துறைக்கு எதிரான கருத்துகள் (குறிப்பாக காவல்துறைக்கான நிதி குறைப்பு) பெரும்பான்மையான வெள்ளையரிடத்தில் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் சிலர்  டிரம்ப்புக்கே மீண்டும் வாக்களித்தனர்.

அதிக வாக்கு எண்ணிக்கை - ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி கடைசியாக 1992 ஆண்டு வெற்றிபெற்றது. அதன் பிறகு இந்த முறைதான் அவர்களுக்கு வெற்றி சாத்தியமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள  ஆப்ரிக்க - அமெரிக்க களப்   பணியாளர்களின் பத்தாண்டுத் தொடர் பணிதான். அவர்களால்தான் மக்கள் அதிக அளவு வாக்களித்தார்கள். அவை பைடனுக்கே விழுந்தன.

இடதுசாரி முற்போக்குப் பார்வை கொண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் (குறைந்த அளவினர்) வெற்றியை இளம் தலைமுறையினரின் குரலாக அவர்கள் நம்புகிறார்கள். அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் உயர்கல்வி, பருவநிலைச் சிக்கல் (Affordable Healthcare, Affordable higher education and Climate crisis) ஆகிய முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலின்போது பிரசாரம் செய்தார்கள். இதனாலேயே பைடனுக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போயின என்றுகூட முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த முற்போக்குக் குரலுக்கு பைடன் செவி சாய்க்காமல் இருக்க முடியாது என்று இளம் தலைமுறையின் நம்புகிறார்கள்.

குடியரசு, ஜனநாயகக் கட்சிகள் இரண்டுக்குமே இது ஒரு முக்கியமான தேர்தல். அவர்கள் எதிர்காலத்தில் செல்லவேண்டிய பாதையை இந்தத் தேர்தல் கோடிட்டுக் காட்டியுள்ளன.

ஆநால், அதேநேரத்தில் நாடு பிளவுபட்டு உள்ளது என்பது உண்மைதான். தேர்தலுக்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் பைடன் வெற்றி பெற்றார் என்பதைக் காட்டிலும் டிரம்ப் தோற்றார் என்பதனாலேயே என்பது  இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

பைடனைப் பிடிக்காதவர்கள்கூட அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றே கூறுகிறார்கள். பைடன் இந்தப் பிளவை சீர்செய்வார் என்றே மக்கள் நம்புகிறார்கள். இதை அவரும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்று நம்பும் வகையில்தான் அவருடைய பேச்சுகள் இருக்கின்றன.

ஜனநாயகத்தில் அனைவரின் குரலும் முக்கியம். அனைவரின் குரலும் ஒலிப்பதற்கான வெளியை இந்த நாட்டின் அரசியலமைப்பு கொடுத்திருக்கிறது. இந்த சுதந்திர வேட்கையின் மாண்பை மீண்டும் ஜோ பைடன் நிலைநிறுத்துவார் என்பதே அனைவரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com