லேரி பேஜ் , சேர்ஜி பிரினின் மனித மூளையும் கூகுள் ஆண்டவரும்

கூகுளின் செயலிழப்பால் பெரு நகரங்கள் தொடங்கி குக்கிராமம் வரை பேசு பொருளானது சர்வ வல்லமை படைத்த கூகுளும் அந்நிறுவனத்தின் மற்ற செயலிகளும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை ஒரு 30 நிமிட செயலிழப்பு தான். ஊடகங்களின் உடைப்புச் செய்தியாகி, பெரு நகரங்கள் தொடங்கி குக்கிராமம் வரை பேசு பொருளானது சர்வ வல்லமை படைத்த கூகுளும் அந்நிறுவனத்தின் மற்ற செயலிகளும். கூகுள் ஆண்டவருக்கு இது முதல்முறை அல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கூகுள் சர்வர்ஸ் ஒரு 5 நிமிடம் செயல்படவில்லை. அப்போது உலகின் இணைய பயன்பாடு 40 சதவீதம் குறைந்தது. 

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான லேரி பேஜ் (Larry page), சேர்ஜி பிரின் (Sergey brin) உருவாக்கிய பேக்ரப் (Backrub) தான் பிற்காலத்தில் கூகுளாக மாறியது. பேக்ரப் என்பது தான் கூகுளின் முதல் பெயர். பேக்ரப் என்பது ஒரு தேடல் புலம் (Search Engine). அந்த காலக்கட்டத்தில் புகழ்மிக்க ஒரு இணையபக்கம் (Website) எத்தனை இணையப்பக்கத்தில் தங்களது பெயரை சேமித்து வைத்திருந்தது என்பதை கண்டறியவே பேக்லிங்ஸ் (Backlinks) என பொருள்படக்கூடிய பேக்ரப் என்ற பெயரை வைத்தனர். பின்னர் அது கூகுள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கூகுள் என்பது கூகால் (Googal) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. கூகால் என்பது ஒரு எண்ணைக் குறிக்கிறது. அதாவது 1-க்கு பக்கத்தில் நூறு பூஜ்ஜியங்களை போட்டால் வரக்கூடிய மதிப்பாகும். அந்த எண் தமிழில் 5 பூரியம் எனக் கூறப்படுகிறது (1-க்கு பக்கத்தில் 20 பூஜ்ஜியங்கள் போட்டால் வரக்கூடிய மதிப்புக்கு பெயர் பூரியம்). கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கூகுள் பிளக்ஸ் (Google plex) அமெரிக்காவில் உள்ள கலிபோஃர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது. கூகுள் பிளக்ஸ் என்பதும் ஒரு எண்ணைக் குறிக்கின்ற சொல்லாகும். அதாவது கூகாலின் பத்து மடங்கு அளவைக் குறிப்பதாகும். 

கூகுளின் இந்த தலைமையகத்தில் அங்கு பணியாற்றுபவர்களின் மன அழுத்தங்களைப் போக்க ஏராளமான விளையாட்டுப் பொருள்கள் உள்ளன. குறிப்பாக அங்கு பணியாற்றும் பணியாளர்கள் உறங்குவதற்காக நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து வித்தியாசமான படுக்கையை உருவாக்கியுள்ளனர். பணியாளர்களின் நிம்மதியான உறக்கம் அவர்களது படைப்பாற்றலை அதிகரித்து அவர்களது பணியை சிறப்பாக்கும் என்பது கூகுளின் நம்பிக்கை. அதேபோன்று பணியாற்றுபவர்களுக்கு நிறைய செல்ல பெயர்களும் உண்டு. கூகுளில் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நூக்ளர் (Noogler), கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர்கள் (Googler), பணியை விட்டுச் சென்ற முன்னாள் பணியாளர் எக்ஸூக்ளர் (Xoogler) என அழைக்கப்படுகின்றனர்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் தங்களது செல்லப் பிராணிகளை தங்களுடன் வைத்துக் கொண்டே கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களை டூக்ளர் (Doogler) என அழைக்கின்றனர்.

கூகுளில் பணியாளர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு அந்நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு இறந்தவர் பெற்ற  சம்பளத் தொகையில் பாதியை வழங்குகிறது. ஒரு நிமிடத்துக்கு கூகுள் 2 லட்சம் டாலர் வருவாய் ஈட்டுகிறது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு விநாடியும் மாறிக்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் ஆரம்பித்த போது அதன்  சேமிப்பு அளவு (Storage Capacity) வெறும் 40 ஜிபி. ஆனால் கூகுள் தற்போது 20 பெராபைட் (Perabyte) தகவல்களை கையாளுகிறது. கூகுள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் தலைமையகம் முழுக்க முழுக்க இத்தகைய ஆற்றலைக் கொண்டே இயங்குகிறது.

உதாரணமாக கூகுள் தலைமையகமான கூகுள் பிளக்ஸின் புல்வெளிகளை சமப்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது இல்லை. வருடத்துக்கு 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து மேய விட்டு புல்வெளியை சமப்படுத்துகின்றனர்.

கூகுள் தலைமையகமான கூகுள் பிளக்ஸில் ஏராளமான மிதிவண்டிகள் உள்ளன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல கூகுள் பணியாளர்கள் இந்த மிதிவண்டிகளை பயன்படுத்துகின்றனர். இந்த மிதிவண்டிகளுக்கு, பூட்டு கிடையாது. ஒருவர் நிறுத்திவிட்டுச் செல்லும் மிதிவண்டியை மற்றொருவர் தாராளமாக எடுத்து பயன்படுத்தலாம். இந்த மிதிவண்டிகள் கூகுளின் வில்லையில் (Logo) உள்ள எழுத்துக்களின் வண்ணங்களைக் கொண்டிருக்கும். இவை தவிர அந்த வளாகத்தில் ஆண்ட்ராய்ட் வெர்சனுக்கு ஏற்ற சிலைகள், டைனோசர் உள்பட ஏராளமான சிலைகள் உள்ளன.  

கூகுளின் வில்லையில் சிவப்பு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களைக் கொண்டிருக்கும். அதிலும் மையத்தில் இடம்பெற்றுள்ள 'O' என்ற எழுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது தாங்கள் எப்போதும் விதிமுறைகளை மீறுபவர்கள் என்பதை குறிப்பதாகும். அதே போல இறுதியாக இடம்பெற்றுள்ள 'e' வழக்கத்துக்கு மாறாக சற்று மேல்நோக்கி இருக்கும். இது  மாற்றாக சிந்திப்பது மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் Don't be evil என்ற வாக்கியம் தான் கூகுளின் நீண்டநாள் டேக்லைனாக இருந்து வந்தது. பின்னர் அதை Do the right thing என மாற்றியுள்ளனர். 

லேரி பேஜ் (Larry page), சேர்ஜி பிரின் (Sergey brin) இருவரும் ஒரு வீட்டின் கார் ஷெட்டில் தான் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் சூசன் வோஜ்சிகி (Susan Wojcicki) என்ற பெண்மணி. இவர் தான் யூடியூபின் தலைமை செயல் அதிகாரி. பயனாளர்களை மகிழ்விக்க பல்வேறு யுக்திகளை கையாளும் கூகுள், கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள்கள் தினத்தில் அறிமுகப்படுத்திய சேவை தான் ஜிமெயில். அந்த சமயத்தில் மின்னஞ்சல் பயன்பாட்டாளர் ஒருவருக்கு 2 எம்பி மட்டும் தான் மற்ற நிறுவனங்கள் கொடுத்து வந்தது. ஆனால் ஜிமெயில் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு பயன்பாட்டாளருக்கும் 1 ஜிபி கொடுத்தது. தற்போது 15 ஜிபி கொடுக்கப்படுகிறது. இந்த ஜிமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தில் கூகுள் நிறுவனத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றவர் தான் கூகுளின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. கூகுள் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் நிதி உதவி அளிப்பதோடு தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறது. அதில் மரணத்தை வெல்ல, மரணமே இல்லாத மனிதனை உருவாக்கும் ஆய்வு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

இது சாத்தியமோ, இல்லையோ கூகுளின் செயலிழப்பால் இயந்திரமயமாகி விட்ட நவீன உலகில் கணினிமயமாக்கப்பட்ட மனித மூளைகள் சில மணித்துளிகள் செயல்பாட்டை இழந்ததை உணர முடிந்தது. இதுபோல பல அளப்பறிய சாதனைகளை கூகுள் கொண்டிருந்தாலும்,  அவை செயல்படாத போது,  மாற்றை பயன்படுத்த தெரிந்திருந்த மனித மூளை இன்று வரை சர்வ வல்லமை படைத்த கூகுள் ஆண்டவருக்கு சவாலாகவே இருந்து வருவதில் வியப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com