இயற்கை விவசாயத்தை இயக்கமாக மாற்றிய நம்மாழ்வார்

தமிழகத்தில் இன்று இயற்கை வேளாண்மை, நஞ்சற்ற உணவு என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்கான அத்தனை பெருமையும் நம்மாழ்வார் என்ற ஒற்றைப் பெயருக்கே சென்றடையும்.
கடைசி விழாவில் நம்மாழ்வார்: மேடையில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், வெ. வீரசேனன், நம்மாழ்வார், டாக்டர் வெ. ஜீவானந்தம்
கடைசி விழாவில் நம்மாழ்வார்: மேடையில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், வெ. வீரசேனன், நம்மாழ்வார், டாக்டர் வெ. ஜீவானந்தம்

இயற்கை வேளாண்மையைத் தமிழகத்தில் இயக்கமாக மாற்றியவர் வேளாண் அறிஞர் நம்மாழ்வார்.

தமிழகத்தில் இன்று இயற்கை வேளாண்மை, நஞ்சற்ற உணவு என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்கான அத்தனை பெருமையும் நம்மாழ்வார் என்ற ஒற்றைச் சொல்லையே சென்றடையும்.

1998 பிப்ரவரி மாதமாக இருக்க வேண்டும். சபரிமலைக் காடுகளில் விழிப்புணர்வின்மை காரணமாக பக்தர்கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளால் நேரிடும் சூழல் அபாயம் பற்றி அறிவதற்காக ஆய்வுப் பயணத்தைத் திட்டமிட்டு நடத்தினார் தமிழக பசுமை இயக்கத்தின் தலைவரான டாக்டர் வெ. ஜீவானந்தம்.

வண்டிப்பெரியாறிலிருந்து மலை -  வனப் பாதையில் இறங்குமுகமாக சபரிமலைக்குச் செல்லத் திட்டம். இடைவழியில் பெருவனத்தின் நடுவிலுள்ள வனத் துறைக் கட்டடத்தில் இரா தங்கல்.

அந்த இரவில்தான் வந்துசேர்ந்தார் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார். முதல் சந்திப்பு. அந்த ஆய்வுப் பயணத்திற்கு வந்திருந்த அனைவரும் சூழ்ந்திருக்க நள்ளிரவைத் தாண்டியும் உரையாடிக் கொண்டிருந்தார் அவர். எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் கிடைக்க முடியாத விஷயங்கள். புதிய திறப்புகள். இயற்கை விவசாயம் பற்றி பேசத் தொடங்கிய காலம். பின்னால் வாய்த்தபோதெல்லாம் சந்திப்பு.

இயற்கை வேளாண்மை வழியில் தமிழகத்தின் பல இடங்களில் மாதிரிப் பண்ணைகளை உருவாக்கித் தந்துகொண்டிருந்த நம்மாழ்வார், 2000-ல் மாவட்ட அளவிலும் விழிப்புணர்வு வேலைகளைத் தொடங்கினார்.

2002-ல் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் தொடங்கி, கொடுமுடி வரையிலும் சுமார் 500 கி.மீ. தொலைவு விழிப்புணர்வுப் பயணம். ஒவ்வொரு நாளும் 20 கி.மீ. நடை, மக்களுடன் மக்களாக மக்களுக்காக.

நம்மாழ்வாருக்கு ஈரோடு மாவட்டத்தின் மீது கடைசி வரையிலும்கூட சற்றுக் கூடுதலான ஆர்வமும் பற்றும் இருந்தது.

பிற்காலத்தில் ஒரு நேர்காணலில் கூறுகிறார்:

"ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிகவும் சிறப்புமிக்கவர்கள். அவர்களிடம் நான்கு தனிக் குணங்கள் இருக்கின்றன.

1. கோவைக்கு அருகில் இருப்பதால் விரைவிலேயே பச்சைப் புரட்சியை மேற்கொண்டு களைத்துவிட்டவர்கள்.

2. பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே விவசாயத்தின், விவசாயிகளின் மீது அக்கறையும் கவலையும் கொண்டவர்கள்.

3. விவசாயத்தில் புதுமை என்று எங்கேனும் கேள்விப்பட்டால் ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கே செல்வார்கள். பார்ப்பார்கள், வந்து நடைமுறைப்படுத்தியும் விடுவார்கள்.

4. வெற்றிகரமாக இருந்தால் முதல் வேலையாக அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்துப் பரப்பியும் விடுவார்கள்.

எனவேதான் இயற்கை வேளாண்மையில் முன்னணியில் இருக்கிறது ஈரோடு மாவட்டம்."

என்றாவதொரு நாள் வேறு வழியே இல்லாமல் இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் - மக்கள் தள்ளப்படுவார்கள் என்று பெரிதாக நம்பினார் நம்மாழ்வார். அவர் கூறுகிறார்:

"இயற்கை விவசாயம் வெற்றி பெற யாரும் காரணமில்லை. எதிரிகள் கடுமையாக வேலை செய்கிறார்கள், உண்பவர்களை நோயாளிகளாக்குகிறார்கள், பூமியை நஞ்சாக்குகிறார்கள். எனவே, இயற்கை விவசாயத்தைக் கவ்விப் பிடிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டிருக்கிறது.

"இந்தியா முழுவதும் ஓராண்டில் பூமியில் ஒரு லட்சம் டன் நஞ்சு  கொட்டப்படுகிறது. ஒருவேளை இந்த அளவு சற்று கூடக்குறைய இருக்கலாம்.

"வணிகப் பயிர்களில்தான் மிக அதிக அளவில் ரசாயன உரம் என்ற பெயரில் நஞ்சு கொட்டப்படுகிறது. மஞ்சள், வாழை போன்றவற்றில் நிலத்தைத் தயார் செய்யும்போதே சில ரசாயனங்களைக் கொட்டுகிறார்கள். ஒரு பயிர்கூட விளையாமல் போய்விடக் கூடாது என்பதற்காகக் கவலைப்படுகிறார்கள்.

"நாட்டில் அடிப்பரப்பு, மேற்பரப்பு என அனைத்துத் தண்ணீரும் நஞ்சாக மாறிவிட்டது. எனவேதான், இவ்வளவு அதிகமாகப் புற்றுநோயாளிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணும் காலி, தண்ணீரும் காலி."

பசுமைப் புரட்சி, இயற்கை விவசாயம் ஆகியவை பற்றி மிக உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார் நம்மாழ்வார்.

"பசுமைப் புரட்சியினால் பயனடைந்தவர்கள் 100-க்கு 25 விவசாயிகள்தான். பலன் எல்லாருக்கும் போய்ச் சேரவில்லை என்றாலும் ஒட்டு விதைகளும் ரசாயனங்களும் எல்லாரையும் தொட்டுவிட்டன. பாரம்பரிய விதைகள் காணாமல்போய்விட்டன. நிலங்கள் அனைத்தையும் பசுமைப் புரட்சி பாழ்படுத்திவிட்டது. பணக்கார விவசாயி ஆழ்துளைக் கிணறு போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவிடுகிறான். ஏழை விவசாயிகளுக்கு நீர் கிடைப்பதில்லை."

தன்னுடைய இறுதிக் காலத்தில் மிக உடல் நலன் குன்றிப் போயிருந்தார் நம்மாழ்வார், வயிற்று வலி. ஆனால், எத்தனையோ வற்புறுத்தியும் கடைசி வரையிலும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். எத்தனை சொன்னாலும் கேட்க மறுக்கிறாரே என்பார் டாக்டர் ஜீவானந்தம்.

மக்களின் நல்வாழ்வுக்காகத் தன்னுடைய உடல் நலனையும் கருதாது இறுதிக் காலம் வரை உழைத்து இயற்கையுடன் கலந்தவர் அவர்.

2013 டிசம்பர் 30-ல் நம்மாழ்வார் மறைந்தார்.

முந்தைய நாள், டிச. 29-ல் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம் (நினைவு நாளில்) எழுதிய 'நீரின்றி அமையாது நிலவளம்' என்ற நூல் வெளியீட்டு விழா. நூலை நம்மாழ்வார் வெளியிட டாக்டர் ஜீவானந்தம் பெற்றுக்கொண்டார்.

உடல் நலம் மிகவும் குன்றியிருந்த நிலையில் அவர் வருவாரா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால், விழா தொடங்கவிருந்த நேரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். நடக்கவே முடியவில்லை. கைத்தாங்கலாகத்தான் அழைத்து வந்தனர். சந்தித்து நீண்ட காலமாகிவிட்டது. அருகே சென்று ஐயா, நல்லாயிருக்கிறீர்களா என்றால் கேட்டால் கேலி செய்வதைப் போலதான் இருக்கும்.

மேடையேற்ற வேண்டாம், அனைவரும் இறங்கிவர கீழேயே புத்தகத்தை வெளியிட்டுவிடலாம் என்றபோது மறுத்துவிட்டு நம்மாழ்வார் மேடையேறினார். நூலை வெளியிட்டு முழு நேரமும் மேடையில் அமர்ந்திருந்த அவர் மூச்சிரைக்க, மூச்சிரைக்கத்தான் பேசினார். முடியவில்லை.

விழாவில் அனைவருடைய பேச்சும் சிறுசிறு பகுதிகள் (பைட்ஸ் என்பார்கள்) தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டன. நம்மாழ்வார் பேச்சின் சில பகுதிகள் பதிவு செய்யப்பட்டன. புதிய ஒளிப்பதிவாளர். சுமாராகத்தான் இருந்தது. முழுமையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். இயற்கை ஏமாற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மறு நாள், டிச. 30-ல் அவர் பங்கேற்ற விழாச் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே, பெருந்துயராக அவருடைய மறைவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தின் முன்னத்தி ஏர் நம்மாழ்வார். ரசாயனம் கலக்காத மாற்று விவசாயத்தைத்  தமிழகத்தில் பரவலாக்கியவர், பஞ்சகவ்யம், மண்புழு உரம் மற்றும் மக்கிய குப்பை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் விவசாயம் செய்து விவசாயிகள் நேரடியாக அதிக லாபம் அடைய முடியும் என்று நம்பினார், வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் காட்டினார்.

வேம்புக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடியபோது அங்கேயே சென்று எதிர்த்துக் களமாடி வெற்றி பெற்றவர் நம்மாழ்வார். பெரும்பாலான விதைகளின் காப்புரிமைகள் நம்மைவிட்டுச் சென்றுவிடாமல் காத்தவர் அவர்.

கடைசிக் காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எதிர்ப்பு போராட்டங்களில் மக்களுடன் மக்களாக நின்றார்.

அவருடைய நினைவாக கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் இன்றிருக்கிறது சுமார் 40 ஏக்கர் பரப்பில் அவர் உருவாக்கிய வானகம். இங்கிருந்தபடிதான் இயற்கை விவசாயத்துக்கான எண்ணற்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டார் நம்மாழ்வார். இறுதியில் அவரும் இங்கேயேதான் விதைக்கப்பட்டார்.

நம்மாழ்வாரின் இன்னமும் நிறைவேறாத ஆனால் நிறைவேற்றியே தீரவேண்டிய கனவான நஞ்சற்ற, இயற்கை விவசாயம். மருந்தில்லா நல வாழ்வு என்ற இலக்கை நோக்கிய பயணத்தைத் தொய்வின்றித் தொடருவதே சிறப்பான அஞ்சலியாக இருக்கும்.

டிச. 30 - இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் நினைவு நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com