ஆபாசம் என்றிருந்த பரதத்தை அற்புதமாக்கிய ருக்மணி அருண்டேல்

புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரான ருக்மணி தேவி அருண்டேல், பரதத்தை உலக அரங்கில் பெரும் புகழ் பெறச் செய்தார் என்றால் மிகையில்லை.
ஆபாசம் என்றிருந்த பரதத்தை அற்புதமாக்கிய ருக்மணி அருண்டேல்


புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரான ருக்மணி தேவி அருண்டேல், பரதத்தை உலக அரங்கில் பெரும் புகழ் பெறச் செய்தார் என்றால் மிகையில்லை.

குறிப்பிட்ட வகுப்பினரே பரதம் கற்பார்கள், மற்றவர்கள் கற்பது என்பது தகுதிக் குறைவு என்று கருதப்பட்ட காலத்தில், தானே பரதம் கற்றுத் தமிழகமே கற்கச் செய்தவர் ருக்மணி தேவி.

1904 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி, மதுரையில் நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ருக்மணி தேவி. இவருடைய தந்தை சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல, பொறியாளரும்கூட.

பழைய சம்பிரதாயங்களை இறுக்கமாகப் பின்பற்றி வந்த பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், பின்னாளில் புரட்சிப் பெண்ணாக மாறி, சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரம்மஞானியும் சிறந்த கல்வியறிஞருமான ஜி.எஸ். அருண்டேலைத் திருமணம் புரிந்துகொண்டார்.

1927 ஆம் ஆண்டில் தன் கணவர் அருண்டேலுடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த ருக்மணி தேவி, புகழ்பெற்ற ரஷிய நாட்டியக் கலைஞரான அன்னா பாவ்லோவைச் சந்தித்தார்.

ருக்மணியின் நாட்டிய ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக இருந்தவர் அன்னா பாவ்லோ. பாவ்லோவின் நாட்டியக் குழுவில் இணைந்து பாலே நடனத்தைக் கற்றார் அவர். அவருடைய நடன ஆர்வம் பரதத்தை நோக்கியும் திரும்பியது. நாடு திரும்பியதும் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரத்திடம் பரதநாட்டியம் பயின்றார் ருக்மணி தேவி. அந்தக் காலத்தில் பரத நாட்டியத்தைப் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயில்வதும் ஆடுவதும் நினைத்தும் பார்க்க முடியாததாக இருந்தது.

அவர் நாட்டியம் கற்பதை அனைவரும் எதிர்த்தனர். தான் மிகவும் ரகசியமாகத்தான் பரதத்தைக் கற்றுக்கொண்டதாகவும் தன்னுடைய நாட்டிய ஆர்வத்துக்குக் கணவர் அருண்டேலைத் தவிர அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் அவரே பின்னாளில் தெரிவித்துள்ளார்.

ருக்மணி தேவி அருண்டேலின் நாட்டிய அரங்கேற்றம், அடையாறு ஆலமரத்தின் கீழ் பிரம்மஞான சபையின் வைரவிழாவின்போது, 1935-ல், நடைபெற்றது.

அந்தக் காலத்தில் பரதத்தை ஆபாசக் கலையாகக் கருதியவர்களிடம் அவர், நீங்கள் ஒரு முறை வந்து இந்த நாட்டியத்தைப் பாருங்கள், ஆபாசமாகத் தோன்றினால் மீண்டும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அங்கே வந்து அவருடைய நாட்டியத்தைப் பார்த்தவர்கள், பின்னால் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டனர்.

கலைத் தாகத்தைத் தீர்க்கும் வகையிலும் கற்கவும் கற்பிக்கவுமாக, 1936-ல் சென்னை கலாக்ஷேத்ராவைத் தொடங்கினார் ருக்மணி. தென்னிந்திய சாந்தி நிகேதன் எனப் புகழ்பெற்று விளங்கிய கலாக்ஷேத்ரா, அடையாறு பிரம்மஞான சபையிலுள்ள ஆலமரத்தின் கீழ்தான் ஒரேஒரு மாணவருடன் தொடங்கப்பட்டது.

கலாக்ஷேத்ராவில் நாட்டியப் பள்ளியை ருக்மணி தேவி தொடங்கியபோது இருந்த ஒரே மாணவி, பிற்காலத்தில் கலாக்ஷேத்ராவின் தலைவராகப் பணியாற்றிய ராதா பர்னியர். இங்கே பயின்றவர்கள்தான் யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஒடிசி நாட்டிய தாரகை சஞ்சுக்தா பாணிக்கிரகி ஆகியோர்.

கலாக்ஷேத்ராவில் சங்கீத சிரோமணி பயிற்சி வகுப்பை ருக்மணி அருண்டேல் தொடங்கியபோது, புகழ்பெற்ற இசைவாணர் டைகர் வரதாச்சாரியார்தான் முதல்வர்.

ருக்மணி தேவியின் கலாக்ஷேத்ராவுடன் இணைந்து பணியாற்றிய கலை மேதைகளில் டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சாரியார், வீணை கிருஷ்ணமாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ அய்யர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களைத் தயாரித்து, இயக்கி அரங்கேற்றியவர் ருக்மணி தேவி.

1952-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் ருக்மணி தேவி. கலைப்பணி, நாட்டியப் பணிக்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்ற அவர், வாராணசி ஹிந்துப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் காளிதாச விருதும் பெற்றார்.

விலங்குகளின்பால் பேரன்பு கொண்டவராக விளங்கிய ருக்மணி, நாட்டின் வனவிலங்குப் பாதுகாப்புத் துறைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவையில் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யக் காரணமாக இருந்தார், பின்னால் அரசே சட்டம் இயற்ற முன்வந்ததும் முன்வரைவைத் திரும்பப் பெற்றுக் கொணடார்.

விலங்குகளின் நலனில் அக்கறை கொண்ட அவருடைய சேவைக்காக ருக்மணிக்கு விக்டோரியா மகாராணி வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. ருக்மணியின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று - நான் விலங்குகளின் தோழி, என் நண்பர்களை எப்போதும் நான் சாப்பிடுவதில்லை.

பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ருக்மணி தேவி, எண்ணற்ற உலக அமைப்புகளில் இடம் பெற்றிருக்கிறார். 1937 ஆம் ஆண்டில் நெதர்லாந்திலிலுள்ள பன்னாட்டு பிரம்மஞான சபையின் (தியாசபிகல் சொசைட்டி) உறுப்பினரான அவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பொறுப்பை வகித்தார்.

1977 ஆம் ஆண்டில் மத்தியில் அரசு அமைத்து பிரதமராகப் பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய், ருக்மணி தேவியை நாட்டின் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அந்த அரிய வாய்ப்பை ருக்மணி மறுத்துவிட்டார். அவ்வாறு பதவியேற்றிருந்தால் குடியரசுத் தலைவரான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

அடையாற்றில் பிரம்மஞான சபையில் அவருடன் பணியாற்றிய தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி மறைந்த ஒரு வாரத்தில் - பிப்ரவரி 24, 1986 - ருக்மணி தேவி அருண்டேலும் மறைந்தார்.

ருக்மணி தேவியின் மறைவின்போது ஆளுநர் எஸ்.எல். குரானா, முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் எல்லாம் நேரில் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரான மொரார்ஜி தம் இரங்கற் குறிப்பில், தாம் ருக்மணி தேவியைக் குடியரசுத் தலைவராக்க விரும்பியதை நினைவுகூர்ந்தார்.

காலம் முழுவதும் பரதத்தின் அசைவுகள் ஒவ்வொன்றும் அறிந்தோ அறியாமலோ ருக்மணி தேவி அருண்டேலின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்; ஏனெனில் ருக்மணி தேவி இல்லாவிட்டால் இன்று பரதம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com