சாதனைகள் பலபுரிந்த தமிழின் முதல் பெண் பதிப்பாளர்

55 வருடங்களுக்கு முன்னாலேயே தரமான புத்தக உருவாக்கம், அதற்கேற்ப வித்தியாசமான புத்தக முயற்சிகள், என ஒரு பெண் தமிழ் பதிப்புத்துறை முன்னோடியாக இருந்துள்ளார். அவர்தான் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி!
சாதனைகள் பலபுரிந்த தமிழின் முதல் பெண் பதிப்பாளர்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பல்வேறு துறை சார்ந்தும் நமது கண்முன்னே தெரியும் வகையில் சாதனை படைத்த மகளிரைக் கண்டு பெருமிதம் அடைவதும், அவர்களுக்கு வாழ்த்துகள் கூறுவதும் இயல்பே! ஆனால், பல்வேறு துறைகளிலும் பிரம்மிக்கத்தக்க வகையில் சாதனை புரிந்த, தங்களுக்கென தனியானதொரு தடத்தை வலுவாகப் பதித்த பெண்களும் சமயத்தில் பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வராமலே இருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி ஒருவர்தான் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி!

இன்று வாசிப்புப் பழக்கம் நவீன கருவிகளின் துணையுடன் வெகுவாகவே வளர்ந்திருக்கிறது என்று நாம் உறுதியாகக் கூறலாம். அதேபோல் எத்தனை வசதிகள் வந்தாலும் அச்சுப்புத்தகங்களுக்கான வாசகர்கள் என்பவர்களும் முற்றாகக் குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் சென்னை புத்தக காட்சி அதற்கோர் வலுவான சான்று!

பதிப்பகத்துறையை எடுத்துக் கொண்டாலும், வாசிப்பிற்கு என நவீன கருவிகளின் வருகையைப் போலவே, அச்சுத்துறையிலும் இப்போதுள்ள நவயுக வசதிகளைப் பயன்படுத்தி தரமான முறையில் நம்மால் புத்தகங்களை வெகு சிறப்பாக உருவாக்க இயலும். ஆனால் அதற்கான விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் எழுத்தாளருக்கு உரிய முறையில் காப்புரிமைத் தொகை வழங்குதல் எனப் பல்வேறு சிக்கல்களை பதிப்பகத்துறை சந்தித்து வருகிறது. ஆனால் 55 வருடங்களுக்கு முன்னாலேயே தரமான புத்தக உருவாக்கம், அதற்கேற்ப வித்தியாசமான புத்தக முயற்சிகள், வாசகர்களுக்கான சகாய விலை மற்றும் எழுத்தாளர்களுக்கு சரியான நேரத்தில் உரிய வெகுமதி என ஒரு பெண் தமிழ் பதிப்புத்துறை முன்னோடியாக இருந்துள்ளார். அவர்தான் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி!!

தமிழ் பதிப்புத்துறையில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் தெரியாதவர்களுக்குக் கூட, "வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி" என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு 'வாசகர் வட்டம்' என்ற தரமான இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பல நல்ல புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் நூல் வாசிப்பு வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர் இவர்.

லட்சுமிவிடுதலைப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவருமான 'தீரர்' சத்தியமூர்த்தி தம்பதியினருக்கு மகளாக 1925, ஜூலையில் பிறந்தார். சத்தியமூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே தன் மகளை ஒரு ஆணுக்குரிய போர்க்குணத்தோடும் வளர்த்தார். அதற்கேற்ப லஷ்மிக்கு வீணை வாசிப்பு,  குதிரையேற்றமம், ஓவியம், இசை என பல்துறையிலும்  நாட்டமும் புலமையும் இருந்தது. ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தந்தை சத்தியமூர்த்தியினால் அன்பளிப்பாகத் தரப்படும் நூல்கள்தான் அவரது இலக்கிய தாகத்துக்கு வித்திட்டது. என உறுதியாக கூறலாம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி என பிறமொழி இலக்கியங்களையும் லட்சுமிதேடித்தேடி வாசித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைசென்ற தீரர் சத்தியமூர்த்தி உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார். பின்னர் லட்சுமி தந்தை நிச்சயித்த கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை மணம் செய்து கொண்டு கணவருடன் கேரளத்துக்குச் சென்றார். அங்கும் அவரது சமூகப் பணி தொடர்ந்தது. தமது இல்லத்திலேயே பெண்களுக்கான இலவச மருத்துவமனை ஒன்றைத் துவங்கி நடத்தினார். தவிர பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார். பின் காங்கிரஸ் தலைவர்கள் சிலரது வேண்டிகோளின்படி தமிழகம் வந்தார்.

இங்கு 1964 மற்றும் 1970-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரானார். தந்தை சத்தியமூர்த்தி எப்படி ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக இருந்து போராடினாரோ அவ்வாறே லட்சுமி கிருஷ்ணமூர்த்தியும், இந்தியாவில் 1975-ல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது காங்கிரசில் இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடினார். பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறி 1977ல் ஜனதா கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதிலிருந்து அரசியலிலிருந்து முற்றாக ஒதுங்கி, தீவிர சமூக மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

ஆனால் லட்சுமிமுன்னரே கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து என பிரபல இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதியவர். இவர் எழுதிய 'ஐந்தாவது சுதந்திரம்' என்ற கட்டுரைத் தொகுப்பானது, தமிழக பபதிப்புத்துறை முன்னோடிகளில் ஒருவரான 'சக்தி'  வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டுள்ளது. லட்சுமியின் கணவரான கிருஷ்ணமூர்த்தியும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் கே.எம். பணிக்கரின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இப்படியாக வாசிப்பு பின்புலம் மற்றும் எழுத்தார்வம் கொண்ட இத்தம்பதி 1964-65 காலகட்டத்தில் 'வாசகர் வட்டம்' என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கினர். நல்ல புதிய எழுத்தாளர்களின் நூல்களை தரமான முறையில் வெளியிட்டு வாசகர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கமாக இருந்தது. அதற்காக 'புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகத்தை இருவரும் துவக்கினர்.

ஆரம்பத்திலேயே அதிரடியாக தனிப்பட்ட சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்குச் பதிப்பக வெளியீடுகள் சலுகை விலையில்  வழங்கப்பட்டன. அப்படியாக வாசகர் வட்டம் வெளியிட்ட முதல் நால் மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'சோக்ரதர்: ஆத்ம சிந்தனைகள்' என்னும் நூல். அது 1965ல் வெளியானது. ராஜாஜியே அதை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தர பைண்டிங் முறை, தனித்துவமான முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் ஒரு தனித்த முன்மாதிரியாக விளங்கின. முதல் நூலில் ஓவியர்  'கலாசாகரம்' ராஜகோபாலின் கோட்டோவியம் அட்டையில் இடம்பெற்றது.  பின்னர் ஓர் அடையாளமாக அதுவே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. லட்சுமி தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாக வெளியிடுவதைத் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார்.

அந்தவகையில் தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', எம்.வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ', ஆ. மாதவனின் 'புனலும் மணலும்', நீல. பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்', லா.ச. ராவின் 'அபிதா' போன்ற காலத்தால் அழியாத நூல்கள் எல்லாம் வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பெற்றன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் லஷ்மிதான் உதவியாக இருந்தார்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட படைப்புகளில்  நரசய்யாவின் 'கடலோடி', சா. கந்தசாமியின் 'சாயாவனம்' மாதவனின் 'புனலும் மணலும்' . ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான 'குயிலின் சுருதி' ஆகியவையெல்லாம் வாசகர் வட்டம் மூலம் வெளியானதே!

அத்துடன் லா.ச.ராவின் 'புத்ர' நாவல், கிருத்திகாவின் 'நேற்றிருந்தோம்', நா. பார்த்தசாரதியின் 'ஆத்மாவின் ராகங்கள்', கி.ரா.வின் 'கோபல்ல கிராமம்', க.சுப்பிரமணியனின் 'வேரும் விழுதும்', ஆர். சண்முக சுந்தரத்தின் 'மாயத்தாகம்' போன்ற சிறப்பான படைப்புகளும் வாசகர் வட்டம் மூலம் வெளியாகிப் புகழ் பெற்றவையே.

வாசகர் வட்டத்தின் முக்கியமானதொரு வெளியீடு 'நடந்தாய்; வாழி, காவேரி' என்னும் கட்டுரை நூலாகும். காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது அந்நூல். எழுத்தாளர் ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் அந்தந்த இடங்களுக்கே நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்ட அது அற்புதமான நூலாக உருவானது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக 'பிளாக்' செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அது ஓர் சமூக, வரலாற்று ஆவணம் என்றால் மிகையில்லை.

நூல்களை பதுப்பிப்பதோடு நின்றுவிடாமல் தன் இல்லத்தில் எழுத்தாளர்களை வரழைத்து வாசகர்-எழுத்தாளர் சந்திப்புக்களையும் நடத்தினார். 'புக் கிளப்' என்ற கருத்தாக்கத்தை தமிழில் நனவாக்கிய முன்னத்தி ஏர் லட்சுமி கிருஷ்ணமூர்த்திதான்.

புத்தகங்களோடு நில்லாமல் லட்சுமி 'வாசகர் செய்தி' என்ற செய்தி மடல் ஒன்றையும் நடத்தினார். 'நூலகம்' என்ற நூலகங்களுக்கான மாத இதழையும் வெளியிட்டார்.

இலக்கியம் தவிர, தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை சார்ந்த நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. மிக முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர் வட்டத்தின் மற்றொரு அடையாளம். 

அந்தவரிசையில் லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் 'அறிவின் அறுவடை' என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தமிழர் பண்பாடும் வரலாறும்' சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது.  'எட்வின் கண்ட பழங்குடிகள்' எனும் நூல் மனித இன வரைவியல் நூலாகும்.

இவற்றுள் 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் இலங்கை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வாசகர் வட்டம் வெளியிடப்பட்ட தொகுப்பு நூல் முக்கியமானதொரு பதிவாகும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய 'காசளவில் ஓர் உலகம்' என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் வட்டம் மொத்தம் 45 நூல்களை வெளியிட்டுள்ளது. காலம் செல்லச் செல்ல சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர்  பதிப்புத்துறையிலிருந்து விலகிய லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து சமூகப் பணிகளில் அக்கறை காட்டினார்.

தமிழின் ஆரம்பகட்ட எழுத்தாளர்களில் ஒருவரான வை.மு.கோதைநாயகி அம்மாள் கூட தன்னுடைய புத்தகங்களை தானே பதிப்பித்து பதிப்புத்துறையில் செயல்பட்டார். ஆனால் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பிறரது நூல்களைத் தயாரித்து, வெளியிட்டு, விற்பனை செய்ததனால், தமிழின் முதல் பெண் பதிப்பாளராகவே வரலாற்றில் கருதப்படுகிறார்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தமது 83ம் வயதில் ஜூன் 12, 2009 அன்று சென்னையில் காலமானார். தாய்நாட்டு விடுதலை, இலக்கிய வளர்ச்சி உள்ளிட்ட தனது ஆத்ம விருப்பங்களுக்காக அயராது பாடுபட்ட இந்த ஆளுமையை, இந்த மகளிர் தினத்தில் நெஞ்சில் நிறுத்திப் போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com