தையலை உயர்வு செய்!

பெண்களைப் போற்றுகின்ற நாடே இந்த மண்ணுலகில் பெரிதும் உயர்வடைந்திருக்கிறது என்பதை அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இன்றல்ல, நேற்றல்ல, காலந்தோறும் பெண்மையும் பெண்மக்களும் போற்றி புகழப்பட்டு வருகின்றன. 
தையலை உயர்வு செய்!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் இவ்வுலகில் "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்றும், பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ, இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா!” என்கிறார். அதோடு நின்றுவிடவில்லை கவிமணி, அவர் சொல்கிறார் “அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? உள்ளத்து அன்பு ததும்பி யெழுபவர் ஆர்? கல்லும் கனியக் கசிந்துருகித் தெய்வ கற்பனை வேண்டி தொழுபவர் ஆர்?” இப்படிப் பெண்மையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

பெண்களைப் போற்றுகின்ற நாடே இந்த மண்ணுலகில் பெரிதும் உயர்வடைந்திருக்கிறது என்பதை அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இன்றல்ல, நேற்றல்ல, காலந்தோறும் பெண்மையும் பெண்மக்களும் போற்றி புகழப்பட்டு, ஏன் வணங்கப்பட்டு வந்திருப்பதற்கு ஏராளமான நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு.  புராண காலத்தை எடுத்துக் கொண்டால் நடந்த தீமைகளுக்காக அனைத்தையும் அழித்த பாஞ்சாலி, கணவன் கள்வனென்று கருதித்  தவறாகக் கொலை செய்யப்பட்டுவிட்ட செய்தியறிந்து மதுரைக்கு  எரியூட்டிய கண்ணகி, நளாயினி, சாவித்திரி, மண்டோதரி, சீதாப்பிராட்டி என்று இந்தப் பட்டியல் அதிகம்.

தமிழ் இலக்கியங்களில் கண்ணகியும், மணிமேகலையும் உலகம் வாழத் தங்கள் சக்திகளையெல்லாம் திரட்டிப் பாடுபட்ட வரலாறுகளைக் காண்கிறோம். நம் நாடு அன்னியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில்தான், நம் பெண்கள் கல்வி கற்பதை மறந்திருந்தார்களேனும் அதற்கு முந்திய காலங்களில், குறிப்பாக சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் ஒளவை, பாரிமகளிர், வெண்ணிக்குயத்தியார், காக்கைப் பாடினியார்,  நச்செள்ளையார் என்றெல்லாம் பெண்பாற் புலவர்கள் கவி பாடிய கதைகளை நாம் படிக்கவில்லையா?

பக்தி இலக்கியங்களில் சைவம் துறந்து சமணராகி வழிதவறிப் போன தம்பியை திசைமாற்றிக் கொணர்ந்து சிவனடியாராக மாற்றிய திலகவதியார், கணவரின் நோய் தீர்க்க ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்துக் கூன் பாண்டியனைக் குணமாக்கிய மங்கையர்க்கரசியார்,  பிள்ளைக்கறி சமைத்து இறைவனருள் பெற்ற சிறுத்தொண்டரின் இல்லத்தரசியார் ஆகியோரை இன்றளவும் நாம் பாராட்டவில்லையா?

நூற்றெழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய சிப்பாய்களை எதிர்த்து, போர்க்களத்தில் உயிர்த்தியாகம் புரிந்த ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அவர்களை நாம் மறந்து விட முடியுமா?

இவற்றிற்கெல்லாம் மேலாக திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கைலைக் காட்சியருளி திருவையாற்றில் ஆட்கொண்டபோது, அவர் பாடிய “மாதர் பிறைக் கண்ணியானை” எனும் தேவாரப் பாடலில் “கண்டேன், கண்டறியாதன கண்டேன்” என்கிறாரே, அந்த கண்டறியாதன காட்சிகள் எவை?  இவ்வுலகத்தின் படைப்பில் இறைவன் உயிர்களை ஆணும் பெண்ணுமாக சரிசமமாகப் படைத்திருக்கிறான். அத்துணை உயிர்களும் ஆண், பெண் என்ற சரி விகிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் விந்தையை, அதிசயத்தை பற்பல உயிர்களும் பேடையும் தானுமாய் இருப்பதை, நான் இப்போதுதான் கண்டேன், இதுவரை கண்டறியாதனவற்றை கண்டு உணர்ந்தேன் என்கிறார் திருநாவுக்கரசர்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றி பெண்மையை உயர்த்திப் பிடித்தப் பல பாவலருள் முன்னோடியாகத் திகழ்பவர் மகாகவி பாரதி. ‘பெண்ணுக்குக் கண் கல்வி’ என்றார், ‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்றார், ‘ஆண்களோடு பெண்களும் சரிசமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’ என்றார், இவை அனைத்தும் பெண்களை உயர்வு செய்வதற்கே. அதனால் தான் அவர் எழுதிய புதிய ஆத்திசூடியில் “தையலை உயர்வு செய்” என்றொரு வரியையும் எழுதி வைத்தார்.

பெண்களை பெருமைப்படுத்தவும், சமுதாயத்தில் பெண்களின் பெருமை, உயர்வு இவற்றை எடுத்துக்காட்டவும் பற்பல பெண்கள் இங்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் இங்கு நினைவு கூறமுடியாமல் போனாலும் ஓரிருவர் பற்றிய செய்திகளை, அவர்களுக்கு இடையூறாக இந்த சமூகத்தில் இருந்த தடைக்கற்களை உடைத்தெறிந்து அவர்கள் முன்னேறி, தாங்கள் எவருக்கும் இளைத்தவரில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றிய வரலாற்றுச் சுவடுகளைச் சற்று இங்கு பார்க்கலாம். அத்தகைய பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,  அடுத்து ருக்மிணி தேவி அருண்டேல் ஆகியோரைப் பற்றிய சில செய்திகளை இங்கே பார்க்கலாம்.

முதலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் ஒருசில சமஸ்தான மன்னர்களும் இங்கே ஆட்சியில் இருந்தார்கள். அப்படிப்பட்ட சமஸ்தானங்களில் தமிழகத்தில் இருந்த புதுக்கோட்டை முக்கியமானது. இங்கு மன்னராக இருந்த ராஜகோபால தொண்டைமான் காலத்தில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது மத்திய அரசில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் இந்திய சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய அரசுடன் தங்கள் ராஜ்யங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென்கிற ஆணையைப் பிறப்பித்தவுடன், முதன் முதலாக டெல்லி சென்று தன் ராஜ்யத்தை ஒப்புவித்த, கெளரவமிக்க, மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுகிற மன்னர் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்கள்தான். ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகளில் இல்லாத அளவுக்கு புதுக்கோட்டையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி அரண்மனையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

புதுக்கோட்டை மன்னர்களின் குல தெய்வம் பழைய அரண்மனை அருகிலுள்ள சாந்தாரம்மன் எனும் பெண் தெய்வம். நவராத்திரி நாட்களில் அரண்மனையில் கொலு பார்க்க வரும் பெண்களுக்கு ‘அம்மன் காசு’ எனும் பொற்காசு வழங்கி கெளரவிக்கும் வழக்கமும் அரண்மனையில் இருந்து வந்தது. அப்படிப்பட்ட பெண்மையைப் போற்றும் சமஸ்தானத்தில் புதுக்கோட்டையின் ஒரு பகுதியான திருக்கோகர்ணம் எனுமிடத்தில் 1886 ஆம் ஆண்டில் பிறந்தவர்தான் முத்துலட்சுமி. பிறப்பால்  அந்தணரான வழக்கறிஞர் நாராயணசாமி  என்பவருக்கும், இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்த தாய் சந்திரம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார்.  

அந்த நாளைய வழக்கம் போல பொதுவாகப் பெண்களைப் படிக்கப் பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டார்கள். ஆனால் முத்துலட்சுமி பள்ளிக்குச் சென்று படித்தாள். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமிருந்தும் அவரை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க யோசனை செய்தார்கள். அப்போது புதுக்கோட்டை கல்லூரியில் பெண்களைச் சேர்ப்பது வழக்கமில்லை என்றாலும் அதில் சேர முத்துலட்சுமி முயற்சி எடுத்தார். இதெல்லாம் நடந்தது 1904இல். அந்தக் கால பழமைவாதிகள் அனுமதிப்பார்களா? செய்தி அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குச் சென்றது. அவர் ஆஸ்திரேலியா சென்று படித்தவர், அங்கு ஒரு ஆஸ்திரேலிய மாதைத் திருமணம் செய்து கொண்டு புரட்சி செய்தவர். அவருக்கு ‘சிட்னி தொண்டைமான்’ என்றொரு மகன் இருந்ததும், அந்த மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட அவர் முயன்றபோது அதை மற்றவர்கள் ஏற்காததால், இவர் தன் மன்னர் பதவியை உதறிவிட்டு இங்கிலாந்து சென்று தங்கி அங்கேயே இறந்தும் போனார் என்கிறது புதுக்கோட்டை வரலாறு.

அப்படிப்பட்ட முற்போக்கான மன்னரிடம் முத்துலட்சுமியின் கோரிக்கை போனபோது அவர் அந்தப் பெண்ணைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி அளித்தார். எனினும் முத்துலட்சுமியின் குடும்பத்தில் நேர்ந்த சில துயர நிகழ்வுகளால் மனம் வருந்தினாலும், தான் ஒரு மருத்துவராக ஆகவேண்டுமென்கிற ஆசையில் அவர் 1907இல் சென்னைக்குச் சென்று அங்கு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாகப் படித்துத் தேர்ந்தார். 1912 இல்அவர் மருத்துவராக ஆனது செய்தியல்ல, ஆனால் அவர் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்கிற பெருமையைப் பெற்றதுதான் சாதனை. சமூக அந்தஸ்து, கெளரவம், மருத்துவர் தொழில் இத்தனை இருக்கும்போது இவரைத் திருமணம் செய்துகொள்ளப் பலரும் விரும்புவது இயற்கைதானே. அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய பிரம்மஞான சபையில் டி.சுந்தர ரெட்டி என்பாருடன் இவருக்குத் 1914இல் திருமணம் நடைபெற்றது.

இவர் தன்னுடைய மருத்துவத் தொழிலுடன் தன் பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழிசை இயக்கத்திலும், தமிழாசிரியர்கள் இதர ஆசிரியர்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் பாடுபட்டார். பெண்களுக்கான ஒரு இதழ் அதன் பெயர் “ஸ்திரீ தர்மம்”, அதனையும் இவர் நடத்தினார்.

இவர் உண்பதும், உடுப்பதும், இனிதே வாழ்வதுமாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. அகில உலக பெண்கள் மாநாடு பாரிசில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். இந்தியப் பெண்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு பெண்கள் அமைப்பையும் நிறுவி தலைமை வகித்தவர். சென்னை நகரத்தின் மாநகராட்சி நிர்வாகத்தில் துணை மேயர் பதவியையும் வகித்தவர். அப்போதெல்லாம், இப்போது போல தொகுதிகளில் நின்று மக்களால் சட்டசபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. உள்ளாட்சித் துறை தொகுதியிலிருந்து இவர் சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி சட்டமன்றத்துக்குச் சென்ற முதல் பெண்மணியும் இவரே.

இவருடைய சட்டமன்ற சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை ‘தேவதாசி’ முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது, பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கும் சட்டம், குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை சமூகப் பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்ட சட்டங்கள். இவை தவிர அனாதைகளாகக் கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகம் “ஒளவை இல்லம்” எனும் பெயரில் தொடங்கியது, புற்றுநோய்க்கான மருத்துவமனை ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய அரிய சேவைகளைப் பாராட்டி 1956இல் இவருக்கு “பத்ம பூஷன்” விருது வழங்கி இந்திய அரசு இவரை கெளரவித்தது. இத்தகு பெருமைக்குரிய முத்துலட்சுமி ரெட்டி மாதருள் மாணிக்கமாக ஊர் உலகம் போற்ற வாழ்ந்து, 1968 ஜூலை 22இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

வரலாற்றில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்துவிட்டுச் சென்றிருக்கிற பல மணியான பெண்மணிகளில் இன்னொருவர் ருக்மிணி தேவி. ஆலயங்களில் சதிர் எனும் நடன நிகழ்ச்சிகளை நடத்தவும், கோயில் பணிகள் பலவற்றில் நிர்வாகத்துக்கு உதவிடவும், ஆராதனையின் போது கும்ப ஆரத்தி எடுக்கும் உரிமை பெற்றவர்களுமான ‘தேவதாசி’களுடைய உரிமை பறிக்கப்பட்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறிய சமயம், இவர்களால் ஒருசில நூற்றாண்டுகள் காப்பாற்றப்பட்டு, அதன் சிறப்பு குறையாமல் ஆலயங்களில் ஆடிவந்தது நின்று போன பிறகு அந்த சிவபெருமான் நடராஜப் பெருமான் ஆடிய ஆடற்கலை அழிந்து விடுமோ என்று ஐயுற்றிருந்த நேரத்தில் அந்தக் கலைக்குப் புத்துயிர் கொடுத்தவர்களில் ருக்மிணி தேவியும் ஒருவர். இன்னொருவர் பாலசரஸ்வதி என்பார். இவர்கள் மட்டும் முயற்சி எடுத்து “கலாக்ஷேத்ரா” எனும் அமைப்பை நிறுவி, இக்கலையை வளர்த்திராவிட்டால் இன்றைய பரதக் கலை என்னவாகியிருக்குமோ யார் அறிவார்? ருக்மிணி தேவிக்கு பல பெருமைகள் தேடிவந்த போதும், குறிப்பாக மொரார்ஜி தேசாய் காலத்தில் இவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தபோது மறுத்து விட்டவர் இவர். உலகில் சாதனைகள் புரிய ஆர்வமுள்ளோர் பதவிகளைத் தேடிப் போகமாட்டார்கள் என்பதற்கு இவரே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்.

ருக்மிணி மதுரையைச் சேர்ந்தவர். 1904ஆம் ஆண்டில் பிறந்த இவரது பெற்றோர்கள் நீலகண்ட சாஸ்திரி, தாய் சேஷம்மாள். இவர் தந்தைக்கு சென்னையில் இருந்த அன்னிபெசண்டின் தியாசபிகல் சொசைட்டியில் ஈடுபாடு இருந்தது. அதனால் அவர் அடையாறில் வீடுபிடித்துக் குடியேறினார். ருக்மிணிக்கும் தியாசபிகல் சொசைட்டி அவருடைய கலை ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்து வந்தது. அங்கு நடந்த ரவீந்திரநாத் தாகூரின் நாடகங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று நடித்தார். ருக்மிணிக்கு  இசையிலும், நடனத்திலும் இருக்கும் ஆர்வத்துக்கு அங்கிருந்த கலாக்ஷேத்ரா வடிகாலாக அமைந்தது. பல நிகழ்ச்சிகளில் இவர் பங்குகொள்ள கலாக்ஷேத்ராவே காரணம்.

அந்த காலகட்டத்தில் கலாக்ஷேத்ராவில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்திலிருந்து ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பார் சென்னைக்கு வந்து கலாக்ஷேத்ராவில் தங்கியிருந்தார். அப்படி அங்கு ருக்மிணியும் இவரும் பழகி வரும் காலத்தில் இருவருள்ளங்களிலும் காதல் உருவாகி, அன்னிபெசண்ட் அம்மையாரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டனர். அப்போது ருக்மிணியின் வயது 16.

என்னதான் முற்போக்கு எண்ணமும், காலத்துக்கேற்ப நடந்து கொள்வது என்று இருந்தாலும் சமூகம் எனும் அமைப்பு சிலவற்றை ஏற்றுக் கொள்ளவும்,  சிலவற்றை நிராகரிப்பதும் இயற்கை. அப்படித்தான் இந்த ருக்மிணி, அருண்டேல் திருமணமும் சர்ச்சைக்கு வழிவகுத்து, அது ருக்மிணியின் குடும்பத்தில் ஒரு பூமியதிர்ச்சியை உருவாக்கியது. இதுபோன்ற சில நிரந்தரமான செயல்பாடுகள் யாருடைய எதிர்ப்பாலோ அல்லது மனக் கசப்பாலோ நின்று போவதில்லை. கசப்புகளும், விரோதங்களும் மட்டுமே சில காலம் நிலவிக் கொண்டிருக்கும்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஐரோப்பா பயணம் மேற்கொண்டனர். அங்கு மேலும் பல ஐரோப்பிய கலைகளையும் கற்றுக் கொண்டார் ருக்மிணி. இந்தியாவுக்குத் திரும்பிய ருக்மிணி அருண்டேல் தம்பதியினருக்கு அங்கு ஒரு புதிய கலைக் கதவு திறக்கப்பட்டது. சென்னை மியூசிக் அகாதமியில் 1933ஆம் ஆண்டில் ஆலயங்களில் ஆடிவந்த “சதிர்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியைக் கண்ட பிறகு ருக்மிணிக்கு இந்த சதிர் ஆட்டத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பெருமை சிறப்பு இவற்றை அறிந்து அதனைக் கற்றுக் கொள்ள விரும்பி மயிலாப்பூர் கெளரி அம்மாள் என்பவரிடம் சென்று சேர்ந்தார். முதலில் அவரிடம் கற்றுக் கொண்ட பிறகு பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எனும் புகழ்பெற்ற நட்டுவனாரிடமும் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சதிர் ஆட்டத்தில் நன்கு பயிற்சி பெற்று தகுதியான பிறகு தனது குருவின் அனுக்கிரகத்தால் 1935இல் தியாசபிகல் சொசைட்டியின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் இவர் நாட்டிய அரங்கேற்றம் செய்தார். இவருடைய நடனம் ஆன்மீகத்தையும், கலையின் சிறப்பையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

சதிர் ஆட்டம் என்கிற இந்த அரிய கலையைத் தான் மட்டும் கற்றால் போதுமா இது மற்றவர்களும் கற்றுப் பயனடைய வேண்டுமென்கிற நோக்கத்தில் கலாக்ஷேத்ரா நடனப் பள்ளியைத் தோற்றுவித்தார். இசை, நாட்டியம் ஆகிய நளின கலைகள் இங்கே கற்றுத் தரப்பட்டன.

ஆலயங்களில் தேவதாசிகள் ஆடிக்கொண்டிருந்த காலத்தில் பொதுமக்கள் பெரிதும் அதனை ஆதரித்ததாகவோ, போற்றிப் புகழ்ந்து அதன் கலை நுணுக்கங்களைப் புரிந்து கொண்டதாகவோ சொல்ல முடியாது. ஆனால் ருக்மிணி போன்ற சிலர் அந்தக் கலையின் அருமை பெருமைகளை உணர்ந்து இது பெண்கள் மத்தியில் ஆடப்பட வேண்டும், அவர்கள் இதனை விரும்பி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு, அதுவரை சதிர், சதிராட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தக் கலையை, ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ஒரு மார்க்கமாக உருவாக்கி பக்தி உணர்வு மிக்கதாக இதனை மாற்றி ஆடவைத்தார். ஆலயங்களில் சதிர் ஆடப்பட்டு வந்தபோது அந்த மாதர்கள் அணிந்த உடை, அணிகலன் இவற்றை மாற்றியமைத்தார். ஆட்டத்துக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் சின்ன மேளக் கலைஞர்கள் நின்று கொண்டு வாசித்த நிலையை மாற்றி மேடையிட்டு அதில் அமர்ந்து கெளரவமாக வாசிக்கும் நிலைமையை உருவாக்கினார். சதிர் கலையை,  நடனக் கலையாக மாற்றி அதற்குரிய கெளரவத்தையும், மரியாதையையும்,  பெருமையையும் உருவாக்க அவர் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்த்து.

அரிய பாரம்பரிய மிக்க நடனக் கலைக்குப் புத்துயிர் அளித்து மேடைதோறும் இன்று பெண்கள் ஏராளமானோர் பரதநாட்டியம் ஆட வழிவகுத்த ருக்மிணி தேவி அருண்டேலுக்கு கலையுலகம் நன்றி செலுத்த வேண்டும். 1986 பிப்ரவரி  24ஆம் நாள் இவர் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார்.

இவர்களைப் போல சாதனைகள் பல படைத்தப் பெண்மணிகள் ஏராளமானோர் உண்டு இந்த பாரத புண்ணிய தேசத்தில். அவர்களையெல்லாம் சமயமறிந்து போற்றிப் புகழ்ந்து அவர்கள் நினைவு மங்கிவிடாமல் காப்பது நமது கடமை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com