19 ஆம் நூற்றாண்டின் ஔவையார் அசலாம்பிகை!

சங்கப் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளதோ அதேபோன்று கவிதை வடிவில் காந்தி புராணம் இயற்றியவர் அசலாம்பிகை அம்மையார்
19 ஆம் நூற்றாண்டின் ஔவையார் அசலாம்பிகை!

தமிழுலகம் போற்றிய முதுபெரும் தமிழறிஞர் திரு.வி.க. என்றழைக்கப்படும் மறைந்த திரு.வி. கலியாணசுந்தரம் ஆவார். தமிழுலகம் நன்கு அறிந்த இப்பெருமகனார் இரட்டணையில் பிறந்து பாதிரிப் புலியூரில் வந்து குடியேறி இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் முழங்கிய ஒரு பெருமகளை, காவியம் படைத்த திருமகளை "இன்றைய ஔவையார்" என்று போற்றினார். அவரால் போற்றப் பெற்ற பெருமைக்குரிய பெண்மணி பண்டிதை அசலாம்பிகை அம்மையார் ஆவார்.

சங்கப் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளதோ அதேபோன்று கவிதை வடிவில் காந்தி புராணம் இயற்றியவர் இவ்வம்மையார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் அவரின் புராணத்தை எட்டு காண்டங்களாகப் படைத்துச் சென்றுள்ளார்.

இவ்வம்மையாரின் சகோதரி ருக்மணி. அவரும் கவிஞரே. காந்தி புராணம் படிப்போர் தம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் கவிதையாக யாத்த பெருமைக்குரிய இவ்வம்மையார் திண்டிவனம் அருகேயுள்ள இரட்டணை என்னும் சிற்றூரில் எளிய பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அன்றைய நாள் வழக்கப்படி இளம் வயதிலேயே திருமணம் முடிக்கப்பெற்ற இவர் தன் பன்னிரெண்டாம் வயதில் கணவரின் மறைவால் விதவைக்கோலம் பூணும் நிலை ஏற்பட்டது. அதனால் மனமுடைந்த இவரின் தந்தையார் தன் இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு இன்றைய கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூருக்குக் குடிபெயர்ந்தார்.

தந்தையின் பெருமுயற்சியால் தமிழ் கற்றுத்தேர்ந்த இவர் பல நூல்களைப் படைத்தார். நூல் பல படைத்ததோடு நில்லாமல் அன்றைய நாளில் மேடைகளில் ஏறி தமிழ் முழக்கம் செய்தார். இவரின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் கண்ட திரு.வி.க. அவர்கள் இவ்வம்மையாரை 'வாழும் ஔவையார்' என்று போற்றி மகிழ்ந்தார்.

இவர் படைத்த நூல்களுள் முதன்மையாக வைத்துப் போற்றப்படும் பெருமைக்குரியது காந்தி புராணம் என்னும் நூலாகும். இந்நூல் பண்டைக்கால மரபிற்கேற்ப காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு படைக்கப்பெற்றது. எட்டுக் காண்டங்களைக் கொண்டது. 2034 பாடல்களைக் கொண்ட இந்நூலின் முதல் இரு காண்டங்கள் 1923ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்தது. மூன்றாவது நான்காவது காண்டம் 1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. மற்றைய நான்கு காண்டங்கள் இந்திய விடுதலைக்கு பின்னர் (1947) வெளிவந்தன.

காந்தியடிகளின் முப்பதாண்டு கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து படைக்கப் பெற்ற நூல் காந்திபுராணம். இதனைப் பாடி முடிக்கும்போது அசலாம்பிகை அம்மையாரின் வயது 74.

இந்நூலின் முதல் இரு காண்டங்கள் காந்தி சிறை சென்றது வரையும் நான்காம் காண்டம் கதர்த் தொண்டினைக் கருப்பொருளாகவும் கொண்டது.

இந்நூலுக்கு திரு.வி.க. அவர்கள் முன்னுரை எழுதியுள்ள "மெய்நூல் ஓதி, மெய்யுணர்வு பெற்ற மெய்யன்பராகிய காந்தியடிகளை முதலாகக் கொண்ட முதல் நூல் இது" என்று பாராட்டியுள்ளார்.

பொதுவாக கவிஞர்கள் எழுதும் கவிதையினைப் பாராட்டி ஆண் கவிஞர்கள் பல எழுதிய அணிந்துரைகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. ஆனால், பெண்களைப் போற்றி ஏற்றும் மரபு பிற்காலத்தில் தோன்றியது. பெண்கள் / ஆண்கள் எழுதிய கவிதையைப் போற்றுவது ஒரு வகை. பெண்கள், பெண்கள் எழுதிய கவிதையைப் போற்றிப் பாடுவது மற்றொரு வகை. அவ்வகையில் எழுந்த ஒன்றுதான் தங்கையின் நூலுக்கு அக்கா எழுதிய பாராட்டுக் கவிதை. 19ஆம் நூற்றாண்டின் கவிதை உலகில் அக்கா ருக்மணியும் தங்கை அசலாம்பிகை அம்மையாரும் இரட்டைப் புலவர்களாகத் திகழ்ந்தனர்.

அசலாம்பிகை அம்மையார் யாத்த பிற நூல்கள் ஆத்திசூடி வெண்பா, சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரிதம், குழந்தை சுவாமிகள் பதிகம், திருவாமாத்தூர் திரிபு அந்தாதி, திருவிடையூர்த் தலபுராண வரலாறு (முதல் காண்டம்) காந்தி புராணம், திலகர் புராணம் ஆகியவை.

அசலாம்பிகை அம்மையார் திருவிடையூர்த் தல புராண வரலாறு முதல் காண்டம் எழுதி முடித்தவுடன் இறந்து விடுகிறார். மிகச் சிறந்த படைப்பாளரான அவ்வம்மையார் இறந்த நிலையில் இந்நூல் வெளிவருகிறது. தங்கையின் நூலுக்கு நெஞ்சம் நெகிழும் சிறப்புப் பாயிரம் ஒன்றை அக்காள் ருக்குமணி எழுதியுள்ளார். இலக்கியமும் சோக ரசமும் கொண்டு படிப்பவர் நெஞ்சை உருக்குமாறு அமைந்தது.

           அப்பாயிரமாவது,

            சீர்பெற்றோங்கு ஞ்சிலாதரன் செம்மலுங்

            கார்நிற வண்ணனுங் கமலபீடனுங்

            காந்தவள் குழலுடைக் கங்கையும் பிறரு

            மிநதிராதியருமிரு டியர் குழாமு

            மிடைவிடாதென்று மேத்திப் பணியும்

            விடையூரமர்ந்த விமல நாதன்

            வேதங் காணாச் சோதி மூர்த்தி

            மங்கள நாயகி மகிழு மணாள

            னங்குல நாயக னாகாபரண

            னமரு மூதூரரும் புராணத்தைத்

            திமிர வெம்பவ நோய்தீர்க்கு மருந்தை

            சொற்சுவை பொருட்சுவை யுரவுந்தோன்ற

            பொற்சடையெம்மான் பொன்னடி நாடி

            யான்ற பேருல கிலாடவர் தமக்கே

            சான்ற நற்புலமையுள தெனறவிர்த்துத்

            தன்னின மடலார் தலைமை பெற்றுவப்ப

            மன்னியல் புகழ்சால மறையலர் குலத்தி

            லந்தணனா விலருங்கலை மானே

            வந்தன ளாகுமெனச் சிலர் வழுத்தத்

            தன்னுடை நாமத் தகைமைக் கேற்ப

            யெங்கை யென்றே யானுங்களிக்க

           நங்கையென்றே நானிலம் வியக்க

           வசலமீன்றெடுத் தவன்னை யினருள்கொடு

            அசலாம்பிகையு மறைந்தனள் மாதோ

என்று சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களுக்குப் பிறகு இவர் நம் முன்னே சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் மண்ணில் தோன்றிய பெண்குல விளக்கு புலவர் பெருந்தகை, விடுதலைப்போராட்ட வீராங்கனை பண்டிதை அசலாம்பிகை அம்மையாரின் நினைவினை இம்மகளிர் தின நன்னாளில் போற்றுவோம் வணங்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com