மகாத்மாவை உருவாக்கிய தமிழ்ப் பெண்!

காந்தியின் மகத்தான சத்யாகிரகம் எனும் அறப்போராட்டத்தில் தாமாக முன்வந்து போராட்டத்தை ஏற்றுக்கொண்டு முதல் உயிர்பலி தந்த பெண் வள்ளியம்மையே.
மகாத்மாவை உருவாக்கிய தமிழ்ப் பெண்!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவதற்கு உலைக்களமாக 22 ஆண்டுகள் செப்பனிட்ட பூமி, தென்னாப்பிரிக்கா. இந்தியாவில் தோல்வி கண்டு மன விரக்தியுற்றிருந்த பாரிஸ்டர் காந்தியை தாதா அப்துல்லா என்கிற இஸ்லாமிய வணிகர் தனது வாரக்கடனை வசூலிப்பதற்காக 125 பவுண்ட் சம்பளத்தில் கப்பலேற்றி தென்னாப்பிரிக்கா அனுப்பி வைத்தார். தன்னம்பிக்கையற்றவராகவும், கூச்சகுணம் கொண்டவராகவும் இருந்த காந்தியை தன்னம்பிக்கையுடன் தனக்குப்பின் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டும் ஆற்றல் கொண்டவராக மாற்றிய ரசவாதம் புரிந்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்காவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும்  காலனிகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த உலகின் பல நாடுகளிலும் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையிட்டு மூலப்பொருளாக ஐரோப்பியாவுக்கு விற்றுக் கொளுத்தது குட்டித் தீவான இங்கிலாந்து.. தங்கம், வைரம், நிலக்கரி, போன்ற கனிம வளங்களை வெட்டியெடுக்கவும் கரும்பு, பருத்தி, அரிசி, தேயிலை போன்றவற்றை விளைவிக்கவும் காடுகளை வெட்டி விளைநிலமாக்கிடவும் ஆசைக்காட்டி குறைந்த கூலி அடிமைகளாக தமிழர்களையும், தெலுங்கர்களையும் பெரும்பாலும் மதராஸ் மாகாணத்திலிருந்து தமது காலனிகளுக்கு அழைத்துச் சென்றனர் வெள்ளையர்.

இதனைத் தொடர்ந்து வணிகர்களாக காந்தியின் இனத்தினரான குஜராத்திகள் சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறினர். வழக்கறிஞராக சென்ற காந்தி கருப்பன் என்கிற ஒரே காரணத்தினால் மார்டீஸ்பர்க் ரயில்நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டது அவரது வாழ்வின் திருப்புமுனையானது. பின் ரத்தம் வடியக் காயப்பட்ட காந்தியை தனது முண்டாசுத் துண்டை எடுத்து கையிடுக்கில் சொருகிக் கொண்டு நின்ற பாலசுந்தரம் என்ற தமிழன் வழக்கறிஞர் காந்தியை உரிமைப்போராளி காந்தியாக்கினான்.

தென்னாப்பிரிக்கா வெள்ளையருக்கு எதிராகத் தனித்து நின்ற மாறுபட்ட குஜராத்தியாக காந்தியை உருவாக்கியது. எதிரியை தண்டிப்பதை விடவும் மன்னித்து அவரை நாணச்செய்வதே உயர்ந்த தண்டனை என வெள்ளைக் கிறிஸ்துவர்களுக்கு உணரச் செய்த மாபெரும் மன்னிப்பாளரானார் காந்தி. வருமானம் ஈட்ட வழக்கறிஞராகச் சென்ற காந்தி மெல்ல மெல்ல உரிமைப் போராளியானார். குடிமக்களாகலாம், அதிக வருமான ஈட்டலாம் என்று ஆசைக்காட்டி  தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்ற இந்தியர்களிடம், வெள்ளையர்கள் அவர்களிடம் குடியுரிமை இல்லை, நிலம், சொத்து வாங்க முடியாது, இந்தியத் திருமணம் செல்லாது என அநீதிச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். மாக்கடல் நடுவே கண்ணற்ற நாட்டில் கிடப்போரைக் காக்கும் காவல் தெய்வமாய் காந்தி அங்கு எழுச்சி பெற்றார்.

திராவிடர்கள் துணையுடன் வழக்கறிஞர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சட்ட மறுப்பு சத்யாகிரகியானார். கூலிகள் போராளியாகினர். திராவிடரும், இஸ்லாமியருமே உரிமைக்காகப் போராட காந்தியின் பின் அணி திரண்டனர். நியுகேசில் சுரங்கத் தொழிலாளர்களாகச் சுரண்டப்பட்ட தமிழர்கள் தங்களது கருவிகளைக் கீழே போட்டு விட்டு போராடப் புறப்பட்டனர். தமிழர்களின் மொழியில் தான் பேச முடியாது போனதற்கு மிகவும் வருந்தியுள்ளார் காந்தி.

சாதிச் சகதிகள் தாண்டி இந்தியர் ஒன்றுபட வேண்டினார் காந்தி. தமிழர்களுடான காந்தியின் உறவு ஆன்மீக உறவாக வளர்ந்தது. இந்தியர்களின் ஒற்றுமைக்காக அவர் நடத்திய இந்தியன் ஒப்பீனியன் ஏடு குஜராத்தி, தமிழி, ஆங்கிலம் என மும்மொழிக் கொள்கையின் முன்னோடியாக வெளியானது.

தமிழர்களின் போராட்ட உணர்வையும், வீரத்தையும், தியாகத்தையும் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் பாராட்டினார். பாரிஸ்டர் மோகன் தாஸ்கரம்சந்த் காந்திக்கு தேசபக்தியையும், உரிமைக்காகப் போராடும் வீரத்தையும் ஊட்டியவர்கள் திராவிடர்களும், பார்சிக்களுமே என்று காந்தியே பலமுறை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் பாலசுந்தரம், நாகப்பன், தம்பிநாயுடு, நாராயணசாமியுடன் உயிர் கொடுத்த வள்ளியம்மை என்கிற 16 வயதுச் சிறுமியும் காந்தியின் சத்யாகிரகப் போராட்டத்தின் தியாக உணர்வை வளர்த்தவர்கள்.

காந்தியின் மகத்தான சத்யாகிரகம் எனும் அறப்போராட்டத்தில் தாமாக முன்வந்து போராட்டத்தை ஏற்றுக்கொண்டு முதல் உயிர்பலி தந்த பெண் வள்ளியம்மையே. சிறையில் இறந்தவர் நாகப்பன் எனும் தமிழரே. 1800களின் இடைக்காலத்தில் கரும்புத் தோட்டத்தை உருவாக்கி ஐந்தாண்டுகள் விளைவித்தால் நிலம் அவர்களுக்கே  சொந்தம் என ஆசைக்காட்டி அழைத்துச் சென்றனர் ஆங்கிலேயர். உழைக்கச் சென்ற தமிழர்களின் தேவைகளுக்காகச் சில வணிகர்களும் உடன் சென்றனர். அப்படி தஞ்சை மாவட்டக் கடற்கரைப் பகுதியான தரங்கம்பாடியின் அருகிலுள்ள தில்லையாடியிலிருந்து சென்ற முனுசாமி முதலியார், ஜானகியம்மாள் இணையரின் புதல்வியாக 1898ல் பிறந்தவர் வள்ளியம்மை.

தமிழர் என்றபோதும் தமிழ் மண்ணைக்  காணாமல் பிறந்து இறந்தவரே வள்ளியம்மை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த வள்ளியம்மை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கான்வென்டில் படித்துத் தேர்ந்தார். குடியுரிமை இல்லை, கைநாட்டு வை, தலைவரி கட்டு, கிறிஸ்து முறைப்படி பதிவு செய்யாத இந்து மனைவி வைப்பாட்டியே, குழந்தைகள் அனாதைகளே என்கிற சட்டத்தை எதிர்க்க குஜராத்தி, திராவிடன், பார்சி, இஸ்லாமியர் என்று பிரிந்து கிடந்த இந்தியர்களை ஒன்றுபடுத்தி போராடத் தூண்டினார் காந்தி.

முதல் முறையாக அன்னை கஸ்தூரிபா காந்தியும் இந்த அறப் போராட்டத்தில் கலந்து கொண்டார். தாய் ஜானகியம்மாளும் சிறுமி வள்ளியம்மையும், அவரது தந்தை முனுசாமி நோய் வாய்ப்பட்ட நிலையிலும் போராடப் புறப்பட்டனர். போராளிகள் கைது செய்யப்பட்டு மாரிஸ்ட்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆரோக்கியமற்ற சிறைச்சூழல், உண்ண முடியாத மோசமான உணவு ஆகியவற்றால் நோயுற்றார் வள்ளியம்மை. உடல்நிலை மோசமானது சிறையிலேயே இறந்தால் பெரிய எழுச்சியாகி விடுமென பயந்து போன வெள்ளை அரசு அவரச அவரசமாக அவரை விடுதலை செய்தது. காந்தியும், போலக்கும் வள்ளியம்மையை சிறையிலிருந்து தொட்டில் கட்டித் தோளில் சுமந்து சென்றனர். நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையில் கிடந்த இளம் பெண் வள்ளியம்மையுடன் காந்தி, வள்ளியம்மா நீ சிறைப்பட்டதற்கும், இப்படி மோசமாக நோயுற்றதற்கும் நான்தான் காரணம் அதற்கு வருந்துகிறாயா என்று கேட்டுள்ளார்.

வள்ளியம்மையோ, இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் இச்சட்டத்திற்கு எதிராக போராடுவதும், நம் தன்மானத்தை இழந்து வாழாமல் மரணத்தை ஏற்பதும் கெளரவமானதே என்று கூறியுள்ளார். நோயுற்ற வள்ளியம்மை 1914 பிப்ரவரி 22 அன்று மரணமடைந்தார். 1916ல் ஜோகனாஸ்பர்க்கில் வள்ளியம்மைக்கும், நாகப்பனுக்கும் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. திருமதி பிலிப் எனும் அம்மையார் அந்த நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார். இந்தியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது காந்தி தனக்காக உயிர் நீத்த தமிழர்களின் உன்னதத் தியாகத்தை வியந்து மனமுருகிப் பேசினார். இந்த நினைவுச் சின்னம் காலப் போக்கில் கவனிப்பாரற்று சிதைந்து போனது.

காந்திஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி தென்னாப்பிரிக்காவின் தூதுவராக இருந்த போது அதை மீண்டும் புதுப்பித்துக் கட்டித் திறந்து வைத்தார். மகாத்மாவின் வழித்தோன்றல்களான இலாகாந்தி போன்றோர் தமிழர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வாழ்த்துகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று வள்ளியம்மையின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார்.

1915ல் தமிழகம் வந்த காந்திஜி தரங்கம்பாடி சென்று வள்ளியமையின் சொந்த ஊரான தில்லையாடியில் அவரது உறவினர்களைச் சந்தித்து நன்றி கூறினார். அதன்பின்னும் 19 முறை காந்தி தமிழகத்திற்கு வருகை புரிந்த தனிச் சிறப்புக்குத்  தென்னாப்பிரிக்காவில் உயிர் நீத்த தமிழ்த் தியாகிகளே காரணம். இதனிடையே தமிழகத்திற்கு வருகை தந்த காந்தி தமிழர்களிடையே உரையாற்றும் போது, தென்னாப்பிரிக்காவில் திராவிடர்கள் என் மீது பொழிந்த அன்பு போற்றத்தக்கதாக என் நினைவில் உள்ளது. நான் அவர்களுக்குச் செலுத்தும்  நன்றிக்கடனாக தமிழும், தெலுங்கும் கற்க விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து தமிழர்களிடையே பேசிய காந்தி, நீங்கள் எனது சிறிய தொண்டை மிகைப்படுத்திப் பாராட்டுகிறீர்கள் அதில் பத்தில் ஒரு பங்குக்கும் தகுதியுடையவனல்ல.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்கு உயிரையே கொடுத்த திராவிடர்களை எப்படிப் பாராட்டுவது, 16,17 வயதில் உயிரிழந்த நாகப்பன், வள்ளியம்மையின் தியாகத்தை எந்தவகையில் போற்றுவது. திராவிடர்கள் மகத்தான சேவைக்கும், தியாகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், ஒருமுறையாவது சிறை செல்லாத ஒருவரை மதராசிகள் மதிப்பதில்லை. நான் அவர்களுக்கு உணர்வூட்டினேன் என்பது சரியல்ல அந்த எளிய மக்களே எனக்கு உணர்வூட்டினர். அவர்களது தியாகத்திற்கான புகழ் எனக்குக் கிடைப்பது துரதிஷ்டமே என்றார்.

மகாத்மாவை உருவாக்க திராவிடர்கள் செய்த தியாகத்தை நாம் அவரது 150வது ஆண்டினை மனதில் கொண்டு பெருமிதமடைவோம். மதவெறிக் கலவரங்கள் நாட்டைச் சூறையாடி வரும் இந்நாளில் ஏழைகளுக்குள்ளும், அடிமைகளுக்குள்ளும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது ஏது தாழ்த்தப்பட்டோர் முதுகில் ஏறியமரும் மதத்திற்கு என்றும் நான் விரோதியே என்றார் காந்தி. ஜாதி, மத, இன மொழி ஏற்றத் தாழ்வற்ற இந்தியாவை உருவாக்கத் தம் உயிரையும் ஈந்த வளியம்மை, நாகப்பன் மகாத்மா காந்தி ஆகியோர் பெயரால் சமத்துவமும், மத ஒற்றுமையும் மிக்க இந்தியாவை உருவாக்கிட சபதமேற்போம்….
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com