குடியிருப்புகளான சென்னை ஏரிகள்
By | Published On : 22nd March 2020 06:00 AM | Last Updated : 22nd March 2021 10:50 AM | அ+அ அ- |

சென்னை மாநகரில் இருந்த 29 பெரிய ஏரிகள் அழிக்கப்பட்டு அதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து மட்டும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மற்ற நகரங்களைவிட மக்கள் தொகை அதிகமாகவும், நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக சென்னை விளங்குகிறது. எந்த அளவுக்கு சென்னை வளர்ச்சி பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு சென்னையில் இருந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதன்படி,சென்னை மாநகர்ப் பகுதியில் கடந்த 1906 ஆம் ஆண்டு நிலவரப்படி, 474 நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ச்சியாக ஏரிகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கட்டப்படுகின்றன.
தற்போது சென்னை மாநகர்ப் பகுதியில் 40க்கும் குறைவான நீர்நிலைகளே எஞ்சி உள்ளன. இதில் குறிப்பாக நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, கொளத்தூர் ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, சேத்துப்பட்டு ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு சுழல் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி என சென்னை மாநரில் இருந்த பல ஏரிகள் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
இதில், அதிகபட்சமாக அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளும், வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 1,250 குடியிருப்புகளும், அயனம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து 2,500 குடியிருப்புகளும், கோட்டூர் ஏரியை ஆக்கிரமித்து 900 குடியிருப்புகளும் என மொத்தம் 29 ஏரிகளை ஆக்கிரமித்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'சென்னையில் முகப்பேர் ஏரித் திட்டம் என்ற பெயரில் அரசே ஏரியை அழித்து குடியிருப்புகளைக் கட்ட அனுமதி அளித்தது. அதேபோல், விருகம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் குடியிருப்பு, கோயம்பேடு சூழல் ஏரியை ஆக்கிரமித்து பேருந்து நிலையம், சந்தை, நுங்கம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வள்ளுவர்கோட்டம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இதில், தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது அம்பத்தூர் ஏரியாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் காணப்பட்ட இந்த ஏரியை நம்பி 915 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தனியார் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புத் திட்டத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டு 400 ஏக்கராக சுருங்கி உள்ளது.
சென்னைக்குள் இருக்கும் பல ஏரிகளுக்கு இடையிலான வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், ஒரு ஏரிக்கும் மற்றொரு ஏரிக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதும் ஏரிகள் அழிவுக்கான முக்கியக் காரணமாக உள்ளது.
தற்போது, நீர்நிலைளை தூர்வாரும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் ஏரிகளுக்கு இடையிலான கால்வாய்களை மீட்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் வறண்டு காணப்படும் ஏரிகளை வீட்டுமனைகளாக மாற்றும் வகையில் நிலத்தின் வகைப்பாடை அரசு மாற்றி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசு கைவிட வேண்டும் என்றனர்.
[மார்ச் 22 - உலக தண்ணீர் நாள் ]
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G