உயிர் பெறட்டும் உபரிநீர்ப் பாசனத் திட்டம்

உபரி நீரை முக்கிய ஆதாரமாகக் கொண்டு அரை நூற்றாண்டுக்கு முன்பே கொண்டு வரப்பட்ட இறைப்பு நீர் பாசனத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.
தகட்டூர் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனை
தகட்டூர் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனை


தமிழகத்தில் நீர் மேலாண்மை சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண பல்வேறு தேடல்கள் காலத்தின் அவசிய தேவையாக கருப்படும் நிலையில், உபரி நீரை முக்கிய ஆதாரமாகக் கொண்டு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்ட இறைப்பு நீர் பாசனத் திட்டம் நோக்கம் வியக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில், இதுகுறித்துக் கேள்விப்படும் சாமானியர் மட்டுமல்லாது ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர், ஆட்சியாளர்களுக்குக்கூட இப்படி ஒரு திட்டமா? எனப் பல நேரங்களில் அவர்களுக்குளேயே கேள்வி எழுவதும், பெருங்காயம் இருந்த பானை கதையாக அதன் செயல்பாடுகள் பெயரளவில் கவனம் பெறாமல் இருப்பதும்தான் வேதனையானது.

உபரி நீர் மற்றும் மழை நீரைப் பயன்படுத்தி ஆற்றுப் பாசனத்துக்கு வாய்ப்பில்லாத மேடான மானாவாரி நிலப் பகுதியிலும் நெல் சாகுபடியை மேற்கொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் மின் இறைவைப் பாசனத் திட்டம்.

இறைப்பு நீர்ப் பாசனத் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் ஒருங்ணைந்த தஞ்சை மாவட்ட பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கிராமத்தில்தான் மாநிலத்திலேயே முதல் செயலாக்கமாக 1951-இல் தொடங்கப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தின்போது கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை, அப்போது மராமத்து இலாக்கா (பொதுப் பணித் துறை) அமைச்சராக இருந்த மீ. பக்தவத்ஸலம் தொடங்கி வைத்தார்.

இதன் செயலாக்கம் பயனுள்ளதாக மாறியதையடுத்து, சுற்றுப்புறக் கிராம பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் 1955-இல் மருதூர் வடக்கு, வாய்மேடு, 1962-இல் தென்னடார், ஆய்மூர், ஓரடியம்புலம், வண்டுவாஞ்சேரி, உம்பளச்சேரி உள்ளிட்ட கிராமங்களிலும் திட்டத்துக்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

தற்போதுள்ள மாவட்டங்கள் விவரப்படி நாகை மாவட்டத்தில் 12 இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் 12, தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 என மாநிலத்தில் மொத்தம் 29 இடங்களில் இந்தத் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த பொறிமனைகளில் 4 முதல் 6 வரையிலான எண்ணிக்கையில் நிறுவப்பட்ட மின் மோட்டார்கள் 25 முதல் 35 குதிரை சக்தித் திறன் கொண்டவை.

கிராமப்புறங்களுக்குப் போதிய மின் வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்த அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பொறிமனைக்கும் வெகுதொலைவுகளில் இருந்தும் மின்பாதைகள் அமைக்கப்பட்டு, சக்திவாய்ந்த மின் மாற்றிகள் தனித்தனியே அமைக்கப்பட்டன.

மோட்டார் இயக்குபவர், கரை கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள், அவர்களுக்கான குடியிருப்புகள், நிலையங்கள்தோறும் தொலைபேசி வசதிகளுடன் திட்டம் செயலாக்கத்தில் இருந்து வந்தது. போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் பல கிராம மக்களுக்கு இந்தத் தொலைபேசிகளே உதவியாகவும் இருந்து வந்தன. 

தொடக்கத்தில் இந்த சேவைக்காக விதிக்கப்பட்ட நீர் வரியும், சில ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டு, மின்சாரம், பரிமாரிப்பு செலவுகளை அரசே ஏற்று நடத்த முன்வந்து. இத்திட்டத்தால், கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு நெல் உற்பத்தியும், அதன் சாகுபடிப் பரப்பும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தன.

பெரும்பாலும் மானாவாரி நிலப்பரப்புகளைக் கொண்ட இடங்களிலேயே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பாசன ஆறுகளில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரையோ, மழை காலத்தில் பெருக்கெடுக்கும் நீரையோ வரையறுக்கப்பட்ட கடைமடை இயக்கு அணைப் பகுதிக்கு கீழே உபரி நீராக வெளியேற்றும் நடைமுறை இன்றைக்கும் உள்ளது. அந்த நீரை அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தேங்கச்செய்து அதனை மீண்டும் பாசனத்துக்குப் பயன்படுத்தும் இலக்கையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் தண்ணீர் வீணாகாமல் தடுக்கப்பட்டு, விளைநிலங்களின் பரப்பும் அதிகரிக்கச் செய்தது.

ஒவ்வொரு இடத்திலும் சுமார் 400 முதல் 700 ஏக்கர் வரையிலான பரப்புகள் பாசனம் பெற்றன. மின்சாரத்தை இலவசமாக கொடுத்து, பணியாளர்களுக்கு ஊதியத்தையும் வழங்கிய பொறிமனைகளையும் அரசே பராமரித்து வந்தது.

இந்தத் திட்டத்துக்காக அப்போதிருந்த அரசு ஏற்படுத்திய கட்டமைப்புகள் இப்போது பார்த்தாலும் வியக்கச் செய்வதாகவே உள்ளன. பாசன வாய்க்கால் பிரதான சாலை அல்லது ஆறு, கால்வாய்களைக் குறுக்கிட நேர்ந்தால் அங்கே புதை வழியே தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்புகளை கீழ்க்குமிழி கிணறு எனவும் மக்கள் அழைக்கின்றனர்.
 
காலப்போக்கில் இத்திட்டம் தொடர்பான கவனம் மெல்ல மெல்லக் குறைந்தது, பல இடங்களில் பொறிமனைகள் தவிர மற்ற கட்டமைப்புகள் சிதிலமடைந்து காட்சிக்கான அடையாளமாக இருப்பதுதான் வேதனையானது. பெயரளவிலான பராமரிப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமை, நிதி ஒதுக்கீடு குறைவு போன்றவற்றால் பல இடங்களில் திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதனால், இத்திட்டத்தின் நோக்கம் பயனுள்ளது என்றாலும் சேவையை விவசாயிகள் முழுமையாகப் பெற முடியவில்லை. பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்படும் இத்திட்டத்தின் பராமரிப்பு போதுமானதாக இல்லை.

தண்ணீர் பிரச்னை நிலவும் இந்த காலகட்டத்தில், அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இந்த திட்டம் போல பயனளிக்கும் திட்டங்கள் வரவில்லை. தொலைநோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள அரசின் பொது மின் இறைவை பாசனத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாகவே உள்ளன.

கக்கன், காமராஜர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். அதற்கு திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு நீர் மேலாண்மை நிபுணர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர் உயர் அதிகாரிகள் என அரசு நிர்வாகம் சென்று வந்தாலேபோதும். அது எதிர் காலத்தில் நீர் மேலாண்மைக்கு நல்ல பார்வையைக் கொடுக்க உதவும் என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com