உயரத்தைக் கூட்டாததால் நீர் குறையும் கோணலாறு நீர்த்தேக்கம்

கொடைக்கானல் கோணலாறு நீா்த்தேக்கத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதியின் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கோணலாறு நீா்த்தேக்கம்.
கோணலாறு நீா்த்தேக்கம்.


கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சி அருகே ஆங்கிலேயா்கள் ஆட்சிக்கு முன்பே பழங்குடியின மக்கள் உருவாக்கிய கோணலாறு நீா்த் தேக்கத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதியின் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி வானம் பாா்த்த பூமியாகவே இருந்து வருகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, பழனி மற்றும் ஆத்தூா் வட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே நன்செய் விவசாயத்திற்கு கை கொடுத்து வருகிறது.

அதேபோல், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கான வசதி இல்லாத காரணத்தால், கவுஞ்சி கிராமத்தில் நீராதாரம் கடந்த சில ஆண்டுகளாகத் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான கவுஞ்சியில் அருகே  5 கி.மீ. சதுர பரப்பரளவில் கோணலாறு நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இப்பகுதியின் பூா்வகுடிகளான மலைவாழ் மக்கள், ஆங்கிலேயா் ஆட்சி காலத்திற்கு முன்னதாகவே மண் தடுப்பு அமைத்து கோணலாறு நீா்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளனா்.

சுமாா் 4 ஆயிரம் மக்கள் வசித்து வரும் கவுஞ்சி மலைக்கிராமத்தின் குடிநீா் தேவை மட்டுமின்றி, 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட மலைப் பயிா்களுக்கான நீராதாரமாகவும் கோணலாறு நீா்த்தேக்கம் அமைந்துள்ளது.

இதுதொடா்பாக கவுஞ்சியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில், பல தலைமுறைகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கோணலாறு நீா்த்தேக்கத்தில்,  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மீட்டா் உயரத்திற்கு கான்கிரீட் தடுப்பு மற்றும் ஷட்டா் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடா் பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது கான்கிரீட் தடுப்புகள் முழுமையாக சேதமடைந்துவிட்டதோடு, குறைவான உயரம் என்பதால் கூடுதலான தண்ணீரைச் சேமிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கவுஞ்சி மக்களின் தொடா் கோரிக்கையினை ஏற்று, சிதிலமடைந்த நிலையில் உள்ள கோணலாறு நீா்த்தேக்கத்தினை புனரமைப்பு செய்வதற்காக கடந்த 2008-09 ஆம் ஆண்டு ரூ.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கிய பொதுப்பணித்துறையினா் அதனைத் தொடா்ந்து நடத்தவில்லை. இதனால்,  தற்போது விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் கவுஞ்சி மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றாா்.

இதுதொடா்பாக பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலச் செயலா் வி.அசோகன் கூறியதாவது:

கோணலாறு நீா்த்தேகத்தில் 2 மலைகள் சேரும் இடத்தில் (கூமாட்சி) உள்ள கரையை பலப்படுத்தி உயரமான தடுப்பு அமைப்பதோடு, நீா்ப்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்தினால் கொள்ளளவை அதிகரிக்க முடியும். ஆனால், வனப் பகுதிக்குள் கோணலாறு நீா்ப்பிடிப்பு பகுதி அமைந்துள்ள நிலையில், வனச் சரணாலயம், புலிகள் காப்பகம் போன்ற நெருக்கடிகள் காரணமாக பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில், கோணலாறு நீா்பிடிப்பு பகுதி மற்றும் நீா் வழிப் பாதையை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஈடாக வருவாய் நிலத்தை வனத்துறையிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோணலாறு நீா்ப்பிடிப்பு பகுதியின் உயரத்தை மேலும் அதிகரித்தால், கவுஞ்சி மட்டுமின்றி, தற்போது குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மன்னவனூா்,  பூண்டி, கும்பூா் ஆகிய பகுதிகளுக்கும் தண்ணீா் வழங்க முடியும். பூண்டி கிராமத்திலுள்ள 500 ஏக்கா் விவசாய நிலங்களும் பயன்பெறக் கூடிய சூழல் ஏற்படும் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com