வரலாற்று அடையாளத்தை இழந்த கிருதுமால் நதி

மதுரை அருகே உள்ள நாகமலையில் உள்ள புல்லூத்து, நாக தீர்த்தம், காக்கா ஊற்று உள்ளிட்ட 5 இயற்கை  ஊற்றுக்களில் உருவாகும் நீர் மூலம்  அடிவாரத்தில் இருந்து தோன்றியது  கிருதுமால் நதி.
வரலாற்று அடையாளத்தை இழந்த கிருதுமால் நதி

 

நீரின்றி அமையாது உலகு என்பதை நிரூபிப்பது போல, தொல் உலகில் தோன்றிய நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரை நாகரிகங்களாகவே  இருப்பதைக் காண முடியும். இதை உணர்ந்ததால்தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் தண்ணீருக்கான சிறப்பு வழிபாடு உருவாக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த புவியியல், கலாசாரத் தன்மைக்கேற்ப மாறுபடும். மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரைகளில் தோன்றி பின்னர் நகரங்களாக உருமாற்றம் அடைந்துள்ளன.

இதில் பல நதிகள் காலப் பெருவெள்ளத்தால் திசைமாறியுள்ளன, பல அழிந்துள்ளன, அழிக்கப்பட்டுள்ளன. நதிக்கரைகளில் நகரங்கள் உருவாகலாம் என்பதற்கு நமக்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. ஆனால், நகரங்களில் நதிகள் உருவாவது என்பது அரிது. அதிலும் மதுரை போன்ற நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க, புராணங்களில் பெருமையாகக் குறிப்பிடப்படும் அளவு நதி உருவாவது என்பது மிக மிக அரிது.  இந்த பெருமையை உடையது மதுரை கிருதுமால் நதி.

மதுரை அருகே உள்ள நாகமலையில் உள்ள புல்லூத்து, நாக தீர்த்தம், காக்கா ஊற்று உள்ளிட்ட 5 இயற்கை  ஊற்றுகளில் உருவாகும் நீர் மூலம்  அடிவாரத்தில் இருந்து தோன்றியது  கிருதுமால் நதி.

நாகமலை அடிவாரத்தில் வைகைக்கு அருகே மாலை போன்ற தோற்றத்தைக்  கொண்டு இயங்குகிறது கிருதுமால் நதி. பக்தி புராணங்களான ஸ்ரீ மத்  பாகவதம்,  நாராயணீயம் போன்றவற்றில் கிருதுமாலின் பெருமைகள் கூறப்படுகின்றன. மேலும் 17ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய காலத்து  நதியாகக் கூறப்படும் கிருதுமால் நதி மக்களால் புனித நதியாகவும் வணங்கப்பட்டு வந்துள்ளது.

பாண்டியர்களின் ஆட்சியில் பாண்டிய மன்னன் நீராடும் நதியாக கிருதுமால்  இருந்ததாகவும், நதியில் நீராடும்போது மன்னனுக்குக் காட்சியளித்த மீன் உருவைக்கொண்டே பாண்டிய நாட்டின் சின்னமாக மீனை அறிவித்ததாகவும் செய்திகள் உண்டு.

மதுரையின் நாகமலை அடிவாரத்தில் நிலையூர் கால்வாய்ப் பகுதியில் தோன்றி, துவரிமான், அச்சம்பத்து, விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், திடீர்நகர், மேலவாசல், கீரைத்துறை, சிந்தாமணி, சாமநத்தம் வழியாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் வழியாக 90 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணம் செய்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சென்றடைந்து அங்கு மலட்டாறு என்ற பெயர் மாற்றம் அடைந்து கடலில் கலக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 11 மாதங்கள் கிருதுமால் நதியில் நீர்வரத்து இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் கிருதுமால் புனித நதி என்ற அடையாளத்தை இழந்து கிருதுமால் என்றாலே முகம் சுளிக்கும் அளவுக்கு சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது.

மதுரை நகரில் மட்டும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்யும் கிருதுமால் நதி தற்போது மதுரை நகரின் பிரதான கழிவு நீர்க் கால்வாயாக மாறி கழிவுகளைச் சுமந்து ஓடுவது பெரும் அவலம். அண்மைக்காலத்தில் தோற்றம் மாறி கழிவு நீர் கால்வாய்களாக மாறிய நதியில் மிக முக்கியமானது கிருதுமால் நதி.

இதில் கிருதுமால் நதி குறித்து ஆய்வு மேற்கொண்டவரும், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருமான நாகரத்தினம் கூறியது: மதுரை நகரை வளப்படுத்தியதில் கிருதுமால் நதிக்கு பெரும் பங்குண்டு. மேலும் மதுரைக்கு பெரும் வெள்ளம் வந்தாலும்கூட நகருக்கு சிறிதும் பாதிப்பின்றி கிருதுமால் நதி வழியாகக் கடத்தி விடும் அமைப்பைப் பெற்றது. திருமலை நாயக்கர் அரண்மனையைச் சுற்றியுள்ள அகழிக்கு கிருதுமால் நதியில் இருந்துதான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மதுரை கோட்ஸ் நிறுவனம் ஆகியவை ஒரு காலத்தில் குளங்களாக இருந்தன. இவற்றுக்கு கிருதுமால் நதியில் இருந்துதான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் கிருதுமால் நதியின் நீர்வரத்தைக் கொண்டு நான்கு மாவட்டங்களில் 784 கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நீர்வரத்து பெற்றுள்ளன. 37,559 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதியும் பெற்றிருந்தன. வைகையின் நீர் வரத்தில் கிருதுமால் நதிக்கும் ஒதுக்கீடு உண்டு. ஆனால் காலப்போக்கில் நகரமயமாதல், கிருதுமால் நதி ஆக்கிரமிப்பு, நீர் வரத்து இன்மை இவற்றால் கிருதுமால் நதி தனது அடையாளத்தை இழந்துள்ளது. நகர் முழுவதும் கழிவு நீர், குப்பைகள் என சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே, மதுரையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிருதுமால் நதியை மீட்டெடுக்க வேண்டும். முதலில் தற்போது வாய்க்காலாக சுருங்கி விட்ட கிருதுமால் நதியைத் தூர் வார வேண்டும். நதியில் உள்ள கழிவுகள், குப்பைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். நதியின் இருபுறமும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். பல இடங்களில் தூர்ந்துபோன கால்வாயைச் சீரமைக்க வேண்டும். பின்னர் கிருதுமால் நதிக்கு வைகையில் இருந்து நீர் திறக்க வேண்டும்.

மாடக்குளம் கண்மாய், துவரிமான் கண்மாய், அச்சம்பத்து கண்மாய் ஆகியவற்றின் உபரி நீரை கிருதுமால் நதியில் விட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கிருதுமால் நதியில் நீரோட்டம் ஏற்படும். இதன் மூலம் நகருக்குள் 18 கிலோமீட்டர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெள்ள காலங்களில், வெள்ளப்போக்கியாக செயல்படுவதோடு மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். நதிகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிப்பது எளிது. ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது கடினம். எனவே அழிவின் விளிம்பில் இருக்கும் கிருதுமால் நதியை மீட்டெடுக்க அரசு, மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com