அமராவதியிலிருந்து நல்லதங்காள் அணைக்குத் தண்ணீர் வருமா?

தாராபுரம் அருகே பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை உள்ளது. இந்த அணையானது மொத்தம் 30 அடி கொள்ளவைக் கொண்டது.
அமராவதியிலிருந்து நல்லதங்காள் அணைக்குத் தண்ணீர் வருமா?

அமராவதி  அணையிலிருந்து வறண்ட நல்லதங்காள் அணைக்குத் தண்ணீர் கிடைக்குமா?

தாராபுரம் அருகே பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் ஓடை அணை உள்ளது. இந்த அணையானது மொத்தம் 30 அடி கொள்ளவைக் கொண்டது. இதன் நீர்தேக்க பரப்பளவு 774 ஏக்கர் ஆகும். இந்த அணை நீரின் மூலாக பொன்னிவாடி, நல்லாம்பாளையம், ஆலாம்பாளையம், பெரமியம், தூரம்பாடி, மூலனூர் ஆகிய கிராமங்களில் 4,744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த அணைக்கட்டிற்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் வரத்து இருப்பதில்லை. மழைக் காலங்களில் கிடைக்கும் நீர் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் இந்த அணைக்கட்டு பெரும்பாலான காலங்களில் வறண்டு காணப்படுகிறது.

அணையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது இருந்த மண்திட்டுகள், பாறைகள் பழைய வீட்டுச் சுவர்கள், பாறைகள் ஆகியவை இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவும் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. இந்த அணையைத் தூர் வாரினால் கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.

மூலனூர் ஒன்றிய பகுதி மிகவும் வறட்சியானதாகும். இதனால் குடிதண்ணீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புரத்தலாறு அணையில் இருந்து வரும் உபரிநீர் சண்முக நதி மூலம் அமராவதி ஆற்றில் கலக்கிறது. எனவே அமராவதி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு நல்லதங்காள் ஓடை அணையுடன் இணைக்க முன்பு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இதனால் நல்லதங்காள் ஓடை அணை தண்ணீரின்றிக் காணப்படுகிறது. எனவே அமராவதி ஆற்றில் இருந்து நல்லதங்காள் ஓடை அணைக்கு இணைப்பு கால்வாய் வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணையைத் தூர்வார வேண்டும்.

மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள் இன்று நல்லதங்காள் ஓடை அணையில் தண்ணீர் இன்றி பலரது விவசாயம் பால் ஆகிவிட்டது இங்கு வளர்க்கப்படும் மீன்களை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் தண்ணீரின்றி மீன்கள் வாழ வழியின்றி அடிக்கும் சூரிய வெப்பத்தில் தண்ணீர் சூடாகி இறந்துவிடுகின்றன. நல்லதங்காள் ஓடை அணை என்பது முன்னூறு வருடங்களுக்கு முன்பு நல்லதங்காள் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன.

நல்லதங்காள் தனது குழந்தைகளுக்கு உணவின்றி நல்லதங்காள் ஓடைக் கரையில் அமர்ந்து கண்ணீர் மல்க அழுது குழந்தைகளைக் கொன்றதாக செவிவழிக் கதை கூறுகிறது. அப்போது பொங்கி வழிந்தோடிய நீர்தான் நல்லதங்காள் ஓடை எனப் பல புராண கதைகளை சுமந்த நல்லதங்காள் அணை, 2007 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தில் காட்சியளித்து வந்தாலும் அணையில் நீர் இல்லாதது இப்பகுதியை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 

ஆகவே அமராவதி அணையில் இருந்து நல்லதங்காள் அணைக்கு கால்வாய் வெட்டி தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலமாக  அருகிலுள்ள 18 கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com