கழிவுகளின் தொட்டியாகும் நாமக்கல் கொசவம்பட்டி ஏரி

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி தற்போது கழிவுகள் தேங்கும் கூடாரமாக மாறிவிட்டது.
கழிவுகளின் தொட்டியாகும் நாமக்கல் கொசவம்பட்டி ஏரி

நாமக்கல் அருகே ஒருகாலத்தில் நீராதாரமாக விளங்கிய கொசவம்பட்டி ஏரி, இப்போது கழிவுகள் கொட்டப்படும் பெரும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில், நாமக்கல் நகரின் அருகில் உள்ள கொசவம்பட்டி ஏரி, பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. அதன் பின் மெல்ல, மெல்ல அதன் அழகும் உருவமும் அழியத் தொடங்கி, தற்போது கழிவுகள் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் காணப்படுகிறது. ஏரி இருந்த இடம் தெரியாதவாறு கோரைப் புற்களும், முட்புதர்களும் நிரம்பிக் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, நாமக்கல் பகுதியில் உள்ள உணவகக் கழிவுகள், கட்டட இடிபாடுகள், கோழி இறைச்சிக் கழிவுகள் ஆகியவை கொட்டும் பகுதியாகவும் இந்த ஏரி மாறிவிட்டது.

இதனைத் தூய்மைப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் நிலைமை. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், விரைவில் கொசவம்பட்டி ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.

அண்மையில், நாமக்கல் வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், கொசவம்பட்டி ஏரியைப் புனரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள கொசவம்பட்டி ஏரி சீரமைக்கப்படும்பட்சத்தில், மழைக்காலங்களில் அதிகளவில் நீர் தேங்குவதோடு, நாமக்கல் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

நாமக்கல் மாவட்டத்தில் காக்கப்பட வேண்டிய நீர் நிலைகளில் முக்கியமானதாக கொசவம்பட்டி ஏரி கருதப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஏரியைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்கள் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com