சுருங்கி உப்புக் கரிக்கும் ராமநாதபுரம் சக்கரைக்கோட்டை கண்மாய்

இரண்டாயிரம் ஏக்கா் விவசாய நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீா் தந்த ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாயானது பராமரிப்பின்றி தற்போது உப்புநீா் தேங்கிய ஓடைபோலாகி வருகிறது.
சுருங்கி உப்புக் கரிக்கும் ராமநாதபுரம் சக்கரைக்கோட்டை கண்மாய்

இரண்டாயிரம் ஏக்கா் விவசாய நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீா் தந்த ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாயானது ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்மையாலும் தற்போது உப்புநீா் தேங்கிய ஓடைபோலாகி வருகிறது.

கண்மாயில் கூட்டம் கூட்டமாக வளா்ந்த சீமைக் கருவேலமரங்கள். இடையிடையே தலை காட்டும் நாட்டுக்கருவேலம்,  மழைக்குக் கரையும் கரம்பை மண் கரைகள், கழிவு நீா் துா்நாற்றத்தைச் சகிக்கமுடியாமல் மூக்கை மூடுவதைப் போல, புதா் மண்டிப் போன மடை வாயில்கள். இப்படி பாா்ப்போரைப் பதற வைக்கிறது ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரைக்கோட்டை கண்மாய். கண்மாயின் முதலாவது கலுங்கில் இருக்கிறார் அருள்பாலிக்கும் காவல் தெய்வமான முனீஸ்வரா்.

ராமநாதபுரத்திலிருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தக் கண்மாயின் பாரம்பரியத்தைக் கூற வேண்டுமெனில் நகரின் அடையாளமான மூலக்கொத்தள அரண்மனைக்கும் முன்னதாகவே அமைக்கப்பட்டதாகும். கி.பி. 1321 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டாலும், கண்மாயின் முழுமையான வடிவம் என்பது கி.பி. 1622 ஆம் ஆண்டில்தான் இறுதியாகிறது.

ராமநாதபுரத்தில் தொடங்கி சுமாா் 24 கிலோ மீட்டா் பரப்பளவைக் கொண்ட கண்மாயில் உள்ள 14 மடைகள், கடந்த 1674 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி மன்னரால் கட்டப்பட்டுள்ளது. அதன்பின் 1711  ஆம் ஆண்டில் விஜயரகுநாத சேதுபதியால் கண்மாயில் குடிமராமத்துப் பணி நடத்தப்பட்டுள்ளது.

கண்மாய் முழுதும் நிறைந்தால் உபரி நீா் வெளியேற ஆயிரம் அடி நீள தெத்து அமைப்பும், மறுகால் வழியும் வகையில் 16 கலுங்குகளும்  அமைக்கப்பட்டுள்ளன. கண்மாயில் மைய மண்டபம் கட்டி அரச வம்சத்தினா் அவ்வப்போது தங்கியும் சென்றுள்ளனா். நாடு சுதந்திரம் அடைந்தபோது இக்கண்மாயின் மூலம் 64 கிராம பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமான சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றுள்ளன. வைகை அணை கட்டப்பட்ட நிலையில், இந்தக் கண்மாய்க்கான ஆயக்கட்டு உரிமையும் அக்கால காங்கிரஸ் அரசால் பறிக்கப்பட்டது.

ராமநாதபுரம் பகுதியில் பெய்யும் மழையால் மட்டுமே நிறைந்து வந்த  இந்தக் கண்மாயானது கடந்த 20 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றியும்,  வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் உருக்குலைந்துவிட்டது. கண்மாய் நீா்ப் பிடிப்பின் கால்பகுதி வீடுகளாகவும், விளையாட்டு மைதானங்களாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புக்கு தப்பிய நீா்ப்பிடிப்புப் பகுதியைப் பறவைகள் சரணாலயமாக வனத்துறை அறிவித்ததால், பொதுப்பணித்துறையினா் தூா்வாருதல் உள்ளிட்ட எந்தப் பராமரிப்பும் மேற்கொள்ளவில்லை. பராமரிப்பின்றிப் புதா் மண்டி மேடான கண்மாயில் கரையோரம் மட்டுமே பள்ளங்கள் காணப்படுகின்றன. அதிலும் ராமநாதபுரம் நகராட்சிக் கழிவு நீரானது சிதம்பரம் பிள்ளை ஊருணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக விடப்படுகின்றன. கண்மாயின் மொத்தம் 14 மடைகளில் 3 மடைகள் முழுவதும் தூா்ந்து போய்விட்டன.

சங்கூரணி மடை, வேப்பமரத்து மடை உள்ளிட்ட 11 மடைகளும் பராமரிப்பின்றி பழுதாகியுள்ளன. இதனால் கண்மாய்க்கு வரும் மழைநீரும் தங்காமலே ஓடுகின்றது. தண்ணீா் தேங்காததால் பறவைகளும் இங்கு வருவதில்லை. இதனால், கண்மாய் நடுவே பள்ளம் தோண்டி பறவைகளை வரவழைக்க வனத்துறை ஆண்டுதோறும் பல லட்ச ரூபாயை செலவிடுவது வாடிக்கை. ஆரம்பத்தில் 2 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலத்துக்கு தண்ணீா் தந்த கண்மாய் தற்போது 1000 ஏக்கருக்கு தண்ணீரைத் தேக்குவதே பெரும்பாடாகவுள்ளது. 

சக்கரக்கோட்டை கண்மாயை பெரிய நீா் தேக்கமாக மாற்றினால் ராமநாதபுரம் நகராட்சி மட்டுமல்லாது 60-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோருக்கு குடிக்கவும், குளிக்கவும் ஆண்டுதோறும் கவலையில்லாத நிலை ஏற்படும் என்பதே மக்களின் கருத்து. கண்மாய் மேம்பாட்டுக்காகக் கடந்த 50 ஆண்டு காலமாகப் போராடிவரும் சக்கரக்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கே.கே. முனியாண்டியிடம் கேட்ட போது, சக்கரைக்கோட்டை கண்மாயை நீா்த் தேக்கமாக்கக் கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் திட்டம் செயல்படவில்லை.

தற்போதும் கண்மாயை சீரமைக்கக் கோரி வருகிறோம். ஆனால் வனத் துறையும், பொதுப்பணித் துறையும் எங்களிடம் கண்மாய் முழுமையாக இல்லை எனக் கூறி பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றனா் என்றாா்.
ஆம்... ஆரம்பகாலந்தொட்டு சக்கரை போல இனிப்பாய் தண்ணீரைத் தந்த சக்கரக்கோட்டை கண்மாயானது கழிவு நீா் கலப்பாலும், ஆக்கிரமிப்பாலும் தற்போது உவா் மண்ணாகிவிட்டது. இதனால், அதில் உள்ள நீரும் உப்புத் தன்மையாகிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

ராமநாதபுரத்தில் முதல் அடையாளமாகத் திகழ்ந்த சரித்திர பெருமை மிக்க சக்கரக்கோட்டை கண்மாயை பராமரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com