100 ஆண்டுகளுக்கும் மேல் குடிநீர்க் குளத்தைக் காத்துவரும் குடும்பம்

சிவகங்கையில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நான்கு தலைமுறையாக ஒரு குடும்பத்தினர் குடிநீர்க் குளத்தைக் காத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமத்தில் (குன்றக்குடி சாலையில்) 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் குளம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமத்தில் (குன்றக்குடி சாலையில்) 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் குளம்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி செல்லும் வழியான பாதரக்குடி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் நான்கு தலைமுறையாக ஒரு குடும்பத்தினர் குடிநீர் குளத்தைக் காத்து வருகின்றனர்.

கிராம மக்களின் அன்றாட குடிநீர்த் தேவை மற்றும் கோயில் அன்னதானத்திற்கும் இக்குளத்தின் நீர் பயன்பட்டு வருகிறது. காரைக்குடி-கோவிலூரை அடுத்த பாதரக்குடி - குன்றக்குடி சாலையில் இருக்கிறது இக்குளம். 

பாதரக்குடி கிராமத்தில் சொக்கலிங்கம் பிள்ளை. இவரது மகன் சுப்பையா பிள்ளை - மீனாட்சியம்மாள் தம்பதி. இவர்கள் 1945ஆம் ஆண்டில் குளத்தின் எதிர்ப்புறம் வீடு கட்டுவதற்கு மண் எடுக்கப்பட்ட பகுதியே தற்போதுள்ள பாதரக்குடி குடிநீர்க் குளமாகும். இப்போதும் சுப்பையா பிள்ளையின் வீடு இருக்கிறது. மண் எடுக்கப்பட்ட பகுதி பள்ளமாக இருந்ததால் சுவையான ஊற்று நீர் தோன்றித் தேங்கியது. பின்னர் சுப்பையா பிள்ளை அதனை குளமாகப் பராமரிக்கத் தொடங்கியிருக்கிறார். கிராம மக்களுக்கும், சாலையோரம் அமைந்திருப்பதாலும் அந்தப் பகுதியைக் கடந்துசெல்லும் வழிப்போக்கர்களுக்கும் கடந்த 100 ஆண்டுகளாக குடிநீர் தாகம் தீர்த்துவைக்கின்றனர் இக்குடும்பத்தினர்.

இக்குளம் சுமார் 2.5 ஏக்கர் அளவு பரப்பளவில் நான்கு கரைகளிலும் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர்க் குளம் என்ற பெயரில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு சுப்பையா பிள்ளை-மீனாட்சியம்மாள் தம்பதியினர் பராமரிக்கத் தொடங்கி அதையே இன்றுள்ள தலைமுறையினரும் பின்பற்றி வருகின்றனர். இக்குளத்தைச் சுற்றியிலும் நெல்லி மரங்கள் நிறைந்திருந்ததாலும் குளத்தின் தண்ணீர் மேலும் சுவை நிறைந்ததாக இருந்திருக்கிறது. சமைப்பதற்கும், குடிப்பதற்கும் இக்குளத்து நீரை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தற்போது ஒரு சில நெல்லி மரங்கள்தான் உள்ளன. இன்றும் தண்ணீர் சுவையாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

சுப்பையா பிள்ளை இக்குளத்தைக் காலங்காலமாகக் காக்க வேண்டும் என்றே விரும்பினார். மேலும் நீதிமன்றத்தில் இக்குளத்தைப் பற்றிக் குடிநீருக்கென்றே பதிவு செய்தும் வைத்திருக்கிறார். மீனாட்சியம்மாள் இக்குளத்தின் நீரை எடுத்து மண்பானையில் வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக ஏற்பாடு செய்திருக்கிறார். எப்போதும் 10 மண்பானைகள் வரை தயாராக வைத்திருப்பாராம். மாடுகள் மற்றும் மனிதர்கள் குளத்தில் இறங்கி சீர்கேடு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத் தனியாக வாளிகளும் வைத்து கண்காணித்து வந்தவர் மீனாட்சியம்மாள் என்கிறார் இவர்களது மூத்த மகன் நாகரெத்தினம் பிள்ளையின் மகனான ராமநாதன்.

மேலும் அவர் கூறியதாவது:

"எங்கள் தாத்தா சுப்பையா பிள்ளை- மீனாட்சியம்மாள் தம்பதிக்கு நாகரெத்தினம் பிள்ளை, நடராஜன் பிள்ளை என 2 மகன்கள். தற்போதும் எங்களது தாத்தா கட்டிய வீடு உள்ளது. குளத்தின் கிழக்குப் பகுதியில் எங்களது வீடு உள்ளது. போக்குவரத்து நிறைந்த சாலையோரத்தில் இக்குளம் அமைந்திருப்பதால் கிராம மக்கள் மற்றும் வழிபோக்கர்கள் பயன் பெறவேண்டும் என்றே இக்குளத்தைச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள். 

காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெறும் காய்கறிச் சந்தைக்காக அந்தக் காலத்தில் காய்கறிகளை மாட்டுவண்டிகளில் இந்த வழியாகக் கொண்டு செல்லும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு இக்குளத்தின் நீர் பெரிதும் பயனளித்துள்ளது. மேலும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக வாளிகளை தனியாக வைத்து குளத்தை சுகாதாரமாக பராமரித்தவர் எங்கள் பாட்டி மீனாட்சியம்மாள். பொதுமக்கள் தாகம் தீரவும் பெரிய சேவையாற்றியவர். புதிய மண்பானைகள் எப்போதும் வைத்திருப்பார். குளத்தின் தண்ணீரை அதில் நிரப்பி வைத்து குடிநீர் தாகம் தீர்ப்பதில் அவருக்கு மிகுந்த திருப்தி.
 
இப்போதும் குடிநீர்க் குளமாகவே பராமரித்து வருகிறோம். கிராம மக்களும் காலை 3.30 மணியிலிருந்து இரவு வரை தண்ணீர் எடுக்கின்றனர். அருகே கோயில் நிகழ்ச்சிகளில் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிக்கும் அக்குளத்தின் நீரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இக்குளத்தைப் பராமரிப்பதில் கிராம மக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும். 

குளத்தில் கால்வாய் வெட்டப்பட்டு மழை அதிகம் பெய்து குளம் நிரம்பினால் நீர் வீணாகாமால் அருகே கண்மாய்க்கு நீரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை மக்கள் பராமரிப்பதில்லை. 

இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 1500 பேர் வரை இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இக்குளத்தின் நீரை பருகுகிறார்கள். சமையலுக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

குளிப்பதற்கு மற்றும் கால்நடைகளுக்கு என இக்கிராமத்தில் தனியாக அரசு ஊரணி ஒன்று உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். சுப்பையா பிள்ளை நினைவு குடிநீர் குளம் பராமரிப்பதில் எங்களது குடும்பத்தினரின் பணி தொடரும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com