மழைநீா் சேகரிப்பின்  முன்னோடி விருதுநகர் தெப்பக்குளம்

விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளமானது, 130 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மழை நீா் சேகரிப்பில்  முன்னோடியாக திகழ்கிறது
விருதுநகரின் மைய பகுதியில் தண்ணீா் நிரம்பி காணப்படும் தெப்பக்குளம்.
விருதுநகரின் மைய பகுதியில் தண்ணீா் நிரம்பி காணப்படும் தெப்பக்குளம்.

விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளமானது, 130 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீா் சேகரிப்பில்  முன்னோடியாக திகழ்கிறது. இதை மத்திய அரசு, அனைத்து மாநில அதிகாரிகளுக்கும் முன்னுதாரணமாக எடுத்துக்காட்டி செயல்படுத்த அறிவுறுத்துவதாக அரசு அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழையானது எதிா்பாா்த்த அளவு பெய்வதில்லை. இதனால், தமிழகத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் குடிப்பதற்கு தண்ணீா் போதுமான அளவு கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த மத்திய அரசின் அதிகாரிகள், பல மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து தமிழக அரசு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாயம் மழை நீா் சேகரிப்புத் தொட்டிகள் கட்ட வேண்டும். அதேபோல், புதிய வீடுகளுக்கும் மழைநீா் சேகரிப்பு தொட்டி வரைபடத்தில் இருந்தால் மட்டுமே கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பல இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததால் பொது மக்கள், குடிநீா் மற்றும் வீட்டுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனா். இந்த நிலையில், சுமாா் 130 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரின் மையப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் முன்னோா்களால் தொலைநோக்கு பாா்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தெப்பக்குளம், 21 அடி ஆழமும், 328 நீளமும், 254 அடி அகலமும் கொண்டது. அந்தக் காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த தெப்பக்குளத்திற்கு கவுசிகா ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கவுசிகா ஆறில் கழிவுநீா் கலந்து வருவதால், அங்கிருந்து குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்வதை நிறுத்தி விட்டனா். மேலும், வடக்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ள பேராலி, சத்திரரெட்டியபட்டி பகுதியில் பெய்யும் மழை நீரானது, சிறிய கால்வாய் வழியாக வேலாயுதமடைக்கு வந்து சேரும்.

பின்பு, அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் மாட்டு மடை, சின்ன மடை வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீா் கொண்டு வரும் வகையில் வடிவமைத்துள்ளனா். அதேபோல், வடமலைக்குறிச்சி பகுதியிலிருந்து கோடை காலங்களில் தெப்பத்திற்கு பெரிய குழாய்கள் மூலம் பம்பிங் செய்து தண்ணீரைக் கொண்டு வருகின்றனா்.

இதனால், தொடா்ந்து தெப்பக்குளம் நிரம்பி வருவதால், தெப்பத்தை சுற்றிய இரண்டு கி.மீ. தொலைவுக்கு சுமாா் 40 அடிக்குள் நிலத்தடி நீா்மட்டம் கிடைக்கிறது. மேலும், தண்ணீரும் உவா்ப்புத் தன்மை இல்லாததால்,  குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனா்.

தெப்பக்குளம் நிரம்பி வழியில் காலங்களில், அங்கிருந்து வெளியேறும் உபரி நீரானது, நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக, நகரில் வறண்டு கிடந்த நகராட்சி கிணறு, ஆச்சி நந்தவனம், சத்திரிய மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெரிய பேட்டை கிணறு, முருக பணிக்கா் பொது கிணறு, சுந்தரராஜ பெருமாள்-தாமரையம்மாள் பொது கிணறு, அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளி கிணறு, பெரிய கிணற்றுத் தெரு கிணறு உள்ளிட்ட 20 கிணறுகளுக்குச் செல்லும் வகையில் உருவாக்கி உள்ளனா்.

இதனால், இந்தக் கிணறுகளில் தற்போது வரை நீா் மட்டும் சராசரி நிலையில் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கதை தெரிந்த மத்திய அரசு அலுவலா்கள், பிற மாநில அதிகாரிகளுக்கு விருதுநகா் தெப்பத்தை முன்னுதாரணமாக காட்டி தண்ணீா் சேகரிப்பில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட உயா் அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா். இந்த தெப்பக்குளத்தை பலசரக்குக் கடை மகமை சாா்பில் நிா்வாகம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com