ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட இடும்பன்குளம் ஏரி

நாமக்கல் இடும்பன்குளம் ஏரி சீமைக்கருவேல மரங்களால் சூழப்பட்டு மாயமாகியுள்ளது. இதன் மூலம் பரமத்தி, ஓலப்பாளையம்,  ஊஞ்சப்பாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. 
ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட இடும்பன்குளம் ஏரி

பரந்து விரிந்த நீர்நிலைகளில் பல, தற்போது இருந்த இடம் தெரியாமல் மாயமாகி விட்டன. கோடையின்போது மட்டுமே அவற்றைத் தேடுவதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். மழைக் காலத்தில் வீணாகப்போகும் மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏரி, குளங்கள் இருப்பதை இன்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அசோகர் மரம் நட்டார், ஏரி, குளங்களை வெட்டினார் என்று பாடத்தில் படித்த நாம், அதைக் காப்பதற்கு மறந்துவிட்டோம். இதனால் பாதிக்கப்படுவது எதிர்கால சந்ததியினர்தான்.

ஆனால், இன்றளவும் பல கிராம மக்கள் குடிநீருக்காக விவசாயக் கிணற்று நீரையும், ஆழ்துளைக் கிணற்று நீரையுமே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.  தூய்மையான குடிநீரைப் பார்ப்பதே அந்த மக்களுக்கு அரிதான ஒன்றாக உள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும் வெயில், ஏரி,  குளங்களில் இருக்கும் கொஞ்ச நீரையும் உறிஞ்சி விடும் நிலை உள்ளது.  இந்த நிலையில் ஏரிகளைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இடும்பன்குளம் ஏரி அமைந்துள்ளது. கடந்த 1854-ஆம் ஆண்டு, குறுநில மன்னரான  அல்லாள இளையநாயக்கர்  என்பவர் மேட்டூரில் தொடங்கி 26 கிலோ மீட்டர் தொலைவு பள்ளத்தில் ஓடிவந்த காவிரியை, ஜேடர்பாளையம் பகுதியில் தடுப்பணையாக அமைத்ததுடன்,  தரைமட்டமாக வரும் வகையில் வாய்க்கால் பாசனத்திற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

ஜேடர்பாளையம் - நன்செய் இடையாறு இடையே இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் நெல், வாழை, வெற்றிலை பயிரிட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தினர். அதன்பின்,  பரமத்தி பகுதியில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக, சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் தொடங்கி திருமணிமுத்தாறு வழியாக நன்செய் இடையாறை வந்தடையும் நீரை, பரமத்தி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆங்காங்கே ஏரிகள் வெட்டி அதற்குத் திருப்பிவிடும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது வெட்டப்பட்ட ஏரிகள்தான் செருக்கலை ஏரி, மாவுரெட்டி ஏரி, பிள்ளைகளத்தூர் ஏரி, கூடச்சேரி ஏரி, வில்லிப்பாளையம், இடும்பன்குளம் ஆகியவை.

தற்போது சீமைக்கருவேல மரங்களால் சூழப்பட்டு இடும்பன்குளம் ஏரி மாயமாகியுள்ளது. இந்த ஏரி நீர் மூலம் பரமத்தி, ஓலப்பாளையம்,  ஊஞ்சப்பாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. 2011 - ஆம் ஆண்டு பெய்த மழையால் ஏரி நிரம்பியது. தற்போதைய நிலையில் அந்த ஏரியில் நீர் வற்றி வானம் பார்த்த பூமியாகக் காட்சியளிக்கிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன்குளம் ஏரி, ஆக்கிரமிக்கப்பட்டுத்  தற்போது 200 ஏக்கர் பரப்பாக சுருங்கி விட்டது. ஏரி வறண்டு போனதற்கு ஆக்கிரமிப்பும் முக்கிய காரணமாகக்  கூறப்படுகிறது. 

இடும்பன்குளம் ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, அதன் பெயரிலேயே மீட்புக்குழு என்ற அமைப்பைத் தன்னார்வலர்கள் உருவாக்கி உள்ளனர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், இடும்பன்குளம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக் காலத்தின்போது அதிகளவில் தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகளும் மீட்புக் குழுவினரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com