எது நல்ல குடிநீர்?

இந்தப் பூமிப் பந்து 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டது. மனித உடல் சராசரியாக 65 சதவிகிதம் நீரால் ஆனது. இந்த சராசரியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகக் கூட தண்ணீர் அருந்துவது கட்டாயமாகிறது.
எது நல்ல குடிநீர்?

இந்தப் பூமிப் பந்து 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டது. மனித உடல் சராசரியாக 65 சதவிகிதம் நீரால் ஆனது. இந்த சராசரியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகக் கூட தண்ணீர் அருந்துவது கட்டாயமாகிறது. சராசரி மனிதன் நாளொன்றுக்கு 3 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள். காலத்தையும், உடல் சூழலையும் பொருத்து இந்த அளவு மாறுபடலாம்.

ஆதி மனிதன் உணவைத் தேடி, ஓட்டமும் நடையுமாய் இருந்த காலத்தில் கண்ணில்பட்ட குளத்தில் நேரடியாக வாய் வைத்துக் குடித்தான். அதே குளத்தில் மீன்கள், பாம்புகள், கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளிட்ட அத்தனையும் வாழ்ந்தன.

இன்றைக்கு தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வருகின்றன. சுத்தமான குடிநீர் பாட்டிலை நடுவே வைத்துப் பார்த்தால் அந்தப்புறம் நிற்கும் நடிகை தெளிவாகத் தெரிய வேண்டும். இப்படித்தான் அந்த விளம்பரங்கள் சொல்கின்றன. நம்மை மயக்குகிறார்கள்.

இதன் பகாசுர வளர்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சற்றேறக்குறைய 2 ஆயிரம் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. தண்ணீரை உற்பத்தி செய்ய முடியுமா? எனக் கேட்கலாம். "எச்2ஓ'. இதுதான் தண்ணீரின் மூலக்கூறு. இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் சேர்ந்ததுதான் தண்ணீர் எனக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், அறிவியலில் எத்தனை வளர்ந்தும் தண்ணீரை உருவாக்க முடியாது. ஏனென்றால் அந்தத் தண்ணீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன.

பாட்டில் தண்ணீர் விற்பவர்கள் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து அருந்துவதற்கு உகந்ததாக மாற்றி பாட்டில்களில் பாதுகாப்பாக அடைத்து விற்பதாகச் சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் எங்கே போய், தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டாலும் தாராளமாக உட்கார வைத்து, பெரிய சொம்பில் தண்ணீர் கொடுப்பார்கள். இன்றைய காலம் நேர் எதிராய் மாறியிருக்கிறது. பேருந்தில் அருகில் அமர்ந்திருப்பவர் வைத்திருக்கும் பாட்டில் தண்ணீரைக் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் ஒரு லிட்டர் பாட்டிலை ரூ. 25 கொடுத்து வாங்கியிருப்பார், தீர்ந்துவிட்டால் மீண்டும் அவர் ரூ. 25 செலவிட வேண்டும். கேட்பதே தவறு என்பதுதான் நிதர்சனம்.

ரயில் குடிநீர் 15 ரூபாய்க்கும், அரசுப் போக்குவரத்துக் கழகம் தயாரிக்கும் ' அம்மா குடிநீர் 10 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. தேசிய 'பிராண்டு'களும் உண்டு. உள்ளூர் 'பிராண்டு'களும் உண்டு. எந்த 'பிராண்டு'ம் இல்லாமல் திருட்டுத்தனமாய் சாதாரண தண்ணீரையும் கலந்து மூடி விற்று ஏமாற்றும் துயரமும் உண்டு.

பெருநகரான சென்னையிலும், அதற்கு அடுத்த மாநகரங்களிலும் பெரும்பாலான வீடுகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே குடிக்கப் பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கிவிட்டார்கள். 20 லிட்டர் கேன் விலை ரூ. 30 முதல் 50 வரை.

நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது குறித்து அரசோ, நீதிமன்றமோ ஏதேனும் திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பெருநகரங்களில் வாழ்வோர் நிலை கவலைக்கிடம்தான்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் அடைக்கப்பட்ட குடிநீர், நல்ல குடிநீரா? என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதென்ன அடைக்கப்பட்ட குடிநீர்'. ஆங்கிலத்தில் 'பேக்கேஜுடு டிரிங்கிங் வாட்டர்' என்றுதான் குறிப்பிட வேண்டும். புழக்கத்தில் 'மினரல் வாட்டர்' என்போம். அது தவறு.

1967 இல்தான் முதன் முதலில் இந்தியாவில் மும்பையில் தண்ணீர் பாட்டிலில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முதலில் தயாரித்தவர் 'பிஸ்லரி'. இப்போது 'பிஸ்லரி வாட்டர்' என்ற நிறுவனம் வருகிறதல்லவா, அதன் நிறுவனர்தான் பிஸ்லரி. படிப்படியாக அவர் நிறுவனத்தை விற்றுவிட, பிறகு வாங்கிக் கொள்ள, ஏராளமான போட்டி நிறுவனங்கள் பல்கிப் பெருக, இப்படியாக தண்ணீர் விற்பனைத் தொழில் களைகட்டியிருக்கிறது.

தொடக்கத்தில் 'மினரல் வாட்டர்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1990-களில் நாடு முழுவதும் பாட்டில் குடிநீர் பரவியிருகிறது. 1998இல் உச்சநீதிமன்றம் 'மினரல் வாட்டர்' எனப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறது. என்ன காரணம் என்றால், அந்தத் தண்ணீரில் எந்த மினரலும் இல்லை என்பதுதான். அதன்பிறகு, அடைக்கப்பட்ட குடிநீர்- பேக்கேஜுடு டிரிங்கிங் வாட்டர் என்றாகியிருக்கிறது.

அதாவது, இயல்பாக தண்ணீரில் உள்ள அந்தந்த நில வகைப்பாட்டுக்கு ஏற்ப தாது உப்புகளை, தனிமங்களைக் கொண்டதுதான் தண்ணீர். இன்னும் சொல்லப்போனால், அந்தந்தப் பகுதி உயிரினங்களின் தேவைக்கேற்ப மண்ணின் சத்துகள் கூடவோ, குறையவோ இருப்பதுதான் இயற்கையின் ஆச்சரியம்.

ஒரேயொரு எடுத்துக்காட்டு. தருமபுரி பகுதிகளில் புளோரைடு அதிகமாக இருப்பதாக தாரளமான செய்திகள் புழங்கும் அல்லவா. அந்தப் பகுதியில் நீண்டகாலம் பணியாற்றிய குடிநீர் வடிகால் வாரிய ஆய்வாளர் ஒருவர் கூறினார்- இந்தப் பகுதியின் நிலத்தடி நீரில் புளோரைடு அதிகம் இருப்பது உண்மைதான். அதேநேரத்தில் அதே மண்ணில் விளைகிற கேழ்வரகு, சீத்தாப்பழம், கீரைகளை தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் தண்ணீரிலுள்ள புளோரைடு எதுவும் செய்யாது- சமன்படுத்தப்படும் என்றார். மிகப்பெரிய ஆச்சரியமான செய்தி.

சுத்திகரித்தல்

சுத்திகரிக்கிறோம் என்ற பெயரில் தண்ணீரிலுள்ள தனிமங்களை அகற்றிவிடுகிறார்கள் என்பதுதான் அடைக்கப்பட்ட குடிநீர் மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு.

'எதிர்மறை சவ்வூடு பரவல்' அல்லது 'தலைகீழ் சவ்வூடு பரவல்' என்றழைக்கப்படும் 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' (ஆர்ஓ) சுத்திகரிப்புதான் இப்போது பிரம்மாண்டமாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். தண்ணீரைச் செலுத்தும்போது அழுத்தமாகச் செலுத்தி, தண்ணீரிலுள்ள செறிவான தனிமங்களை அகற்றி விடுகிறார்கள்.

இதனால், கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் போன்ற தனிமங்கள் எடுக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், சட்டப்படி நல்லது செய்யும் தனிமங்களை மீண்டும் தண்ணீரில் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எந்த ஆலைக்குள் சென்று, எதை மீண்டும் சேர்க்கிறார்கள் எனப் பார்க்க முடியும்? என்பது விடையில்லா கேள்வி.

ஆக, பாட்டில் தண்ணீர் எந்தச் சத்தும் இல்லாத 'சப்பைக் குடிநீர்' என்று போட்டுடைக்கும் ஏராளமான ஆய்வுகளும், நூல்களும் வந்துவிட்டன. இல்லை இல்லை என ஒருவரும் சொல்லவில்லை.

இன்னொரு முக்கியமானது, அந்த 'பிளாஸ்டிக்' பாட்டில் (கன்டெய்னர்).

குடிநீர் பாட்டில் வாங்கி கவனமாகப் பார்த்தால் அதில் ஒரு எச்சரிக்கை இருக்கும். 'வெயில் படக் கூடாது' என்பதுதான் அந்த எச்சரிக்கை. அப்படியானால் என்ன பொருள்?

எத்தனைப் பாட்டில்கள், கேன்கள் அடிக்கும் வெயிலில் குட்டியானைகளில் (சிறிய சரக்கு வாகனம்) பயணம் செய்வதை தினமும் பார்க்கிறோம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கின்றன என்பது அண்மையில் வெளியான அதிர்ச்சிகரமான ஆய்வு. இதனையும் இல்லையென எவரும் மறுக்கவில்லை.

பிளாஸ்டிக் மூலக்கூறுகள் மனிதனின் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து புற்றுநோய் முதல் ஹார்மோன் பிரச்னைகள் வரை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள்.

கடைசியாக... 100 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தயாரிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் சரிபாதி தண்ணீர் கழிவாக இழக்க வேண்டும். வீடுகளில் சிறிய அளவில் 'ஆர்ஓ பிளாண்ட்' அமைத்திருப்பவர்கள் நேரடியாகக் காண முடியும்.

தண்ணீரை சுத்திகரிக்கும் பணி தொடங்கியவுடனேயே ஒரு பக்கம் சிறிய குழாயில் தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். நல்ல தண்ணீர் வரும் வேகத்தைக் காட்டிலும் அந்தக் கழிவு தண்ணீர் வெளியேறும் வேகம் அதிகமாக இருக்கும். கவனித்துப் பாருங்களேன்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறதாம். அதாவது நாளொன்றுக்கு இந்த மாவட்டங்களில் இருந்து மட்டும் சராசரியாக 2 கோடி லிட்டருக்கும் மேல் அதிக செறிவுடைய தண்ணீரை மீண்டும் பூமிக்கடியிலோ, அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளிலோ வெளியேற்றுகிறோம். அப்படியானால் மாநிலம் முழுக்க...?

எல்லாம் சரி, எதைத்தான் குடிப்பது?

அரசு சார்பில் குடிநீர்த் திட்டங்கள் மூலம் (தமிழ்நாடு முழுவதும் 550 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளனவாம்) விநியோகிக்கப்படும் குழாய் குடிநீர் உண்மையில் அருந்துவதற்கு உகந்த குடிநீர் என்கிறார்கள் நீரியல் ஆய்வாளர்கள். சென்னையிலேயே (!) மெட்ரோ தண்ணீரை எல்லோரும் அருந்தலாம் என்ற நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டது.

அதெல்லாம் சாத்தியமில்லை, மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சில எளிய சுத்திகரிப்பு நுட்பங்களும் சொல்லப்படுகின்றன.

முதலில் மண் பானை

மண் பானை நீரைச் சுத்திகரிக்கும் இயற்கையான முறை என்கிறார்கள். அதே மண்பானையில், தேத்தாங்கொட்டை (தேற்றாங்கொட்டை- சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்), மிளகு, வெட்டிவேர் ஆகியவற்றை பானைக்குள் போட்டு வைத்துவிட்டால் அருந்துவதற்கு அருமையான, 'சுவையான' குடிநீர் சில மணி நேரங்களில் தயாராகிவிடும்.

பல நகரங்களில் இதற்கான 'மூலிகை முடிச்சு'களும் (தேத்தாங்கொட்டை, வெட்டிவேர், மிளகு சேர்த்து பருத்தித் துணியால் முடிந்த) விற்பனைக்கு வந்துள்ளன.

சுவை முக்கியமல்ல என்று கருதுவோர் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, ஆற வைத்துப் பயன்படுத்தலாம். கொஞ்சம் வசதியும், துலக்கத் தயங்காமல் இருப்போரும் செம்புப் பாத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு பருகலாம். இவை தவிர, துளசி இலைகளைப் போட்டும், சீரகத்தைப் போட்டும், செம்பருத்தி இதழ்கள், ரோஜா இதழ்களைப் போட்டும் தண்ணீரை 'பிளேவர்' கூட்டி சத்துகளைக் கூட்டியும் அருந்தலாம்.

இவை எல்லாவற்றையும் விட, நேரடியாக வானில் இருந்து பெய்யும் மழைநீரை பெரிய 'டிரம்'களில் பிடித்து, இறுக்கமாக வெயில் படாமல் அடைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது 'அற்புதம்' என்கிறார்கள்.

மாநிலத்தின் பல பகுதிகளில் இதனை சுய முயற்சியாக வீடுகளிலேயே செய்தும் பயன்படுத்துகிறார்கள். இணையதளத்திலும் உலகளாவிய கட்டுரைகள், விடியோக்கள் காணக் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com