ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை

விழுப்புரத்தில் வளர்ச்சித்திட்ட கட்டமைப்புகளுக்காக அரசே ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை


விழுப்புரத்தில் வளர்ச்சித்திட்ட கட்டமைப்புகளுக்காக அரசே ஏரிகளை விழுங்கியதால், தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி சுற்றுப்பகுதி ஏரிகளை பாதுகாத்து எதிர்கால நீராதார பிரச்னை தீர்ப்பதற்கு,  உலக தண்ணீர் தினத்தில் சபதமேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ரயில், சாலைப் போக்குவரத்தை மையமாக கொண்டு வளர்ந்த விழுப்புரம் மாவட்டம், பின்தங்கிய நிலையிலிருந்து படிப்படியாக மேம்பட்டு வருகிறது. மாவட்டத் தலைநகரான விழுப்புரம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வளர்ச்சி பெறாமல் கடும் போக்குவரத்து நெரிசலுடன் திணறிக்கொண்டிருந்தது. 

நீண்டகால பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக,  புறநகர் பகுதியில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தையும்,  தொடர்ந்து பேருந்து நிலையத்தையும் கட்டமைத்து நெருக்கடிக்குத் தீர்வு கண்டனர். போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகண்ட நிர்வாகத்தினர்,  அதற்காக,  பெரும் நீராதாரமாக விளங்கிய பூந்தோட்டம் ஏரியை விழுங்கி கட்டமைப்பை ஏற்படுத்தினர்.

இதுவே எதிர்கால நீராதாரப்பிரச்னைக்கு வழிகோலியதோடு,  மழைக்காலம் தோறும் மழை நீர் குளம் போல் தேங்கி பெரும் தவிப்பை ஏற்படுத்தியது கடந்த 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்து நிலையத்தை விழுப்புரம் புறநகர் பகுதியான பூந்தோட்டம் ஏரியில் கட்ட திட்டமிட்டனர்.  அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 1993ம் ஆண்டு அடிக்கல் நாட்டினர்.  மீண்டும் கிடப்பில் போடப்பட்டு,  திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த 2000 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு முன்னோடியாக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகமும் கொண்ட மாவட்ட பெருந்திட்ட வளாகமும் திமுக, அதிமுகவினரின் நடவடிக்கையால் இதே பூந்தோட்டம் ஏரியிலிருந்த முழு பகுதியையும் ஆக்கிரமித்து 1998 ஆம் ஆண்டு கட்டமைத்தனர்.
இதனால்,  இந்த ஏரிப்பாசனத்தை நம்பியிருந்த பூந்தோட்டம்,  வி.மருதூர் விவசாயிகள், விவசாயத்தை முற்றிலும் கைவிடும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். 

ஏரியில் அரசு கட்டமைப்புகள் வந்ததும்,  அதன் சுற்றுப்பகுதியிலிருந்த விளை நிலங்களின் விற்பனை விலை ஏறியது.  இதனால், வீட்டுமனைகளாக கட்டமைக்கப்பட்டது.

ஏரியைச் சுற்றிலும் அடுத்த பத்தாண்டு காலத்தில் படுவேகமாக குடியிருப்புகள் பெருகியது.  ஏரியில் அரசு கட்டடங்கள்,  பேருந்து நிலையம் கட்டியதன் விளைவுகளையும் மக்கள் சந்திக்கத் தொடங்கினர். ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வழக்கம் போல் ஏரியை நோக்கி மழை நீர் வெள்ளம் போல் வந்தது. வெளியேற்றவும் வழியின்றி வடிகால்  வசதியும் இல்லாமல் 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மழை நீரை வெளியேற்ற போராடியது.

ஒருவழியாக செயற்கையாக ராட்சத மோட்டார் கொட்டகை அமைத்து மழை நீரை வெளியேற்றும் திட்டத்தை செயல்படுத்தினர். இப்போதும் அதனையே மேற்கொண்டு, மழை நீர் தேங்காமல் பாதுகாத்து வருகின்றனர்.  பூந்தோட்டம் ஏரியின் எதிரே இருந்த நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டு காணாமல் போயுள்ளது.

பூந்தோட்டம் ஏரியில்,  வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்திய அரசியல்வாதிகளும், அதிகாரிகளிடம் கேட்டபோது,  விழுப்புரத்தில் நீண்டகாலம் நிலவிய போக்குவரத்து, இட நெரிசல் பிரச்னைக்குத் தீர்வாக பேருந்து நிலையமும்,  பெருந்திட்ட வளாகமும் புறநகர் பகுதி ஏரியில் அமைக்கப்பட்டது.  ஆனால்,  ஏரிக்கான பாசன நிலங்கள் பயிரிடாமல் இருந்ததால் தான்,  வீணாக இருந்த ஏரியை வளர்ச்சிக் கட்டமைப்புக்காக பயன்படுத்தினர்.  வளர்ச்சி வேண்டும் என்றால்,  சில இழப்புகளை தவிர்க்க முடியாது என்றனர்.  

அந்த இழப்பாக பூந்தோட்டம் ஏரி அமைந்ததால்,  தற்போது நிலத்தடி நீர் ஆதாரமின்றி விழுப்புரம் நகரில் உள்ள 1.5 லட்சம் மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. அருகே உள்ள எல்லீஸ்  அணைக்கட்டில்  வறண்ட தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி ஆழ்துளை கிணறுகளை  அமைத்து,  தண்ணீரை தவிப்போடு பெற்று வருகின்றனர்.

இதே போல்,  விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ஏரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திமுக ஆட்சியில் கட்டமைக்கப்பட்டது.  ஏரியில் கட்டமைப்பு வருவதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் வழக்கு போட்டு எதிர்த்தனர்.  அதனை சமாளித்து, கட்டமைப்பை ஏற்படுத்தினர்.

விழுப்புரத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நீராதாரங்களை ஆக்கிரமித்த அரசு நிர்வாகம், தற்போது குடிநீர் ஆதாரங்களுக்கு பல கோடி செலவிட்டு தவித்து வருவதாக பொது நலன் விரும்பிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

அவர்கள் கூறுகையில்,  ஏரியில் அமைந்த அரசு மருத்துவக்கல்லூரிக்கே இப்போது குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.  நீராதாரங்களை ஆக்கிரமித்த நிர்வாகத்தினர்,  அதற்கு மாற்றாக நிலத்தடி நீரை சேமிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போதுள்ளனர். வளர்ச்சி  கட்டமைப்புகளுக்குப் பிறகு ஏரிப்பகுதியில் எஞ்சியுள்ள இடங்களில், புதிய கட்டங்களை கட்டாமல் புதிய குட்டைகள்,  ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றை அமைத்து மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.  

விழுப்புரம் நகரைச் சுற்றி மிக அருகாமையில்,  நீர்வரத்துக்கு வழியின்றி உள்ள மருதூர், சாலாமேடு, பாணாம்பட்டு, காகுப்பம், வழுதரெட்டி, முத்தாம்பாளையம், கண்டமானடி உள்ளிட்ட ஏரிகளை பாதுகாத்து,  அதற்கான நீர்வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து எதிர்கால நீராதார பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே,  உலக தண்ணீர் நாள் நமக்கு உணர்த்தும் பாடமாக அமையும்.  மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தில் இதற்கான பணியை முன்னெடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com