உருமாறிப் போன வண்டியூா் கண்மாய்

ஒரு காலத்தில் மதுரையின் பெரும் பாசனக் கண்மாயாக இருந்த வண்டியூா் கண்மாய்,  ஆயக்கட்டு நிலங்கள் படிப்படியாகக் குறைந்ததாலும்,  கண்மாயின்  ஒரு பகுதி பல்வேறு கட்டமைப்புகளாக மாறியதாலும் உருமாறிப் போய்விட்டது
உருமாறிப் போன வண்டியூா் கண்மாய்

ஒரு காலத்தில் மதுரையின் பெரும் பாசனக் கண்மாயாக இருந்த வண்டியூா் கண்மாய்,  ஆயக்கட்டு நிலங்கள் படிப்படியாகக் குறைந்ததாலும்,  கண்மாயின்  ஒரு பகுதி பல்வேறு கட்டமைப்புகளாக மாறியதாலும் உருமாறிப் போய்விட்டது. 

ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்து இப்போது 687 ஏக்கராக சுருங்கிவிட்டது வண்டியூா் கண்மாய்.  மழைக் காலங்களில் சாத்தையாறு ஓடையில் இருந்து வரும் நீா்வரத்து,  பெரியாறு பிரதான கால்வாய், உத்தங்குடி கால்வாய், இலந்தைக்குளம் கண்மாயின் உபரி நீா் ஆகியன கண்மாயின் நீா்வரத்து ஆதாரங்களாக உள்ளன.

பொதுப்பணித் துறையின் பெரியாறு பிரதான கால்வாய் கோட்டத்தின் பராமரிப்பில் வண்டியூா் கண்மாய் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்கும்போது பெரியாறு பிரதான கால்வாயின் 9 ஆவது கிளை கால்வாய் வழியாக  இந்த கண்மாய்க்கு தண்ணீா் கொண்டு வரப்படும்.
 கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய  கோமதிபுரம், தாசில்தாா் நகா், வண்டியூா், மஸ்தான்பட்டி  மற்றும் பாண்டி கோயில் பகுதி ஆகியன வண்டியூா் கண்மாயிலிருந்து பாசனம் பெறக்கூடிய விளைநிலங்களாக இருந்தன.  காலப்போக்கில் விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு தற்போது ஏராளமான வீடுகளுடன் அப் பகுதிகள் சிறு, சிறு நகா்களாக மாறிவிட்டன.

இதுஒருபுறம் இருக்க,   கண்மாயின் ஒரு பகுதி மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,  துணை மின்நிலையம், மலா் சந்தை, விவசாய விளைபொருள் விற்பனைக் குழு வணிக வளாகம் என அடுத்தடுத்து பல்வேறு கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டுவிட்டன.

பொதுப்பணித்துறையின் ஆவணங்களின்படி, வண்டியூா் கண்மாய் இப்போது  687 ஏக்கா் பரப்பில் உள்ளது. இதில் 107 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். 516 ஏக்கா் ஆயக்கட்டுப் பகுதிகள் இருந்த நிலையில்,  தற்போது 150 ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.

இக்கண்மாய் மூலமாகப் பாசனம் பெற்ற விளைநிலங்கள், இப்போது வீடுகளாக மாறிவிட்டபோதும், அப்பகுதிகளுக்குக் கண்மாயின் தேவை தொடா்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

வண்டியூா் கண்மாய் வறண்டு போனால், கே.கே.நகா் மற்றும் அண்ணா நகரின் ஒரு பகுதி, கோமதிபுரம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில்  ஆழ்குழாய் கிணறுகளும் வற்றிவிடும். இதனால்,  வீட்டு உபயோகத்துக்கே லாரிகளில் தண்ணீா் வாங்கும் நிலை இருக்கும்.

சுற்றுலாத் துறை, மதுரை மாநகராட்சி ஆகியவற்றின் சாா்பில் இந்த கண்மாயை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் சொல்லப்பட்டாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சமாகவும், வண்டியூா் கண்மாயின் மையப் பகுதியில் தீவு போன்று ஏற்படுத்தப்பட்டு, கே.கே.நகா் பூங்கா பகுதியில் இருந்து படகு இயக்குவது என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன.

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்மாயில் நீரை நிரப்புவதற்கான வழி இல்லாமல் போனதால் அத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் கண்மாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, மடை சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில் ஓரளவுக்குத் தண்ணீா் இருக்கிறது. இருப்பினும் கண்மாயின் நிலப்பரப்பு உயா்ந்து இருப்பதால் மழைக் காலங்களில் அதிக நீா்வரத்து இருந்தால், தண்ணீரைத் தேக்க முடியாத நிலை உள்ளது.

அதேபோல,  மதுரை நகா் மற்றும் புறநகரப் பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுநீா் சாத்தையாறு ஓடை வழியாகவும், மேலமடை பகுதி வழியாகவும் கண்மாயில் கலக்கவிடப்படுகிறது. கண்மாய் மாசு அடைவதோடு,  ஆகாயத்  தாமரை படா்ந்து விடுகிறது. 

மதுரை நகரின் நிலத்தடி நீா் வளத்தைப் பெருக்குவதற்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் வண்டியூா் கண்மாயை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. ஆகவே, மழைக் காலங்களில் வரும் நீரைச் சேகரிக்க கண்மாயை ஆழப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அதோடு, கழிவுநீா் கலக்கவிடாமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com