திருவள்ளூர் பகுதிகளில் நீரைத் தேக்கி வைக்க மும்மாரி திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மும்மாரி திட்டம் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
திருவள்ளூர் பகுதிகளில் நீரைத் தேக்கி வைக்க மும்மாரி திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மும்மாரி திட்டம் மூலம் தனியார் பங்களிப்புடன் தூர்வாரிய ஏரியில் மழைநீர் தேங்கியுள்ளதோடு அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக 2,250 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் கடந்த ஆண்டில் போதிய மழையின்றி ஏரி, குளங்களில் நீர் ஆதாரம் இன்றி வறண்டு காணப்பட்டது. மேலும், இதில் பெரும்பாலன ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரத காரணத்தால் மண்மேடாகவும் காட்சியளித்தது. அதனால், அவ்வப்போது பெய்யும் மழைநீர் கூட தேங்காத நிலையிருந்தது. இதனால் கோடைக்காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நீர் ஆதாரமும் 500 அடிக்கு மேல் சென்றுவிடும் சூழ்நிலையிருந்தது. இதைக் கருத்திற்கொண்டு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் மழை நீரை தேக்கி வைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை அப்படியே வீனாகமல் தேக்கி வைக்கும் வகையில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மும்மாரி திட்டத்தினை செயல்படுத்தினார். இத்திட்டம் மூலம் ஊருக்கருகே உள்ள ஏரிகளை தூர்வாருவதற்கு பெரிய அளவிலான தனியார் நிறுவனங்கள் மற்றம் தனியார் பங்களிப்புச் செய்யவும் முன்வந்தனர். அதேபோல், இந்த மாவட்டத்தில் காக்களூர், அரண்வாயல், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, தேவந்தவாக்கம், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 120 ஏரிகள் தனியார் பங்களிப்புடன் ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் பொதுமக்கள், காவல் துறை சார்பில் ரூ.8.05 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் கிராமத்தில் தாமரைக்குளத்தில் மும்மாரி திட்டம் மூலம் தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரப்பட்டது. இந்தக்குளம் 5.6 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்தைச் சுற்றிலும் தனியார் ஆக்கிரமித்து கடைகள் வைத்தும், கழிவு நீர் விட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலையில் வைத்திருந்தனர். எனவே, ரூ.12 லட்சத்தில் இதனை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதோடு குளத்தின் நடுவே பறவைகள் இளைப்பாறும் வகையில் வண்டல் மண்ணை கொண்டு மணல் திட்டுக்கள் உருவாக்கப்பட்டு பறவைகள் அமர்ந்து செல்ல ஏதுவாக மேடும் அமைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், இந்தக் குளத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபாதை அமைத்து அதன் ஓரப்பகுதியில் மழை நீர் பாயும் வகையில் மரக்கன்றுகளும் வைத்துள்ளனர். அதோடு குளத்தின் நீர் உள்வரத்து மற்றும் வெளியேற்றப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைக்காலங்களில் பெய்யும் நீரை அதிகளவில் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், இந்த குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அதை சுற்றியுள்ள காக்களூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் ஆழ்துளைக் கிணறுகளுக்கு தேவையான நீர் ஆதாரம் கிடைத்துள்ளது. அதோடு, நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறுகையில், இந்த மாவட்டத்தில் வருங்காலங்களில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. இதன் அடிப்படையில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகிய நீர் ஆதாரங்களை மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள் இணைந்து துர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் மும்மாரி மழை பொழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் சீரமைக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் தனியார் பங்களிப்புடன் இதுவரையில் 120 ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நீர் வரத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு முதல்வரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்துப் பணிகள் 62 ஏரிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், நிகழாண்டில் 30 பெரிய ஏரிகளில் தூர்வாரப்பட உள்ளது. அதேபோல், மும்மாரி திருவள்ளூர் என்ற முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு செய்து கொள்வதற்கு இணைய வழி பதிவு வசதியும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com