வன விலங்குகளுக்கும் வேண்டும் தண்ணீர்!

உலக தண்ணீர் தினத்தில் விலங்குகளுக்கான தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.
வன விலங்குகளுக்கும் வேண்டும் தண்ணீர்!


நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரால்தான் இந்த உலகம் அடுத்தப் போருக்கு தயாராகும் என்பது ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

புவிப்பரப்பின் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது எனப் புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும் குடிப்பதற்கு உகந்த தண்ணீரின் இருப்பு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதை மறுப்பதற்கில்லை. மும்மாரி பொழிந்த மேகமும் முடங்கிக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஆறுகள் இருந்த அரிச்சுவடி கூட அறிய முடியவில்லை. பல ஆறுகள் கழிவுநீர்க் குட்டைகளாகிவிட்டன. குளம், குட்டைகளும் குப்பைமேடுகளாக காட்சியளிக்கின்றன. 

ஏரிகள் சாக்கடை கழிவுநீரோடைகளாகவும், கூவமாகவும் மாறிவிட்டன. வெள்ளக் காலங்களில் உபரிநீரை சேமிக்க வழியுமில்லை. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழிறங்கி வரும் தண்ணீர், இந்தியாவின் கடைசி கோடி நிலப்பரப்பாக கீழ்மட்டத்தில் உள்ள தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழம் தோண்டியும் துளி தண்ணீர் கிட்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தண்ணீருக்காக குழாயடிச் சண்டைகளும், தண்ணீர் லாரிகளை துரத்துவதும், காலிக் குடங்களுடன் காத்திருப்பது, போராடுவது என்பது மனித குலத்துக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால், வாயில்லா ஜீவன்களான வன விலங்களுக்கு இத்தகைய கலாசாரம் தெரிந்திருக்கவில்லை. ஆதலால்தான், தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் விலங்குகள் உயிரை விடுவது வாடிக்கையாகிவிட்டது. காடுகளை அழித்து கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடங்களே அதற்கு சான்று.

நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்களின் சங்கமத்தைக் கொண்டுள்ள தமிழகத்தில் 13,462 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அடர்ந்த வனப்பரப்பு உள்ளது. மொத்த நிலப்பரப்பில் 30.92 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பெருமையுடையது. இங்கு 15 வன உயிரினச் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க்கோள காப்பகங்கள், 2 பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள், 4 புலிகள் காப்பகங்கள், ஒரு மரபியல் தொகுப்புத் தோட்டத்தையும் கொண்டுள்ளது. 

இவற்றில் 595 வகையான நன்னீர் விலங்குகள், 2,247 வகையான கடல் விலங்குகள், 1,898 வகையான நிலப்பரப்பு விலங்குகள், 177 வகையான ஊர்வன, 454 வகையான பறவைகள், 187 வகையான பாலூட்டிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இவற்றின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் 17 ஆற்றுப்படுகைகள், 61 பெரிய நீர்த்தேக்கங்கள், 3 மில்லியன் கிணறுகள் உள்ளன.  ஆண்டுக்கு சராசரியாக 950 மி.மீ. மழை பதிவாகிறது. வரும் 2025ஆம் ஆண்டில் வேளாண் அல்லாத குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக 589 டிஎம்சி தண்ணீர் தேவை என புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதனை பெறுவதற்கான வழிமுறைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது அரசின் அத்தியாவசிய கடமையாகும். ஒரு யானை உயிர்வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 200 லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், காடுகளுக்குள் போதிய நீரின்றி யானைகள் பரிதவித்து வருகின்றன. காட்டில் நீர் கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு வெளியேறி, நீரைத் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் புகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதேநிலைதான் இதர விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக நகர்ப்புற பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள ஈரநிலங்கள் மற்றும் ஏரிகள் ஆக்கிரமிப்புகளாலும், வண்டல் மண் படிவுகளாலும் நீராதாரத்தை இழக்க வேண்டியுள்ளது. இந்த ஈரநிலங்களும், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளும்தான் பல்வகையான உயிரின வாழ்க்கை சூழல் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக, பல வகை உயிரினத் தொகுதிகளுக்கும், தாவரத் தொகுதிகளுக்கும் அதன் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்பவையாக உள்ளன. இத்தகைய நீர்நிலைகளை உரிய முறையில் பாதுாக்க தவறியதால்தான் தண்ணீரைத் தேடி வனத்தை விட்டு விலங்குகள் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக வன விலங்குகள் தண்ணீர் தேடி நெடுஞ்சாலைகளில் வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இல்லையெனில், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மனிதன் மற்றும் விலங்குகளால் வனவிலங்குகளுக்கு துன்புறுத்தலும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, புலி, யானை, சிறுத்தை, மான்கள், மயில்கள், குரங்குகள், நரிகள் மற்றும் ஊர்வன வாகன விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

ஊருக்குள் நுழைந்து யானைகள் அட்டகாசம், வனப் பகுதியையொட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் என்ற செய்திகளை  எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் நேரிட்டுள்ள பேராபத்தே இதற்கெல்லாம் காரணம் என்பதை உணரவில்லை. வனத்தையே வசிப்பிடமாகக் கொண்ட விலங்குகள், ஊருக்குள் ஏன் வருகின்றன? என்ற கேள்வியை ஒவ்வொரு மனிதனுக்கும் தனுக்குள் எழுப்பி விடை காண வேண்டும். விலங்குகள் உண்மையில், காடுகளுக்குள் தான் இருக்கின்றன. மனிதர்கள்தான் காட்டைத் திருத்தி, கான்கிரீட் காடுகளாக மாற்றியுள்ளனர். காட்டின் பரப்பு சுருங்கிக்கொண்டே போகிறது. மற்றொருபுறம் விலங்குகள் வசிப்பிடத்தில் உணவும், தண்ணீரும் இல்லாத சூழலில், அவை என்னதான் செய்யும்?. உயிர்த் தேவைக்காக வனத்திலிருந்து வெளியே வந்துதானே தீரும். அவ்வாறு வெளியேறும் தருணங்களில்தான் உயிரிழப்பு தவிர்க்க முடியாமல் போகிறது. தண்ணீருக்கு வனவிலங்குகள் தங்களது உயிரை மாய்க்கும் கொடுமையை நிறுத்த வேண்டும் என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் தொடர் வலியுறுத்துலாக அமைந்துள்ளது.

தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் வனத்துறை சார்பில், 2018-19ஆம் ஆண்டில் 27 கசிவுநீர்க் குட்டைகள், 46 தடுப்பணைகள், 63 ஆயிரம் அகழிகள், 16 நீர்க்குட்டைகள் ரூ.7.47 கோடியில் அமைக்கப்பட்டிருப்பதாக மாநில அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாது, வனங்களும், மக்கள் குடியிருப்புகளும் சந்திக்கும் பகுதிகளுக்கு அருகே வனப் பகுதியிலேயே தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் லாரிகள் மூலம் கோடையில் தண்ணீர் நிரப்புவதாகவும் வனத்துறை கூறுகிறது.

இருப்பினும், ஆண்டுதோறும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி உயிரிழக்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. வனத்தின் ஆதாரமான விலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டால் மட்டுமே வனம் காக்கப்படும். விலங்குகளின்றி வனமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். உலக தண்ணீர் தினத்தில் விலங்குகளுக்கான தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com