Enable Javscript for better performance
Arignar Anna birthday special story பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா- Dinamani

சுடச்சுட

  

  பண்பின் சிகரம் அறிஞர் அண்ணா

  By முனைவர். ப. பாலசுப்பிரமணியன்  |   Published on : 14th September 2020 11:14 PM  |   அ+அ அ-   |    |  

  anna1

  திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாகப் போற்றப்படுவர் சி.என்.அண்ணாத்துரை. அனைத்துக் கட்சியினராலும் பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசான்.

  உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களான கிரேக்கத்தைச் சேர்ந்த டோமஸ்தெனி, இங்கிலாந்தின் எட்மண்ட் பர்க், அமெரிக்காவின் ராபர்ட் கிரின், இங்கர்சால், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் பெர்னாட்ஷா, மில்டன், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

  செப்டம்பர் 15 இன்று அறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்படும் அண்ணாத்துரை,  நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக  செப்டம்பர்  15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். காஞ்சிவரம் (Congeevaram) நடராஜன் அண்ணாதுரை என்பதன் சுருக்கமே சி.என்.அண்ணாதுரை.

  இவர் செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் தொடங்கினார். ஆனால், தன்னுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப்படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் வேலைக்குச் சென்றார். 1930-ல் அவரது 21 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. மனைவியின் பெயர் திருமதி. இராணி. திருமணத்திற்கு பிறகுதான் காலம் அவருக்கு பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பை வழங்கியது.

  1934-ல் பி.ஏ(ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

  தனது கல்லூரி வாழ்க்கையிலேயே அரசியலில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர் அண்ணா. 1934 ஆம் ஆண்டு திருப்பூரில் ஒரு இளைஞர் மாநாடு நடந்தது, பெரியாருடனான முதல் சந்திப்பு அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் அண்ணாதுரையை மிகவும் ஈர்த்தது. அதனால் பெரியாரோடு நீதிக் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்ட அண்ணா, தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார்.

  முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த கா.ந.அண்ணாதுரை அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். 

  திராவிடக் கட்சி, திராவிடக் கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார் கா.ந. அண்ணாதுரை. நீதிக் கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். பிற்காலத்தில் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தனியாகத் தொடங்கினார்.

  1928ல்  நேரு இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தியைப்  பயன்படுத்த பரிந்துரைத்தபோது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழி மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி, கடுமையாக எதிர்த்தார்கள்.  

  இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிலும்  கட்டாய மொழியாக ஹிந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. மட்டுமல்லாமல் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும்  அடைக்கப்பட்டனர். இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உள்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

  இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்த சமயம் அது. அப்போது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை இந்தியாவில் அகற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மிகவும் போராடியது. ஆனால், இந்த கட்சியில் பிராமணர்களும், வட இந்தியர்களும் ஆதிக்கம் அதிகம் செலுத்துவதாக பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட்  15, 1947-ஐ கறுப்பு தினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார். 

  'இந்தியாவின் சுதந்திரம்' இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று. அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால்  மட்டும் பெறப்பட்டது அல்ல என்று கூறிய அண்ணா, பெரியாரின் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். கால் நூற்றாண்டு காலம் பெரியாருடன் சமூகப் பணியாற்றிய அண்ணா, இந்திய சுதந்திரத்தின்போது பெரியாரின் கருத்துடன் மாறுபட்டார். வாக்கரசியலுக்கு வரக்கூடாது என்ற பெரியாரின் கொள்கைகளிருந்தும் மாறுபட்டவர். அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததையும் அண்ணாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1948ல்  நடந்த திராவிடக் கட்சியிலிருந்து  அண்ணா வெளியேறினார். திராவிடக் கட்சியை விட்டு வெளியேறிய அண்ணாவின் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் இணைந்து 1949ல் 'திராவிட முன்னேற்ற கழகம்' (தி.மு.க.) என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தனர்.

  பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணாவிற்கு  பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்" என்ற தனி கட்சி தொடங்கினாலும், பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.

  ஆழ்ந்த புலமையும், அரசியலில் அனுபவத்தாலும் தன் வசியக் குரலால், கவரும் எழுத்தால் தமிழகத்தில் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கினார். 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று முழங்கிய அண்ணா, தன் வாழ்நாளில் கடைசி வரை அதை கடைபிடித்தார்.

  1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியபோது, ஹிந்தி இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக அண்ணாவின் தலைமையில் கட்டாய ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் 'ஹிந்தி எதிர்ப்பு மாநாடு'  நடத்தப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவர் வருகையின்பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

  இதனைக் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு ஹிந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். அதன்பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டம் 1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.

  1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியா விடுதலை பெற்று குடியரசான பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சர் அண்ணாதுரை ஆவார். 

  "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று சொன்ன பண்பாளர் அண்ணா, இன்று அரசியலில் எதிர்க்கட்சிகளை எப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அன்று  அரசியலில் தனக்கு எதிர் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை அண்ணா விமர்சிக்கும் போது “காங்கிரஸ் கட்டி முடித்த கோபுரம்! திமுக கொட்டிக் கிடக்கும் செங்கற்கள்” என்று கூறி திமுகவின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார். முதன் முறையாக திமுக ஆட்சியைப் பிடித்தபோது கூட இத்தனை சீக்கிரம் மக்கள் நம்மை வெற்றிபெற செய்திருக்கக் கூடாது என்று சொன்னவர் அண்ணா.
   
  ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3,  1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது.

  பெரியாரின் ஒரு சில கருத்துகளில் மாற்றுக் கருத்து கொண்டவராக இருந்தாலும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி போன்ற முக்கிய கொள்கைகளில் எள்ளளவும் சமரசமின்றி செயல்பட்டார். 

  நாடாளுமன்றத்திலேயே தனி நாடு கேட்டு கர்ஜித்த அண்ணா, பிற்காலத்தில் நடந்த அரசியல் சூழல், காங்கிரசால் கொண்டுவரப்பட்ட தேசத்துரோகச் சட்டம் ஆகியவற்றாலும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்ந்த உயிர்சேதங்களை கருத்தில் கொண்டும் திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். ஆனாலும், அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருப்பதாக அதே உரையில் குறிப்பிட்டார்.

  பெரியாரின் கொள்கைகளை முறையாக மக்களிடம் கொண்டு சென்றதில் அண்ணாவின் பங்கு அளப்பறியது. அவரது பேச்சும், எழுத்தும், படைப்புகளும் அதற்கு பெரிதும் உதவின. இந்தியாவின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்ட அண்ணா பிற்காலத்தில் இந்திய நாடாளுமன்றத்திலேயே தனி திராவிட நாடு கோரிய முதலும் கடைசியுமான மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.

  தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.

  ஒருமுறை, கத்தோலிக்க சமயத் தலைவர் போப் ஆண்டவரைத் சந்திக்கும் வாய்ப்பு அண்ணாவுக்குக் கிடைத்தது. சந்திக்கும் ஒவ்வொருவரும் போப் அவர்களிடம் ஒரு வரம் கேட்கலாம் என்று கூறப்பட்டது. கோவா விடுதலைப் போராட்ட வீரர் ‘ரானடே’ என்பவர் போர்ச்சுகீசிய அரசால் சிறை செய்யப்பட்டு நீண்ட காலமாகச்  சிறையில் வாடிக் கொண்டிருந்தார், தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ எதையும் கேட்கவில்லை அண்ணா, ரானடே விடுதலை செய்ய உதவுமாறு போப் ஆண்டவரிடம் வேண்டினார். அண்ணா கேட்ட வரம் போப் ஆண்டவரை வியப்பில் ஆழ்த்தியது. தமக்காக எதுவும் கேட்காமல், தமக்குத் தொடர்பில்லாத ஒருவருக்காக வரம் வேண்டிய அண்ணாவின் அன்பு உள்ளம் போப் அவர்களைக் கவர்ந்தது. போப் ‘நிச்சயம் உதவுவேன்’ என்றார். ‘ரானடே’ விடுதலை ஆனார்.

  ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமைக்குரியவர். பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக  கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. 1962ல் நடந்த மாநிலங்களவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா  என்ற நாடு’ என்று உரையாற்றினார்.  

  அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது.  “அண்ணா திராவிட நாடு, திராவிடருக்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.

  அரசியல் வாழ்க்கையைத் தவிர, நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கிய அண்ணா, அதன் மூலம் சமுதாயத்தில் சீர்திருத்தத்தை செய்தார். அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில்  அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம்  இவரின் முக்கிய படைப்புகளாகும்.

  1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத்  திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாய் லாபத்தை தந்தது. அந்த காலத்தில் இது பெரிய தொகையாகும்.

  அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி,  கே.ஆர். ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்  போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கப் பெற்றது.

  இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை புற்றுநோயால் அவதிப்பட்டு  மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். நூல் வாசிப்பு பழக்கத்தை தனது வாழ்வின் கடைசி நாள் வரை வைத்திருந்த அண்ணா, தான் இறக்கும் தருவாயில் கூட மருத்துவர் அனுமதியுடன் ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டுதான் அறுவை அரங்கிற்கே சென்றார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி  3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம்  என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப்  பெற்று விளங்கிய அண்ணாவின் மறைவிற்கு பின், திமுகவில் இருந்து பிரிந்து சென்ற எம். ஜி ராமச்சந்திரனால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அ.தி.மு.க.) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 
  அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  சென்னையில் உள்ள தற்போதைய திமுக தலைமைச் செயலக கட்டடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அண்ணா சிலையும் அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” 2010 ஆம் ஆண்டு  சென்னையில்  நிறுவப்பட்டது.

  அண்ணாவின் படைப்புகள்:

  1939  – கோமளத்தின் கோபம்
  1942  – களிங்கரணி
  1943  – பார்வதி பி.ஏ.
  1943 – சந்ரோதயம்
  1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
  1946 – வேலைக்காரி
  1946 – குமரிகோட்டம்
  1948 – நல்ல தம்பி
  1948 – ஓர் இரவு
  1953 – சொர்க வாசல்
  1955 – சூர்யாகுமாரி
  1965 – தழும்புகள்
  1970 – இன்பஒளி

  படங்கள்:

  1948 – நல்லதம்பி
  1946 – வேலைக்காரி
  1948 – ஓர் இரவு
  1956 -ரங்கூன் ராதா
  1963 – பணத்தோட்டம்
  1967 – வாலிப விருந்து
  1946 – குமரி கோட்டம்
  1973 – ராஜபாட் ரங்கதுரை
  1982 – நீதிதேவன் மயக்கம்

  அண்ணாதுரை திராவிட இயக்க கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டிருந்தார். அவர் மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார். ஆனால், என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ, எதிர்த்ததோ இல்லை. மாற்றுக் கருத்துகளையும் மதிக்கும் மாண்புமிக்கவர். கொள்கைகளில் பற்றும், தீவிரமும் கொண்ட அண்ணா மனதளவில் மென்மையானவர். அவர் அரசியல் வாழ்வில் யாரையுமே அவமதித்தில்லை. கடுஞ்சொல் சொன்னதில்லை. 

  'குயில்' சிற்றிதழில் தன்னை கடுமையாக விமர்சித்த பாவேந்தருக்கு 25,000 ரூபாய் பண முடிப்பு அளித்தவர் அண்ணா. பெரியாரிடமிருந்து பிரிந்த பின் மேடைதோறும் தன்னை தாக்கி பேசிய பட்டுக்கோட்டை அழகிரியார் நோயுற்றிருந்த போது ஓடிச்சென்று உதவியவர் அண்ணா.

  'ஒன்றே குலம், ஒருவனே தேவன்', 'கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்'    
  என்பது அவர் கட்சியின் கொள்கையாக பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் " நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன் " என்றார்.

  [கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

  நூலக அறிவியல் துறைத் தலைவர்,

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp