அறிவியல் ஆயிரம்: ஆண்டின் நீண்ட பகல் நாள் இன்று!

இந்த ஆண்டின் மிக நீண்ட நாளான கோடைக்கால சங்கிராந்தி (Summer Solstice) இன்று (ஜூன் 21) நிகழ்கிறது. இது ஆண்டின் நீண்ட பகல் நாளாக இருக்கும். 
அறிவியல் ஆயிரம்: ஆண்டின் நீண்ட பகல் நாள் இன்று!

இந்த ஆண்டின் மிக நீண்ட நாளான கோடைக்கால சங்கராந்தி (Summer Solstice) இன்று (ஜூன் 21) நிகழ்கிறது.

நீண்ட பகல் நேர நாள் என்பது என்ன?

வருடத்தில் எந்த நாளில் அதிகமான சூரிய ஒளி தெரிகிறதோ/ சூரியன் உதயம் விரைவாகவும் மற்றும் மறைவது தாமதமாகவும் நடக்கும். இந்த  நாளில், அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும், இந்த நாளை நீண்ட பகல் நேர நாள் என்றும் அறிவியலின் படி சங்கராந்தி (Soltice) என்றும் அழைக்கின்றனர். இந்த புதிரான ஆர்வம் தூண்டும்  நிகழ்வு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20/ ஜூன் 21/-ஜூன் 22 ல் ஏதாவது ஒரு நாளில்  நிகழ்கிறது.

இது, சூரியன் நேரடியாக வெப்பமண்டல கடக ரேகைக்கு 23.5 டிகிரிக்கு மேல் இருக்கும்போது நிகழ்கிறது. கோடைக்கால சங்கிராந்தியின் மற்றொரு பெயர் எஸ்டிவ் சங்கராந்தி (Estival solstice) அல்லது நடுஇரவு நாள் (midsummer) வடதுருவத்தில்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டின் நீண்ட பகல் நேர நாள் / கோடை சங்கராந்தி ஜூன் 21 ம் நாள் அன்று நிகழ்கிறது. இது அந்தந்த ஊரின் நேர நிர்ணயப்படி கொஞ்சம் மாறும். கோடை சங்கிராந்தி, துல்லியமாக பூமியின் வடக்கு பகுதியில், 03:32 UTC (Universal Coordinated Time) நிகழ்கிறது. இந்தியாவில் காலை 9.02 மணிக்கு நிகழும். 

இது பூமியின் வடக்குப் பகுதிக்கு கோடைகால துவக்க நாள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே ஜூன் 21 ஆம் நாளை கோடைகால சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தெற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கு இன்றிலிருந்து பகல் நேரம் குறையத்தொடங்குகிறது. 

சங்கராந்தி என்ற சொல் ஒரு லத்தீன் சொல். ‘சோல்’ என்றால் ‘சூரியன்’ (Sol’ means ‘sun’ )என்றும், ‘சிஸ்டெர்’ (‘sistere’) என்றால் ‘அசையாமல் நிற்க வேண்டும்’ என்றும் பொருள்.

இது எப்படி நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது?

சங்கராந்தி என்பது ஒரு வானியல் நிகழ்வு ஆகும். இது ஆண்டுக்கு இரண்டு முறை, பூமியின் ஒவ்வொரு அரைக்கோளத்திலும் (வடக்கு மற்றும் தெற்கு) ஒரு முறை நிகழ்கிறது. கோடையில் (ஜூன்) நிகழ்வது, கோடைகால சங்கராந்தி என்றும், மற்றொன்று குளிர்காலத்தில் (டிசம்பர்) நிகழ்வது குளிர்கால சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வானியல் நிகழ்வு வட துருவத்தில் சுமார் 23.4° (23 ° 27´N) சூரியனை நோக்கி சாய்ந்தால் நிகழ்கிறது. எனவே, இந்நிலையில், சூரியக்கதிர்கள் பூமியின் கடக ரேகையின் மேல் செங்குத்து கதிர்கள் (23 ° 27´ N) நேரடியாக மேல்நோக்கி உள்ளன. கோடைகால சங்கராந்தி இலையுதிர்கால உத்தராயணம் வரை நீடிக்கும். கோடையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் சூரியன் இன்றிலிருந்து தெற்கு நோக்கி நகரத்துவங்கும்.

ஜூன் 21 அன்று பூமியின் அச்சு சூரியனை நோக்கி அதிகபட்ச சாய்வின் காரணமாக வடக்கு அரைக்கோளம் சூரியனில் இருந்து அதிக ஒளியையும் வெப்பத்தையும் பெறுகிறது, தெற்கு அரைக்கோளம் முற்றிலும் எதிர் அனுபவத்தைக் கொண்டுள்ளது.

பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் 24 மணி நேரம் என்றாலும் துல்லியமாகச் சொல்வதென்றால் 23 மணி, 56 நிமிடம், 4.09053 நொடிகள். பூமியின் சுற்றளவும் 40, 075 கி.மீ. இதன் மையக்கோட்டில் சுற்றும் வேகம் என்பது மணிக்கு 1609.34 கி.மீ வேகத்தில், நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. இருப்பினும் வட மற்றும் தென் துருவங்களில் இதன் சுற்று வேகம் பூஜ்யம்தான்.

பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்வாக உள்ளதாலேயே பருவக்காலங்களும், மழைப்பருவமும் ஏற்படுகின்றன. மேலும் 23.5 டிகிரி சாய்வாக சூரியனைச் சுற்றி வரும்போது, சில சமயம் ஒரு பக்கம் சூரிய ஒளி அதிகமாகவும், சில பகுதிகளில் சூரிய ஒளி குறைவாகவும் படும். இதுவே பருவ காலம், சமகால நாட்கள் மற்றும் சங்கராந்தி நாட்களுக்கு காரணம் ஆகும்.

இந்தியாவின் சங்கராந்தி இன்று  காலை 9.02க்குத் துவங்குகிறது. இதன்படி, வடகோளத்தின் கோடை இன்றிலிருந்து துவக்கம். தெற்குப் பகுதி மக்களுக்கு குளிர்காலம் இன்றிலிருந்து ஆரம்பம். இன்று சூரியன் பூமியின் கடக ரேகைக்கு மேல் இருக்கும், இன்றைய பகல் நேரம் என்பது கொல்கத்தாவில் 13 மணி, 31 நிமிடங்கள்.

இந்த நாள் ஆண்டின் இந்த மிக நீண்ட நாள், நீண்ட பகல்  நேர நாள் என்று குறிப்பிடப்படுகிறது. அயல்நாடுகளிலும்  பல கலாசாரங்களிலும் இந்நாள்  மிகவும் குறிப்பிடத்தக்க நாளாகக் கருதப்படுகிறது. எனவே, அந்த நாடுகளில் இதனை திருவிழா போல மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.  

உதாரணமாக, பண்டைய சீனாவில், கோடைகால சங்கராந்தி என்பது பெண்மையையும் ‘யின்’ சக்திகளையும் அவதானிக்க நியமிக்கப்பட்ட நாள். வில்ட்ஷயரில் உள்ள பண்டைய தளமான ஸ்டோன்ஹெஞ்சில் உலகின் மிகப்பெரிய சங்கராந்தி நிகழ்வை ஒருவர் காணலாம்.

இதனை லண்டனில் உள்ள மக்கள் திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர். லண்டன், சாலிஸ்பெரி என்ற ஊரில் உள்ள பழங்கால கல்தூணின் (Stone Henge) வழியே இந்த நாளில் சூரியனைப் பார்த்து மகிழ்கின்றனர். இது கோடை மற்றும் குளிர்கால சங்கிராந்திகளில் சூரியனின் இயக்கத்துடன் ஒத்துப்போகிறது. இது சங்கிராந்தியைக் கவனிக்க மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது. கி.மு 3000 ம் ஆண்டு இந்த இடம் ஒரு புதைவிடமாகவே இருந்தது. பின்னர் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வேறொரு குழுவினர் புதைவிடமாகப் பயன்படுத்தினர். இதன் கலை நுணுக்கம் மிக நேர்த்தியானது.

பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்திற்கு ஒரு மாத கவுண்ட்டவுனாக சங்கிராந்தியைப் பயன்படுத்தினர் என்று குறிப்பிடுகிறது. ஸ்வீடனில், சங்கராந்தி நடுஇரவு நாள் என்று அழைக்கப்படுகிறது மற்றும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இதனை வானவியல் கோடை என்றும் கூறுகின்றனர். கோடைகாலத்தை கருவுறுதலின் பருவமாக வரவேற்கின்றனர்.

ஒரு பிரகாசமான நாள் சில இருண்ட கதைகளுக்கான களமாகவும் அமைத்துள்ளது.

சங்கிராந்தியில் என்ன நடக்கும்?

வரலாறு முழுவதும் மனிதர்கள், கோடைகால சங்கிராந்தியை நெருப்பு மற்றும் சடங்கு நடனங்கள் போன்ற சடங்குகளுடன் கொண்டாடினர்.

ஜூன் மாத சங்கிராந்தியில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கு வடக்கே 23.5 டிகிரி அட்சரேகை கோடான கடக ரேகையில் விழுகின்றன. புவியியல் ரீதியாகப் பார்த்தால் இது ஆண்டு முழுவதும் சூரியன் நேராக மேல்நோக்கி (அடிவானத்திற்கு மேலே 90 டிகிரி) தோன்றும் வடக்கு திசையாகும். வடக்கு அரைக்கோளத்தில், பகல் அதன் வருடாந்திர உச்சத்தை அடைகிறது. மேலும் சூரியன் அதன் மிக நீண்ட மற்றும் மிக உயர்ந்த பாதையை வானத்தின் வழியாகச் செல்கிறது.

நமக்கு சூரிய ஒளி மற்றும் பருவங்கள் இருப்பதற்கான காரணம், பூமி சூரியனை முழுமையாக நிமிர்ந்து சுற்றுவதில்லை. அதற்குப் பதிலாக, நமது பூமிக்கோள் அதன் அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு அரைக்கோளம் சூரியனின் ஒளியையும் சக்தியையும் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com