ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வெண்புள்ளிகள் என்பது வெறும் நிறமிழப்பே!

வெண்புள்ளிகள் ஒன்றுமே இல்லை, அது வெறும் நிறமிழப்பு மட்டுமே. அதையும் சரி செய்துவிட முடியும் என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. 

News image
Updated On :24 ஜூன் 2021, 11:30 am

உயிருக்கு ஆபத்து எதையும் தராது, ஆனால் மனரீதியாக உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். எத்தனை மனவலிமை கொண்டவர்களையும் ஆட்டம் காண வைத்துவிடும். தோலில் ஆங்காங்கே வெளிறிய பழுப்பு நிறத்தில் புள்ளிகளாக இது தோன்றும். யாரும் இதன் வருகையை விரும்பவில்லை. எல்லோருக்கும் வேண்டாத விருந்தாளியாகவே வருகிறது. ஆம் வெண்புள்ளிகள். இதனை லூகோடெர்மா, விட்டிலைகோ என்றும் கூறுவார்கள்.

ஆண், பெண், மதம், இனம், மொழி, நாடு, கண்டம் என எந்த வித்தியாசமும் இன்றி எல்லோருக்கும் எந்த வயதிலும் வெண்புள்ளிகள் தோன்றுகிறது.

இன்று வெளிப்புற அழகை மெச்சுகிற ஓர் உலகில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சின்னதாக ஒரு முகப்பரு வந்துவிட்டாலே பதறிவிடும் இவ்வுலகில் வெண்புள்ளிகள் வந்துவிட்டால்... அவ்வளவுதான். அவர்கள் அடைகிற வேதனைக்கு வானம் போல் எல்லை இல்லாமல் போய் விடும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, வெண்புள்ளிகள் தோலில் வருவதால் அது பிறரது பார்வையைத் திருப்புகிறது. இரண்டு, எவ்வளவு அழகையும் வெண்புள்ளிகள் சிதைத்து விடுகின்றன.

"என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாக உடைந்துவிடுகிறது"

"என்னைப் பார்த்து மற்றவர்கள் கமெண்ட் அடிக்கும்போது நான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறேன்"

"அலட்சியப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினாலும் கண்ணாடி என்னை அதற்கு அனுமதிப்பதில்லை"

வெண்புள்ளிகள் உள்ளவர்கள் வெளிப்படுத்திய குமுறல்களில் சில இவை. சிலர் வெளிப்படையாக அழுதுவிடுகின்றனர். பலர் வேதனைகளையும் வலிகளையும் சுமந்துகொண்டு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

உலகமே எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். ஆனால், மக்கள் இன்று எங்களை வெறித்துப் பார்ப்பது நெருப்பால் சுடுகின்ற உணர்வைத் தருகிறது. ஆமாம், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்கிறோம் என்ற உணர்வுதான் வெண்புள்ளிகள் உள்ளவர்களின் பிரதான பிரச்னையாக உள்ளது.  இது வெண்புள்ளிகள் உள்ளவர்களின் சுயமதிப்பீட்டை பாதிக்கிறது.

மனிதன் சிந்திப்பது, உணர்வது, பேசுவது, செயல்படுவது ஆகிய அனைத்தும் அவனுடைய சுயமதிப்பீட்டை ஒட்டியே அமைகின்றன. இந்த சுயமதிப்பீட்டில் ஏற்படும் மாற்றம் அதற்குத் தொடர்புடையதாக இருக்கும் அவரின் நடத்தையிலும் மாற்றத்தை துவக்கிவைத்து விடுகிறது.

ஒருவரின் சுயமதிப்பீடு பலவீனமானதாகவோ அல்லது தெளிவற்றதாகவோ இருந்தால் அது அவரது வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான இயல்பும் அவரது முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, முகத்தில், கைகளில் எனப் பிறர் கண்களுக்குத் தெரியும் இடத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சம்பந்தப்பட்ட நபரை உளவியல் ரீதியாகவும் ஆழமாகப் பாதிக்கிறது. இது கல்வியில், வேலைவாய்ப்பில் சேர்வதற்கான திறனில் சோர்வையும் விரக்தியையும் கொண்டு வந்து சேர்க்கிறது. 

பெரும்பாலானோர் தங்களுக்கு வெண்புள்ளிகள் இருப்பதை அவமானமாகவே உணர்கின்றனர். இதன் விளைவாக சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர்.

தனக்கு வெண்புள்ளிகள் இருப்பதால் தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்தில் சமூக நிகழ்வுகளில் இருந்து தாமாகவே இவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இவை எல்லாம் வெண்புள்ளிகள் குறித்து அவர்கள் பெறுகிற அரைகுறைத் தகவல்களால் ஏற்படுகின்ற விளைவுகள்.

அதேவேளையில் வெண்புள்ளிகள் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு அவர்களின் நடத்தையில் பிரமிக்கத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. எனவே, வெண்புள்ளிகள் குறித்து அவர்கள் எங்கிருந்து எத்தகைய தகவல்களைப் பெறுகிறார்கள் என்ற அம்சம்தான் வெண்புள்ளிகள் உள்ளவர்களின், அவர்களது உறவினர்களின் நடத்தையைத் தீர்மானிக்கிறது. ஆகவே, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும்போது வெண்புள்ளிகள் பற்றி ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் தவறான கருத்துகளை அகற்ற முடியும். இப்போதைய உடனடித் தேவையும் இதுதான்.

வெண்புள்ளிகள் ஒன்றுமே இல்லை, அது வெறும் நிறமிழப்பு மட்டுமே. அதையும் சரிசெய்துவிட முடியும் என்ற உண்மையை பலரும் உணரத் தொடங்கும்போது வெண்புள்ளிகள் உள்ளவர்களின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியும்.

இப்போது வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கும் இனி வெண்புள்ளிகள் வருபவர்களுக்கும் இலகுவான வாழ்க்கைப் பாதையை இது அமைத்துக் கொடுக்கும்.

இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் வெண்புள்ளிகள் குறித்த உண்மைத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் 2022 ஜூன் மாதம் முதல் 2023 ஜூன் வரை தமிழ்நாடு முழுவதும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்த முயற்சி நம் எல்லோரின் ஒத்துழைப்போடு வெற்றி பெறும்போது 2023 ஆம் ஆண்டு வெண்புள்ளிகள் பற்றிய விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறும். இதே முயற்சியைப் பிற மாநிலங்களுக்கும் கொண்டு சென்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உலகின் முதல் நாடாக நமது இந்தியாவை உருவாக்குவோம். இந்த உன்னதமான பணியில் அனைவரும் இணைய அன்போடு அழைக்கிறோம். 

[ஜூன் 25 - உலக வெண்புள்ளிகள் தினம்]

[கட்டுரையாளர் - செயலாளர், 
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் -இந்தியா]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.