பல்திறன் வித்தகியாய் விளங்கும் ஈரோடு மாணவி

ஈரோட்டைச் சேர்ந்த குறளினி என்ற மாணவி திருக்குறள் காட்டும் வழியில் வாழ்வை கட்டமைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
மாணவி குறளினி
மாணவி குறளினி
Published on
Updated on
3 min read

ஈரோட்டைச் சேர்ந்த குறளினி என்ற மாணவி திருக்குறள் காட்டும் வழியில் வாழ்வை கட்டமைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

ஈரோடு நகரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தனபாக்கியம் தம்பதியரின் மகள் குறளினி. 10 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் இளம் வயதிலேயே பல்வேறு துறைகளில் தனித்திறமை பெற்று வித்தகியாய் விளங்குகிறார்.

திருவள்ளுவர் தினத்தில் பிறந்ததால் இல குறளினி என பெற்றோர் பெயரிட்டுள்ளனர். இவர் திருக்குறளில் அதிக ஈடுபாடுடன் திகழ்ந்து வருகிறார். பள்ளி மற்றும் கிராமிய நண்பர் சங்கம், திருக்குறள் மன்றம் நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறார். பேச்சுப் போட்டியிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.
ஒளவை ஆத்திசூடி, பாரதியின் புதிய ஆத்திசூடி ஆகியவற்றை மனப்பாடமாக ஒப்புவிப்பார். ஒப்புவித்தல் போட்டியில் சிறப்புப் பரிசினை பெற்றிருக்கிறார். கொன்றை வேந்தன், நல்வழி மூதுரை போன்ற பாடல்களையும் இப்போது ஒப்புவித்து வருகிறார்.

தன்னுடைய முதல் படைப்பு "என் ஆத்திச்சூடி". எட்டாம் வகுப்பில் ஈரோடு அரசு நவீன நூலகத்தில் தனது நூலை வெளியிட்டுள்ளார். அன்பே அழகு, இசை இனிது, உண்மையே உயர்வு, ஊருக்கு நன்மை செய், எளியோருக்கு உதவு, ஏடுகள் படி, ஓசையை இசையாக்கு கற்றோரை போற்று, காடு காக்க, கேட்பது நன்று, கைகளை நம்பு, கொள்கையுடன் வாழ். சான்றோரைப் பின்பற்று, சிகரம் தொட முயல், சுற்றம் சூழ வாழ், சேர்ந்து வாழ்வது சிறப்பு, சோம்பலை விடு, ஞானத்தை வளர்த்திடு, திசையெட்டும் செல், தெய்வம் ஒன்றே, தேசம் போற்று, தைரியம் கொள், தொன்மை தமிழே, தோல்வியால் துவளாதே, நகையே புன்னகை, நித்தம் நித்தம் தவம் செய், நீர் நிலைகளே நம் சொத்து, நூல் நிலையம் செல், நெஞ்சமே கண்ணாடி, நேரம் போற்று, நோக்கமே ஆளுமை, நோய்க்கு மருந்து அன்பு, பிறர்நலம் பேண், பெண்மை போற்று, பேச்சுக் கலையை வளர்த்துக் கொள், மூச்சுப் பயிற்சிகொள், மெய்ஞானம் போற்று, மேன்மையடை,  வாழ்வு போற்று, வீரம் போற்று. இதுபோன்ற தனது பாடல் வரிகளின் மூலம் தனது படைப்பின் வாயிலாய் அனைவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் குறளினி.

ராமாயண, மகாபாரதத்தில் புலமை

ராமாயண, மகாபாரத இதிகாசங்களை முழுமையாய் கற்றுத்தேர்ந்து அனைத்து கதாபாத்திரங்களையும் விரிவாக விளக்கி உரைக்கும் வண்ணம் புலமை பெற்றிருக்கிறார். ராமாயணக் கதைச் சுருக்கத்தை ஏழாம் வகுப்பிலேயே அழகாக எழுதி தன் தமிழ் ஆசிரியரிடம் ஒப்படைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

யூடியூப்

Kuralamudhu என்ற யூடியூப் சேனலை உருவாக்கி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் தினம் ஒரு பாடலாக வெளியிட்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். தற்போது வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றினை தனது யூடியூப் செயலியில் வெளியிட்டு வருகிறார்.

கதைசொல்லி

தமிழகத்தில் உள்ள சிறந்த கதைசொல்லிகள் நடத்தும் பல பயிலரங்கில் தொடர்ந்து கலந்து கொண்டுவருகிறார். இவரும் ஒரு கதை சொல்லியாக உருமாறி திருக்குறள், நீதிநெறிக் கதைகள் போன்றவற்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். தனது தொழில்நுட்ப அறிவின் மூலம் சுயமாகவே இவை அனைத்தும் எடிட் செய்து சிறப்பாக பதிவேற்றம் செய்து வருகிறார். 

மாணவி குரளினி வீட்டில் உள்ள நூலகம். 
மாணவி குரளினி வீட்டில் உள்ள நூலகம். 

நிகழ்ச்சித் தொகுப்பாளர்

அரசுப் பள்ளிக் குழந்தைகளின் சாதனையை விளக்கும் ஆவணப் படம் "உன்னை அறிந்தால்". அதுபோல் ஈரோடு மாவட்ட மலைவாழ் குழந்தைகளின் வாழ்வியலை விளக்கும் படம் "காட்டின் மொழி" இந்த ஆவணப்படத்தை அவரது தாயார் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு பல மாதங்கள் சென்று ஆவணப்படத்திற்கு உதவி புரிந்ததோடு மட்டுமல்லாது பட வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி நெறியாள்கை செய்து சிறப்பான பாராட்டைப் பெற்றிருக்கிறார் குறளினி.

இரண்டாவது படைப்பு

கரோனா விடுமுறையில் தனது இரண்டாவது படைப்பான "உறவின் உயிர்ப்பு" என்ற புத்தகத்தை படைத்து உறவுகள் புடைசூழ தனது பிறந்த நாளாம் திருவள்ளுவர் தினத்தில் வெளியிட்டுள்ளார். உறவுகள் பாராட்டும் வண்ணம் தாத்தா பாட்டியின் உறவு, அத்தை மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அக்கா, தங்கை, தம்பி உறவுகள் தன் வாழ்வை எப்படி உயிர்ப்பாக்குகிறது என்பதை தனது படைப்பின் மூலம் வெளியிட்டு அனைவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இல்லத்தில் நூலகம்

தனது இல்லத்தில் "குறள் தமிழ்" என்ற நூலகத்தை கட்டமைத்து தொடர்ந்து வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது டாக்டர் எம்எஸ் உதயமூர்த்தியின் "எண்ணங்கள்" புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறார்.

ஆன்மீக நாட்டம் 

சிறுவயதிலேய ஆன்மீக நாட்டம் கொண்டவர் சத்யசாயி அமைப்பு நடத்தும் பாலவிகாஸ் வகுப்பில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறார். 

கரோனா விடுமுறையில் 18 நாள் பயிற்சி வகுப்பு பகவத் கீதை வகுப்பில் பங்கேற்று சான்றிதழோடு பகவத் கீதையும் கற்றுத் தேர்ந்து இருக்கிறார். மனிதவாழ்வின் விழுமியங்களையும் நற்பண்புகளையும் மனித வாழ்வின் குறிக்கோள் எது என்பதை அதன் வாயிலாக உணர்ந்துகொள்ள தொடங்கியிருக்கிறார்.

தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி பாசுரங்களை, இறைவன் துதிப்பாடல்களை மனப்பாடம் செய்து பாடி வருகிறார். தன்இல்ல நவராத்திரி விழாவிற்கு தலைமை ஏற்று தன் அண்டை அயலார் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் பக்திப் பாடல்களை கற்றுக் கொடுத்தும் நாடகம், நடிப்பு இவற்றில் பயிற்சி கொடுத்து சிறந்த ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது பாரதியார் கவிதைகளை மனப்பாடம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

சமூகசேவையில் ஈடுபாடு

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், ஆதரவற்றோருக்கு உதவி செய்தல், மரம் நடுதல் நிகழ்வில் பங்கேற்பது போன்ற சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த செயல்பாட்டிற்காக ஏழு மாவட்டங்களை (கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல்) உள்ளடக்கிய மண்டலம் 17ல் Out Standing Junior Jc Award 2021 என்ற உயர்ந்த விருதை இந்த ஆண்டு பெற்றிருக்கிறார். ஹலோ எப்.எம்-இல் சிறார் படைப்பாளிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

யோகா ஆர்வம்

வேதாத்திரி மகரிஷி வழங்கும் முழுமை நல வாழ்வுக்கான மனவளக்கலை பயிற்சி யோகா, தவம் இவற்றைக் கற்றுக் கொண்டு நாள்தோறும் தனது உடல் நலம், மன வளம், உயிர் வளம் செழிக்க யோகா பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.

பல்துறை வித்தகி

பத்தாம் வகுப்பு படிக்கும் குறளினி புத்தக வாசிப்பாளராக, சிறந்த கதை சொல்லியாக, தமிழ் இலக்கியத்தில் நாட்டம் உடையவராக, மனது ஆன்ம ஒளிக்காக பக்திமார்க்கத்தில் தன்னை அர்ப்பணிப்பவராக, பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் உடையவராக, வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்பவராக, குழந்தைகளுக்குரிய குழந்தைமையோடு வாழ்வை அழகாக வாழ்வதில் உயிர்ப்போடு மிளிர்ந்து வருகிறார் அன்பு குறளினி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com