வேளாண் சட்டங்கள் ரத்தும் பாஜகவின் தேர்தல் கணக்கும்!

தில்லி எல்லையில் குளிரிலும், கரோனா பரவலாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாண்டபோது சட்டங்களை திரும்பப் பெறாத அரசு, இப்போது ரத்து செய்வதற்கான காரணம் என்ன?
வேளாண் சட்டங்கள் ரத்தும் பாஜகவின் தேர்தல் கணக்கும்!
Published on
Updated on
2 min read

நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறைப்படி திரும்பப் பெறப்படும் என்றார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 என்ற மூன்று சட்டங்களை கடந்த 2020 ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த மூன்று சட்டங்களும் விவசாய விரோத சட்டங்கள் என நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடங்கினர். குறிப்பாக இந்த சட்டங்களால் அதிகம் பாதிப்புக்குளாகும் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களின் விவசாயிகள் ஒன்றிணைந்து ரயில் மறியல், சாலை மறியல் எனப் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதற்கெல்லாம் மத்திய அரசு செவி சாய்க்காததால், 2020 நவம்பர் 29ஆம் தேதி தில்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டரில் குடும்பங்களுடன் தேவையான உணவுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு படையெடுத்தனர்.

அவர்கள் அனைவரும் ஹரியாணா, உத்தரப் பிரதேச எல்லைகளிலேயே ஆயுதப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சற்றும் மனம் தளராத விவசாயிகள் தில்லி எல்லைகளிலிருந்தே தங்களின் போராட்டங்களை தொடங்கினர்.

இந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் மாநிலங்களிலும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கிடையே விவசாயிகளை சமரசம் செய்ய மத்திய அரசு எடுத்த அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளும் தோல்வியையே தழுவின.

மறுபக்கம், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதன்விளைவாக நாடாளுமன்றமே முடங்கின.

தில்லி எல்லையில் குளிரிலும், கரோனா பரவலாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாண்டபோது மத்திய அரசு அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளானது. அப்போதெல்லாம் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறாத மத்திய அரசு இன்று திரும்பப் பெறுவதற்காக காரணங்கள் என்ன?

இன்னும் இரண்டே மாதங்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா பேரவைத் தேர்தல்கள், 10 மாதங்களில் ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இதில், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாப் பேரவையில் 117 தொகுதிகள் என மொத்தம் 520 தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் லட்சக்கணக்கானோர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பாஜகவின் ஆட்சி நடைபெற்று வந்தாலும், வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் கணிசமான வாக்குகள் பறிபோகும் நிலை எழுந்துள்ளன.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பதவியை ராஜிநாமா செய்து புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் பாஜகவுடன் வருகின்ற தேர்தலில் கூட்டணி வைக்கவும் தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலம், ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், பஞ்சாப் மாநிலத்திலும் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்ற திட்டத்துடனே சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்திருக்ககூடும்.

இது மட்டுமின்றி, இரு மாநிலத் தேர்தலில் பெறும் வெற்றியே அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆயுதமாக இருக்கின்றது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமராவதற்கு உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றிபெறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பாஜகவின் இந்த திட்டம் தேர்தலுக்கு வலுசேர்க்குமா அல்லது மக்களின் கணக்கு வேறாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com