மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு

மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி


புதுதில்லி: மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குருநானக் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.  

குருநானக் ஜெயந்தியையொட்டி, உலக மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குருநானக் ஜெயந்தியையொட்டி கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அதன் முக்கிய அம்சம்: 

மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.

மேலும் தில்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு மோடி வேண்டுகோள் விடுத்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் சந்தித்து வரும்  வேதனைகளை, சவால்களை நேரடியாகவே நான் அறிவேன். அதனால் தான் மக்கள் என்னை பிரதமராக்கியவுடன், விவசாயிகளின் நலனின் மீது மிகுந்த முக்கியத்துவம் வைத்தேன். விவசாயிகளுக்காக பலதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விளை பொருள்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள் வழங்கியுள்ளோம். இது விவசாய சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளது.

தரமான விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. 

கிராமப்புற உள்கட்டமைப்பு சந்தையை பலப்படுத்தினோம். 

அரசின் முற்சியால் விளைபொருள்கள் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியதோடு, சாதனை அளவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் நூற்றில் 80 பேர் சிறு விவசாயிகள். 

ஃபைசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டத்தை பலப்படுத்தினோம், மேலும் அதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களின் நோக்கங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கிறார்கள். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர்.

வேளாண் சட்டத்தில் விவசாயிகள் கோரும் மாற்றங்களை கொண்டுவர அரசு முயற்சி எடுத்து வந்தது. 

அனைத்து தரப்பு விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 

வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்கிறது.

சிறு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கானவையே வேளாண் சட்டங்கள் என்பதை விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். 

ஆனால் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை.

எனவே மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.

மேலும், தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்.

"நான் எதை செய்தாலும் விவசாயிகளுக்காகவே செய்தேன். நான் செய்வதெல்லாம் நாட்டுக்காகத் தான். உங்கள் ஆசீர்வாதத்துடன் எனது கடின உழைப்பில் எதையும் விட்டு வைக்கவில்லை. உங்கள் நலனுக்காக நான் தொடர்ந்து உழைக்கிறேன். உங்கள் கனவுகள், தேசத்தின் கனவுகள் நனவாகுவதற்கு தொடர்ந்து இன்னும் கடினமாக உழைப்பேன்" என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கம் வரவேற்பு: 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிநீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள், கடந்த ஒரு ஆண்டாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com