வெகுண்டெழுந்த விவசாயிகளின் பெரும் போராட்டம்

2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஒரு பெரும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. 15 டிகிரி வெப்பநிலைக்கும் குறைவான கடும் குளிரில் விவசாயிகள் ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 15 டிகிரி வெப்பநிலைக்கும் குறைவான கடும் குளிரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் குடும்பத்தினரை விட்டுத் தில்லி எல்லைகளில் டிராக்டர்களைக் குடிசைகளாக மாற்றித் தெருவில் விறகு அடுப்புகளை வைத்து தாங்களே சமைத்து உண்டு இரவில் தீமூட்டி குளிர்காய்ந்து இறுதியாக போராட்டக் களத்தில் வெங்காய விளைச்சல் வரை போராட்டம் நீண்டிருக்கிறது. 

விவசாய சங்கங்களின் கருத்துகளைக் கேட்காமல் அவர்களைப் புறந்தள்ளி மத்தியிலுள்ள பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியதன் விளைவே இந்த விவசாயப் போராட்டம். இந்த மூன்று சட்டங்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் விவசாயிகளின் போராட்டம் 33 ஆவது நாளை எட்டியுள்ளது. 

இவ்வளவு பெரிய போராட்டத்தை அவர்கள் சாதாரணமாக நிகழ்த்திவிடவில்லை. இதற்குப் பின்னர் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோரின் இன்னல்களும், வலிகளும் நிறைந்திருக்கின்றன. 

கடும் குளிரிலும் போராட்டம்

தில்லியில் தற்போது 15 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலைதான் நிலவுகிறது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தங்களது பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களை விட்டுவிட்டு தங்கள் உரிமைக்காகப் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். 

ஜனநாயக நாடு என்று உலக அளவில் பெருமைமிக்கக் கூறும் இந்தியாவில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமையை தில்லி போராட்டம் உலகிற்கு எடுத்துக்கூறும். சுமார் மூன்று மாத காலம் அளவு தில்லியில் இருந்து போராட்டம் நடத்த முடியும் என்று உறுதியாகக் கூறும் விவசாயிகள், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்த பின்னரே வீட்டிற்குத் திரும்புவோம் என்கின்றனர். 

ஆனால், விவசாயிகளின் போராட்டத்தைக் கைவிட வைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எதிலும் உடன்பாடு ஏற்படுவதாகத் தெரியவில்லை. வேளாண் சட்டங்களை திருத்தம் செய்கிறோம் என்று மத்திய அரசு பல வரைவு அறிக்கைகளை விவசாயிகளிடம் கொடுத்தும், சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே கடும் இன்னல்களைக் கடந்து தில்லி எல்லையை அடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோதுகூட அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவையே சாப்பிட்டது, தாங்கள் உணவுக்காக யாரையும் நம்பியில்லை, இந்த நாடுதான் விவசாயிகளையும், விவசாயத்தையும் நம்பியிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது. 

தில்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகள் இதுவரை மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணமே போராடி வருகின்றனர். தில்லி எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதே தவிர, அங்கு விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு சிறிய சலசலப்பு கூட இல்லை. தில்லியில் எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமே குறிப்பிடத்தக்க ஒன்று. 

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர்கள் தற்போது சங்கிலித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் 11 விவசாயிகள் என்ற கணக்கில் அவர்கள் 24x7 போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஆதரவு 

தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும்  விவசாய சங்கங்களும் சமூக அமைப்புகளும் மக்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

விவசாய சங்கங்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் தில்லிக்கு நேரடியாக சென்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசியல் நோக்கில் வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் போராட்டத்தில் உள்நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் விவசாயிகள். 

தில்லி போராட்டத்தில் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.  போராட்டக்களத்தில் இருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னலம் கருதாது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து அங்குள்ளவர்களுக்கு இலவசமாக சேவை செய்யும்  முடிதிருத்தும் கடைக்காரர்கள், பல்வேறு மாநிலங்களில் உள்ள தன்னார்வலர்களிடமிருந்து வரும் உணவுப் பொருள்கள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் என விவசாயிகளுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. 

இதுகுறித்து முடிதிருத்தும் ஒருவர் கூறுகையில், 'நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகள் இங்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் வீட்டில் இருந்தால் அதனை நான் பாவமாக கருதுகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு இங்கு சேவை செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். தன்னலமற்று இங்கு வந்து வந்து சேவை புரியும் பலரும் பெரும் பணக்காரர்களோ, தொழிலதிபர்களோ அல்லர். அன்றாடம் உழைத்து உண்ணும் நடுத்தர வர்க்கத்தினர்.

விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது எப்போது?

விவசாயிகள் நேரடியாகவே தில்லியில்தான் போராட்டம் என்று முடிவு செய்யவில்லை. தில்லி போராட்டத்திற்கு முன்னதாகவே அரசியல்வாதிகள், ஊடகத்தினர் கவனம் பெறாத பல கட்டப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ரயில் மறியல் போராட்டம், வேளாண் சட்டங்களால் பயன்பெறுவதாகக் கூறப்படும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிடும் போராட்டம், ரிலையன்ஸ் ஜியோ டவர்களை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்டவை பஞ்சாப், ஹரியாணா மாவட்டங்களில் நடைபெற்றன. 

செப்டம்பர் 20 -22 தேதிகளில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அக்டோபர் 14ஆம் தேதி மத்திய அரசு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 

வேளாண் துறை அமைச்சருடன்தான் பேச வேண்டும் என்று விவசாயிகள் கூற மத்திய அரசோ வேளாண் துறைச் செயலாளரை அனுப்பி வைத்தது. எனினும் அதில் முடிவு எட்டப்படவில்லை. இதன் பின்னரும் பல்வேறு முறை மத்திய அரசை வலியுறுத்தி வந்த விவசாயிகள் ஒரு கட்டத்தில் தங்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்காமல் போகவே தலைநகரை முற்றுகையிடப் போகிறோம் என்று அறிவித்து அதனை தற்போது செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 

விவசாயிகளின் மீது தாக்குதல் 

பஞ்சாப், ஹரியாணா மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணைந்து பேரணியாக பல இன்னல்களை சந்தித்து தில்லியை அடைந்துள்ளனர். 

விவசாயிகள் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநில எல்லைகளைக் கடக்கும்போது காவல்துறையினர் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து, தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரைப் பாய்ச்சிக் கலைக்க முற்பட்டனர். ஆனால், உயிரே போனாலும் தில்லியை அடைவோம் என்ற கொள்கையை நிறைவேற்றிக் காட்டியுள்ளனர். தில்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் தங்கள் வலுவான போராட்டத்தால் புராரி மைதானத்தில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது தில்லி எல்லை முழுவதும் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னணியில் எதிர்க்கட்சியினர் இருப்பதாக மத்திய பாஜக அரசு குற்றம் சாட்டி வருகிறது. தங்களுக்குப் பின்னால் எந்த ஓர் அமைப்பும் இல்லை என்றும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் போராடுவதாகவும் விவசாயிகள் தெளிவுபடுத்தி விட்டனர்.

தில்லியில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு உயிரிழப்புகளும் நடந்துள்ளன. அவற்றின் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. தற்போதைய நிலவரப்படி சுமார் 30 லட்சம் லட்சம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேளாண் சட்டங்கள் கூறுவது என்ன? 

► விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா

► விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா

► அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா

இந்த மூன்று மசோதாக்களும் கடந்த செப்டம்பர் 20-22 தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 

இந்த புதிய வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகள் தங்களுடைய பொருள்களை ஆன்லைனில் விற்க முடியும். ஆனால், மத்திய அரசு முன்னதாகவே e-NAM என்ற திட்டத்தைக் கொண்டுவந்து செயல்பாட்டில் உள்ளது. NAM எனும் தேசிய விவசாய சந்தை (National Agricultural Market) மூலமாக இந்தியாவில் உள்ள எந்த ஒரு விவசாயியும் தங்கள் வேளாண் பொருள்களை ஆன்லைன் மூலமாக விற்கலாம். ஆனால், ஒரு சில விவசாய சங்கங்களே இதனைப் பயன்படுத்துகின்றன. 

அடுத்ததாக விவசாயிகள் கொடுக்கும் விளைபொருள்களுக்கு உடனடியாகவோ அல்லது 3 நாட்களுக்கு உள்ளாகவோ பணத்தை செலுத்திவிட வேண்டும். இதுவும் விவசாயிகளுக்கு சாதகமான ஒன்றுதான். ஆனால், வேளாண் பொருள்கள் தரமில்லை எனில் ஒப்பந்தம் கைவிடப்பட்டு விளைச்சல் பணம்கூட கிடைக்காமல் போகலாம். 

அடுத்ததாக அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் விலை குறையும்போது பதுக்கிவைத்து விலை அதிகரிக்கும்போது பொருள்கள் சந்தைக்கு வரும். பொருள்கள் சந்தையில் இல்லாத சமயத்தில் தேவை அதிகமாகும். இதனால் விலை மேலும் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அடுத்ததாக ஏ.பி.எம்.சி. எனப்படும் வேளாண் மண்டிகள். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதுமாக இவற்றையே நம்பியுள்ளன. இங்கு வேளாண் பொருள்கள் ஏலத்தில் விடப்படும். வேளாண் பொருள்களை வாங்கி விற்கக் கூடிய இடைத்தரகர்கள் இருப்பார்கள். ஏலத்தை பார்வையிட ஒரு அரசு அதிகாரியும் இருப்பார். விவசாயிகளின் வேளாண் பொருள்களுக்கு இங்கு சரியான விலை கிடைக்கும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் மண்டிகளை நம்பியே இருக்கின்றனர். இதில் இடைத்தரகர்களுக்கும் 6 முதல் 7 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். புதிய வேளாண் சட்டங்களில் இந்த மண்டிகளை அரசு கைவிடுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு இதுவும் முக்கியமான காரணம். 

முன்னதாக ஒரு விவசாயச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றால் அது தொடர்பான விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது நாடாளுமன்றக் குழுவை அமைத்து விவசாயிகளுடன் கலந்தாலோசித்து சட்டங்கள் குறித்து கருத்துகளை கேட்டறிந்த பின்னரே நிறைவேற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசு இதனை செய்யத் தவறிவிட்டது. 

குறைந்தபட்ச ஆதார விலை

அடுத்ததாக விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது குறைந்த பட்ச ஆதார விலை.  தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட முக்கியப் பொருள்களை அரசே கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகள் தங்களது பயிர்களை விற்பதற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. விளைச்சலுக்கு ஆகும் செலவைவிட இது சற்று அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பணமாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த 'குறைந்த பட்ச ஆதார விலை' முறை 1960களில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போதைய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. வேளாண் பொருள்களை விவசாயிகளிடமிருந்து எவரொருவரும் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் அதிகம் ஈடுபடும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். 

கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களது பொருள்களை விற்கலாம் என்றபோது குறைந்த ஏக்கர் நிலம் கொண்ட சாதாரண விவசாயி இதனைக் கையாள முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் வேளாண் பொருள்களுக்கு  50 சதவீத லாபத்துடன் விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

வேளாண் திட்டங்கள்

விவசாயிகளுக்காகப் பல்வேறு சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது உண்மைதான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிஎம் க்ரிஷி சின்சயி யோஜனா, நீர்பாசனத் திட்டத்துக்காக கொண்டுவரப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆம் ஆண்டு விவசாயிகள் தங்களது வேளாண் பொருள்களை இணையம் மூலமாக விற்பதற்கு e-NAM திட்டமும் 2016ல் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு பசல் பீமா யோஜனா திட்டமும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தில் விவசாயிகள் பலருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புகாரும் உள்ளது. 

2018 ஆம் ஆண்டு வேளாண் பொருள்களை சேமித்து வைப்பதற்காக 'ஆபரேஷன் கிரீன்' திட்டம் கொண்டு வரப்பட்டு இதற்காக 150 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்த மத்திய அரசு இதுவரை அதற்கான தொகையை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

விவசாயிகளுக்காக இவ்வாறு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதிகமாக விவசாயிகள் பயன்பெறவில்லை என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப்படுகிறது. 

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் என்று நவீன வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இந்தியாவுக்கு விவசாயம் அடிப்படை ஆதாரம் என்பதை உணர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதே சரியாக இருக்கும். 

சமீபத்தில் விவசாயிகளின் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசுகிறார் என்றவுடன் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், குறைந்தபட்ச  ஆதார விலையை நீக்க மாட்டோம், அதேநேரத்தில் வேளாண் சட்டங்களை  ரத்து செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்குமே ஏமாற்றம்தான். 

எதிர்க்கட்சிகள் மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக 2 கோடி கையெழுத்து அடங்கிய ஒப்பந்தங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. நெல், கோதுமை உள்ளிட்ட பயிறு வகைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. 

பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் அதிகம் பங்குபெற்றது ஏன்? 

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது தில்லி போராட்டக் களத்தில் உள்ளனர். இதில், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம். அதிகம் வருமானம் ஈட்டும் விவசாயிகள் கொண்ட மாநிலத்தில் பஞ்சாப் முதலிடத்தில் இருக்கிறது. இவர்கள் அதிகமாக விவசாய மண்டிகளை நம்பியுள்ளனர். 

பிகாரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏ.பி.எம்.சி எனும் விவசாய மண்டி நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது விவசாயிகளின் வருமானப் பட்டியலில் பிகார் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகளின் சவால்கள்

சில மாதங்களுக்குத் தேவையான தாங்கள் விளைவித்த பொருள்களுடன் தில்லி சென்றுள்ள விவசாயிகள், தங்களது டிராக்டர்களையே குடிசைகளாக ஆக மாற்றி கடும் குளிரில் அந்த பொதுவெளியில் படுத்துக் கொள்கின்றனர்.  தங்களுக்குத் தேவையான உணவுகளை தாங்களே சமைத்து உண்கின்றனர். விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை பஞ்சாப் சீக்கிய அமைப்புகள் வழங்குகின்றன.  

இரவு முழுவதும் சூடான தேநீரும், தீ மூட்டமும், கம்பளிப்  போர்வையும் தான் அவர்களுக்கு பேராதரவாக உள்ளன. இரவு முழுவதும் தேநீர் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொருவித போராட்டத்தை முன்னெடுத்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்கின்றனர். 

அவ்வப்போது பொழுதுபோக்குகளில் ஈடுபடும் விவசாயிகள், போராட்டக் காலத்தில் வெங்காயத்தை பயிரிட்டும், மற்ற மதத்தினருக்கும் சீக்கிய தலைப்பாகைகளை அணிவித்து மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளனர். 

போராட்டத்தைக் கலைக்க முயற்சி

தில்லி எல்லைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தை சீர்குலைக்க அரசும் காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை எடுக்கத்தான் செய்தது. 

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையே உள்ள யமுனை- சட்லஜ் நதி நீர் பிரச்சினையை தூண்டி விட்டனர். ஒரு சில விவசாய சங்கங்களிடம் மட்டும் பேசி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவுக் கடிதம் பெற்றனர். இவ்வாறான பல கட்ட முயற்சிகளை விவசாயிகள் தோற்கடித்துள்ளனர். 

நம் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவை விளைவிக்கும் விவசாயிகள் தில்லியில் தங்களது குடும்பங்களை விட்டு தங்கள் உயிருக்கு உயிராக இருக்கும் நிலத்தைவிட்டு போராடி வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர் வரையிலும், பல சிரமத்திற்கு இடையில் பெண்கள் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது விவசாயிகளின் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக, மக்களின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. ஜாதி, மத, இன பாகுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர. இது ஒரு ஜனநாயக நாடு என்பதை இந்த போராட்டத்தின் மூலம் தற்போதைய அரசுக்கும் எதிர்வரும் அரசுகளுக்கும் உறுதியாக எடுத்துரைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com