நடையாய் நடந்த இந்தியாவின் ஆன்மாக்கள்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மிகப் பெருமளவில் இந்தியாவில் நடந்த இடப்பெயர்வு எனப் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கொண்ட பயணம் வரலாற்றில் பதிவானது.
வெறும் சோற்றுக்கு...
வெறும் சோற்றுக்கு...

2020 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட வாழ்த்துச் செய்திகள் பலருக்கும் பலனளிக்காமலே சென்றுவிட்டன. எதிர்பாராத வண்ணம் பரவிய கரோனா பெருந்தொற்றால் உலகமே  செய்வதறியாது விக்கித்து நிற்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு வங்க தேசத்தின் கிரிக்கெட் வீரர் மோர்டாசா ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்து அப்போது பெரும் பாராட்டைப் பெற்றது. யாரெல்லாம் செங்கல்லைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டியெழுப்புகிறார்களோ, யாரெல்லாம் தங்களது உழைப்பில் தொழிற்சாலைகளை உருவாக்குகிறார்களோ, விளைநிலங்களில் பயிர்களை விளைவித்து உணவின் தேவையை நிவர்த்தி செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள் என்றார் மோர்டாசா. அதுதான் உண்மையும்கூட.    

திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள், அதன் காரணமாக நிகழ்ந்த வேலையிழப்புகள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை எனப் பட்டியல் நீண்டாலும் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு என்பது புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ வழியின்றித் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நகர்ந்தது.

கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த சிக்கல்கள் தொடங்கி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் வரை அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு மத்தியில் பொதுமுடக்க காலத்தில் அவர்கள் சந்தித்த சிக்கலை நினைவு கொள்வது அவர்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

மார்ச் 24, 2020 இந்தியா எளிதில் மறந்து விடாத நாள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அன்றைய தினம் அறிவித்தார். பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 130 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்களின் வாழ்க்கையை நிறுத்துவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் வெறும் 4 மணி நேரம் மட்டுமே. 

பொதுமுடக்கத்தால் வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி உணவுக்கே மக்கள் அவதிப்பட்டனர். எப்போதும் சிறை வாழ்க்கை போல வாழும் தொழிலாளர்கள் நிலையோ இன்னும் ஒருபடி மேலே சிக்கலில் சிக்கியது.

நாள்கள் ஆக ஆக நீண்டுகொண்டேயிருந்த பொதுமுடக்கம் தொழிலாளர்களின் நம்பிக்கையைக் குலைத்தன. தமிழகத்தின் திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் நிரம்பி வழியும் வட மாநிலத் தொழிலாளர்கள் தொழில் நடைபெறாததால் வருமானமின்றித் தவித்தனர்.

மிக எளிதாக திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களை புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருக்கான தங்குமிட வீடுகளாக மாற்றியிருக்கலாம். ஆனால் அத்தகைய எந்த நடவடிக்கையும் அரசின் கைவசம் இல்லை என்பதே இயல்புநிலை. நாளுக்கு நாள் நீண்ட பொது முடக்கமும், வயிற்றுப் பசியும் அவர்களை வேறு மாதிரியாக சிந்திக்க வைத்தது.

இறந்தாலும் சொந்த ஊரில் இறந்து போகலாம் எனும் பயம் கலந்த தவிப்பு நாடு முழுவதுமான புலம்பெயர் தொழிலாளர்களின் ஒரே எண்ணமாக இருந்தது. காத்திருந்து பார்த்து அரசின் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாததால் எப்பாடுபட்டாவது தங்களது குடும்பத்தை அடைய தொழிலாளர்கள் முடிவெடுத்தனர்.

அவர்களுக்கான முறையான போக்குவரத்து ஏற்பாடோ, அல்லது அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கான உணவு உறைவிடம் கிடைப்பதற்கான ஏற்பாடோ எதுவும் செய்யப்படாததால் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நடந்தே அவர்கள் புறப்பட்டனர். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மிகப் பெருமளவில் இந்தியாவில் நடந்த  இடப்பெயர்வு இது என்கின்றனர் வரலாற்றாளர்கள்.

மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பொதுமுடக்க உத்தரவிலிருந்து மே மாதம் வரை யிலும்கூட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல எந்த போக்குவரத்து வசதியும் மேற்கொள்ளப்படாதது அரசின் மீதான அதிருப்தியாக மாறியது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு பின் மத்திய அரசு மே மாதம் சிறப்பு ரயிலை அறிவித்தது. கரோனா சிறப்பு ரயிலுக்கான பயணக் கட்டணத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்தது. இதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே அறிக்கைப் போர் நடந்தது.

பின் புலம்பெயர் தொழிலாளர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும்கூட சிறப்பு ரயில்களுக்கான முழுக்கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்பே தொழிலாளர்கள் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலம் தாழ்ந்த இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே காத்திருந்து ஏமாற்றமடைந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை அடைந்து விட்டனர்.

ஏறக்குறைய 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் பொதுமுடக்கக் காலத்தில் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள் என்கிறது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

ரயில்வே துறையின் சுற்றறிக்கை “உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட்டுகளைக் கொடுத்துக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டது.

பாஜக தவிர்த்த பல மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தன. வாழ வழி இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு உதவாத அரசு அவர்கள் சட்டைப் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தைப் பறிக்கப் பார்க்கிறது என்கிற விமர்சனம் நாலாபுறமும் எழுந்தன.

உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லிக்கு கூலி வேலைகளுக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைத் தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப 1,500 பேருந்துகள் தயார் என்றும், உத்தரப்பிரதேச அரசு அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தார்.

நாள் கணக்கில் கடிதப் போர்களுக்கு மத்தியில் உத்தரப் பிரதேச எல்லையில் காத்து நின்ற வாகனங்கள் கடைசி வரை அனுமதிக்கப்படவில்லை என்பது மறுக்கமுடியாத ஒன்று. 

மத்திய அரசு அறிமுகப்படுத்திய தொழிலாளர் ரயில்கள் மூலம் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களும் பேருந்துகள் மூலம் 40 லட்சம் தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றதாகத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் புண்யா சலைலா ஸ்ரீவஸ்தவா.

இந்தப் பொதுமுடக்கத்தில் மக்களிடம் குறிப்பாக சாலைகளில் தவித்து நின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார் திரைக்கலைஞர் சோனு சூட். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றினாலும் நிஜத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஓடிஓடி உதவினார்.

மேற்கு வங்கத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்தார் உணவு அருந்துகின்றனர்
மேற்கு வங்கத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்தார் உணவு அருந்துகின்றனர்

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அவர் தனது ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அடகு வைத்ததாகப் பின்னாளில் செய்தி வந்ததும் நினைவுகூறத் தக்கது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், தங்குமிடம் அமைக்கவும் ரூ. 11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் அவர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்குவது, வங்கிகள் கடன் செலுத்த கால அவகாசம் என அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகின.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி வழங்குவதாக மத்திய அரசு கூறியபோதும், நடந்தே ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் ஒருவேளை உணவுக்காகக் கடும் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

இன்னும் பலருக்கு உணவுப் பொருட்கள் கிடைக்கவே இல்லை என்பது நிதர்சனமாக இருந்தது. புலம்பெயர் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தவறியது, சரியான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தராதது, அவர்களை உணவுக்காக சாலைகளில் அலைக்கழித்தது என நாடு இதுவரை கண்டிராத பல காட்சிகள் பொதுமுடக்கத்தில் அரங்கேறின.

இந்தியாவின் சாலைகளிலும் ரயில் தடங்களிலும் நாடு கண்டிராத பல காட்சிகள் அரங்கேறி அனைவரின் நெஞ்சத்தையும் உறையச் செய்தன.

ராம்புக்கார் பண்டிட்
ராம்புக்கார் பண்டிட்

ராம்புக்கார் பண்டிட் குறித்து பலருக்கும் நினைவு இருக்கலாம். பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வலிகளுக்கான ஒரு ஆதாரம் அவர். தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதற்காக பிகாரிலிருந்து தில்லிக்கு கட்டுமானத் தொழிலாளியாக சென்றவர். 

உடல்நலம் பாதிக்கப்பட்ட ராம்புக்காரின் ஒரு வயதேயான மகனைக் காண பொது முடக்கத்தின் மத்தியில் அவர் பிகாருக்கு நடந்தே செல்ல ஆயத்தமானார். சாலையோரத்தில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது அமர்ந்து தனது கைபேசியில் கதறி அழுத அவரின் புகைப்படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

அவரின் கதறலைக் கேட்ட தில்லி பத்திரிகையாளர் ஒருவரின் உதவியுடன் ரயிலேறிச் சென்றிருக்கிற ராம்புக்கார் தனது இறந்த குழந்தையின் முகத்தைத் தான் கண்டார் என்பது சோகம் நிறைந்தது.

குஜராத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்ற அந்தப் பெண் முசாபர்நகர் வந்தடைந்தபோது போதிய உணவில்லாமலும், நீர் இல்லாமலும் இறந்து ரயில்நிலைய நடைமேடையில் கிடத்தப்பட்டிருந்தார். தன் தாயின் இறப்பை அறியாத 2 வயது குழந்தை அவரை எழுப்ப முயன்ற காணொலி நாடு முழுவதும் அனைவரின் பார்வையையும் தவறாமல் அடைந்திருக்கும்.

இறந்த தாயை எழுப்பும் குழந்தை
இறந்த தாயை எழுப்பும் குழந்தை

மகாராஷ்டிரத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பொதுமுடக்கம் காரணமாக சொந்த மாநிலம் நோக்கி நடந்து சென்ற களைப்பில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கினர். அப்போது அந்த வழியாக சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது ஏறியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 17 பேர்.

மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் இருந்து பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தபோது உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில்  எதிரே வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளாதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ரயில்வே பாதுகாப்புப் படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்தபோது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்

இவை தவிர பெட்டியில் தூங்கும் சிறுவனை இழுத்துச்சென்ற தாய், சாலையில் பிரசவித்த கர்ப்பிணி பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமிநாசினிகள், செல்லும் வழியில் தூக்கிட்டு இறந்தவர்கள், மாரடைப்பு மரணம்... என நீளும் பட்டியலுக்கு யாரிடமும் பதில் இல்லை.

இப்படி இந்தியாவில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முடக்க நிலை தொடங்கியதில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர் என்கிறது தரவுகள்.

மற்றொருபுறம் வெளிநாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் உதவி கேட்கும் காணொலிகள் தினந்தோறும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன. அதன் தொடர்ச்சியாக அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம்  இதுவரை 30.9 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிடைத்த வாகனத்தில் ஏறப் போட்டியிடும் தொழிலாளர்கள்
கிடைத்த வாகனத்தில் ஏறப் போட்டியிடும் தொழிலாளர்கள்

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பெட்டி படுக்கைகளுடன் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சரோ எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் அவர்களும் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு அவர்களுடன் நடக்கலாமே? எனத் தெரிவித்தது அன்றைய சில தினங்களுக்கு பேசுபொருளானதை மறக்க முடியாது.

அதேபோல் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில் கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலுக்கு எதிரான நாடு தழுவிய பொதுமுடக்கத்தில் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையில், அவசியமான இந்தக் கேள்விக்கு மத்திய அரசு தெரிவித்த பதில் எதிர்க்கட்சிகளின் கண்டன அறிக்கைக்கு வழிவகுத்தன. 1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிவந்ததாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட போதிலும் மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தனது எழுத்துப்பூர்வ பதிலில்,  “எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர், எத்தனை வேலைகள் பறிபோயின போன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில்கொண்டு கேள்வி எழவில்லை. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து எந்த அவசியமும் ஏற்படவில்லை" என்று தெரிவித்து அதிர்ச்சி அளித்தார்.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இந்தக் காலகட்டத்தில் 81 ஆயிரத்து 385 சாலை விபத்துகள் நடந்துள்ளன.இதில் 29 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்தனர்.  ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பொதுமுடக்கக் காலத்தில் நடந்த விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் மட்டும் அரசிடம் இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

குடும்பத்தினருடன் குழந்தையைச் சுமந்துகொண்டு நடந்தே  மகாராஷ்டிரத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்
குடும்பத்தினருடன் குழந்தையைச் சுமந்துகொண்டு நடந்தே  மகாராஷ்டிரத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்

இது ஒருபுறமிருக்க இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

அடுத்தடுத்து அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கிய போது பிரதமர் மோடி கரோனா முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்கள் வீடுகளின் முன்பு ஒலி எழுப்புவது, விளக்குகள் ஏற்றுவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல உதவிகள் செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்த போதிலும் அவர்களுக்கான போதிய உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசும் தவறிவிட்டதாக நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

உடைமைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
உடைமைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த், ஊரடங்கு மற்றும் பரவலான வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக  செயல்பட்டபோதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது எனவும் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரசால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. 

கரோனா பெருந்தொற்று அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று என்கிற போதிலும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. வந்தே பாரத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அதேவேளையில் கால்நடையாக சென்றவர்களுக்கு எத்தகைய உதவிகள் கிடைத்தன என்கிற விமர்சனத்தை மத்திய அரசு புறந்தள்ள முடியாது.

அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட “அனைவருக்குமான நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் …” என்ற முக்கியத்துவத்தை அரசுகள்  உண்மையில் உணர்ந்தால் மட்டுமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்பதே நிதர்சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com