2020-ஐ உலுக்கிய தில்லி வன்முறை!

2020-இல் கரோனாவுக்கு முன்பு தில்லியை உலுக்கிய வன்முறையை, கடந்தாண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி தொடங்கி, போராட்டக்காரர்கள் கைது வரை என அதுசார்ந்து அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.
2020-ஐ உலுக்கிய தில்லி வன்முறை!


2020-ல் உலகின் தலைப்புச் செய்தியாக கரோனா உருவெடுப்பதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு தலைப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள். 

ஆண்டின் இறுதியில் 2020 இன் முக்கிய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கையில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களும் வன்முறையால் பற்றி எரிந்த தலைநகர் தில்லியையும் பற்றி பேசாமல் இந்த ஆண்டைக் கடந்துவிட முடியாது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதிலிருந்து, அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்று, நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டமாக்கப்பட்டது, சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள், போராட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு கையாண்ட விதம், போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள், பின்னர் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்திக்கும் கைது நடவடிக்கைகள் என எத்தனையெத்தனை...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான தொடக்கப் புள்ளியை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தும், ஆட்சிக்கு வந்த விதத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளது.

மக்களவைத் தேர்தல் - பாஜக ஆட்சி - உள்துறை அமைச்சர் அமித் ஷா

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் கூடுதலான இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக. பாஜகவில் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவரான கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் அமித் ஷா இந்த முறை மத்திய அரசில் கால் பதித்தார். அவருக்கு அதிகாரம் மிகுந்த உள்துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அமித் ஷாவின் வருகையைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய சித்தாந்தங்கள் சட்டங்களாக மாறத் தொடங்கின. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றதால், எங்களது தேர்தல் வாக்குறுதிகளுக்கே மக்கள் வாக்களித்துள்ளனர் என்ற கருத்துகளை முன்வைத்து முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன, இன்னமும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தேசிய புலனாய்வு முகமை, அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என சட்ட நிறைவேற்றங்களும், சட்டத் திருத்தங்களும் அதிரடியாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. 

இவை அனைத்திற்கும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் தோன்றிப் போராட்டங்கள் நடைபெற்றாலும், மத்திய அரசு எவ்வித சலசலப்புமின்றி அடுத்தடுத்து அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தது.

இந்த வரிசையில்தான் கடந்தாண்டு டிசம்பர் 9-இல் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, டிசம்பர் 11-இல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் குடியுரிமை வழங்கப்படுவதாகக் கருதி, குடியுரிமை திருத்தச் சட்டம் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்த சட்டத்திலிருந்து இஸ்லாமியர்கள் மட்டும் தனித்துவிடப்படுவதால், பிற்காலத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு நடைமுறைக்கு வந்ததும் இஸ்லாமியர்கள் குடியுரிமையற்றவர்களாக ஆகும் நிலை ஏற்படும் என்றும் இந்த சட்டம் முற்றிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுப் போராட்டங்கள் வெடித்தன.

பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் என அடுத்தடுத்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு பெருக, போராட்டம் தீவிரமடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா வருகையின்போது  இது நடைபெற்றதால் நாடு முழுவதும் பெரிதளவில் கவனம் ஈர்த்தது.

ஷஹீன் பாக் போராட்டம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சு - துப்பாக்கிச் சூடு

சிஏஏ-வுக்கு எதிராக தில்லி ஷஹீன் பாக் பகுதியில் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே வடமேற்கு தில்லி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், 'தேச விரோதிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்' என கோஷம் எழுப்பினார். 

அவர் கோஷம் எழுப்பி 6 நாள்களில் சிஏஏ போராட்டங்களில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறின. 

துப்பாக்கிச் சூடு 1: ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே, 'ஷஹீன் பாக் ஆட்டம் முடிவுக்கு வந்தது' எனக் கூச்சலிட்டவாறு 18 வயதுக்குக் குறைந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்..
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்..

துப்பாக்கிச் சூடு 2: அடுத்ததாக பிப்ரவரி 1-ம் தேதி ஷஹீன் பாக் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. ஹிந்துக்களே இங்கு மேம்பட்டவர்கள் என்ற கோஷம் எழுப்பி துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

துப்பாக்கிச் சூடு 3: பிப்ரவரி 3-ம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அங்கும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பிப்ரவரி 23 - 26

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் பிப்ரவரி மாதத்திலும் நீடிக்க, வடகிழக்கு தில்லி பகுதியில் போராட்டக் களங்களில் வன்முறைகள் வெடித்தன. 

குறிப்பாக முஸ்லிம்களின் கடைகள் அதிகளவில் குறிவைக்கப்பட்டன. ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் கடைகள் சூரையாடப்பட்டன.

ஹிந்துவா, முஸ்லிமா என காற்சட்டையைக் கழற்றி நிரூபிக்குமாறு மிரட்டப்பட்டதாகத் தனக்கு நேர்ந்த நிகழ்வை ஆங்கில நாளிதழின் புகைப்படக் கலைஞர் வெளியுலகில் பகிர்ந்தது அனைவரையும் பதைபதைக்க வைத்தது.

இந்த வன்முறையின்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்', 'நீங்கள் கேட்ட சுதந்திரம் இதுதான்' என்பன போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் ஹிந்து குழுக்களால் எழுப்பப்பட்டதாகத் தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் அறிக்கை பின்னர் தெரிவித்தது.

வன்முறையைத் தொடர்ந்து வெளியேறிய வடகிழக்கு தில்லியின் யமுனா விஹார் பகுதி மக்கள்..
வன்முறையைத் தொடர்ந்து வெளியேறிய வடகிழக்கு தில்லியின் யமுனா விஹார் பகுதி மக்கள்..

இந்த வன்முறையில் 40 முஸ்லிம்கள், ஒரு காவலர் உள்பட மொத்தம் 52 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.

வன்முறையின்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்தன. சில இடங்களில் காவல் துறையினர் வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், தில்லி வன்முறை குறித்து மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா, மற்ற இடங்களுக்கு வன்முறை பரவாமல் பார்த்துக்கொண்டதற்காகத் தில்லி காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஹிந்து - முஸ்லிம் என்பதில் நம்பிக்கையில்லை என்ற அமித் ஷா, கொல்லப்பட்ட 52 பேரும் இந்தியர்கள் என்றார்.

வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹார் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹார் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..

இதையும் படிக்கலாமே: நடையாய் நடந்த இந்தியாவின் ஆன்மாக்கள்

பிப்ரவரி 23 - பாஜக தலைவர் கபில் மிஸ்ரா - வெறுப்புப் பேச்சு

ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, 'இந்தப் பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், அகற்றும் பணியை நாங்கள் கையிலெடுக்க நேரிடும். அதன் பிறகு, காவல் துறையினர் பேச்சைக் கேட்க மாட்டோம்' என்றார்.

அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே தில்லி போராட்டத்தில் வன்முறை வெடிக்கத் தொடங்கியது.

ஆனால், கபில் மிஸ்ரா மீது காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அனுராக் தாக்குர்- கபில் மிஸ்ரா - வெறுப்புப் பேச்சு - நீதிபதி பணியிட மாற்றம்

தில்லி வன்முறைக்குத் தொடர்புடைய வகையில் வெறுப்புப் பேச்சுகளை கக்கிய அரசியல் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது குறித்து தில்லி காவல் துறையினரை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதர் கடுமையாக சாடினார்.

நீதிபதி முரளீதர்
நீதிபதி முரளீதர்

ஆனால், அன்றைய இரவே அவர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

நீதிபதி முரளீதரின் பணியிட மாற்றம் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற அன்றைய இரவே பணியிட மாற்றம் செய்யப்பட்டது அப்போது மிகப் பெரிய அளவில் பேசுபொருளாக அமைந்தது.

தில்லி காவல் துறை - குற்றப்பத்திரிகை

வெறுப்புப் பேச்சுகளை பரப்பிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, ஒரே இரவில் நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது என சர்ச்சை மேல் சர்ச்சை அதிகரிக்க மேலும் சர்ச்சைக்கு வழிவகுத்தது தில்லி காவல் துறை.

வழக்கு எண் 65 மற்றும் 101-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைன் மற்றும் யுனைடட் எகைன்ஸ்ட் ஹேட் (United Against Hate) தலைவர் காலித் சைஃபி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிப்ரவரி மாத இந்திய வருகையின்போது மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும் செய்தி ஜனவரி 13-ம் தேதிதான் வெளியிடப்பட்டது. அப்படி இருக்கையில் ஜனவரி 8-ம் தேதியே எவ்வாறு அவர்களால் திட்டமிட்டிருக்க முடியும் என்ற கேள்விகளை சுயாதீன ஊடகங்கள் முன்வைத்தன. எனினும், தேதி விஷயத்தில் தில்லி காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

அதேசமயம், வழக்கு எண் 59-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மூவரும் பிப்ரவரி 16 மற்றும் 17-க்கு இடையிலான நள்ளிரவில் போராட்டம் நடத்துவது குறித்து திட்டமிட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

காவல் துறையின் குற்றப்பத்திரிகைகளிலே தேதி விஷயத்தில் ஏற்பட்ட முரண் சர்ச்சைகளை வலுப்படுத்தியது.

இவற்றுக்கு மத்தியில்தான் ஜேன்யு முன்னாள் மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர்கள் என 18 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. 

இதையடுத்து, ஜாமின் கிடைப்பதில் அவர்களுக்கு பெரிய சிக்கல்கள் இருந்தன.

சஃபூரா ஸர்கர் (புகைப்படம்: டிவிட்டர்)
சஃபூரா ஸர்கர் (புகைப்படம்: டிவிட்டர்)

குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி சஃபூரா ஸர்கர் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டபோது மூன்று மாத கர்ப்பிணி. எனினும், அவருக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அவருக்கு ஜாமின் வழங்க ஆட்சேபனை இல்லை என அரசு தரப்பில் ஜூன் மாதம் தெரிவிக்க ஜூன் 22-ம் தேதிதான் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இப்படியாக இந்த வழக்கானது பயணத்தை நீட்டித்துக் கொண்டு வருகிறது.

இவ்வளவு வன்முறைக்கும் பின்னணியில் இருந்தவர்கள் - இருப்பவர்கள் யார்? உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுக் கைது செய்யப்படுவார்களா? கைது செய்யப்பட்டாலும் அவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள் என்பதை நிரூபிப்பதற்கான உண்மை ஆதாரங்கள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுமா?

எல்லாவற்றுக்குமான பதில்கள் 2021-இன் கையில் உள்ளது.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களுடன் 2020-ஐ தொடங்கிய தில்லி, தற்போது அதற்கு நிகராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துடன் 2020-ஐக் கடந்து 2021-ல் நுழைந்துகொண்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com