மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை இருக்கிறதா?

மூளை பக்கவாதம் என்றால், மூளைக்குச் செல்லும் ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு அல்லது ரத்தநாளத்தில் ஏற்படும் வெடிப்பு என்பதாகும். 
மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை இருக்கிறதா?
மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை இருக்கிறதா?


மூளை பக்கவாதம் என்றால், மூளைக்குச் செல்லும் -  மூளையில் ரத்தநாளங்களில் ஏற்படும்  அடைப்பு அல்லது ரத்தநாளங்களில் ஏற்படும் வெடிப்பு என்பதாகும். 

மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள், மூளையின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து பேசும்திறன் இழத்தல் அல்லது பேசுவதில் சிரமம், ஒரு கை பலவீனமடைதல் அல்லது உடலின் ஒரு பகுதி பலவீனமடைதல், திடீரென கண்பார்வை இழத்தல், நடக்கும்போது சமநிலை இழத்தல், கை நடுக்கம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதத்திலிருந்து 100 சதவீதம் மீள்வது என்பது சாத்தியமற்றது. குணமடைதல் என்பது மூளையின் பாதிப்படைந்த திசுக்களின் அளவு மற்றும் பகுதியைப் பொருத்தது.

மூளை பக்கவாதத்துக்கான காரணிகள்

1. வயது முதிர்வு
2. ரத்த அழுத்தம் (கொதிப்பு)
3. நீரிழிவு
4. ரத்தக் கொழுப்பு
5. புகை பிடித்தல்
6. மதுப்பழக்கம்
7. வேறு கூடா பழக்கங்கள்
8. உட்கார்ந்துகொண்டே இருப்பது
9. இதயத்தில் கோளாறு
10. மிகை ரத்த உறைவு நோய்

எப்படிக் கண்டுபிடிப்பது?

சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, எக்கோ, காரோடிட் மற்றும் வெர்டாபிரல் டாப்ளர், ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் கொழுப்பளவு ஆகியவற்றின் மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை என்ன?

மூளை பக்கவாதம் வராமல், ஒருவரால் மேற்சொன்ன 10 காரணிகளில் 1, 9, 10 காரணிகளைத் தவிர்த்து மற்றவற்றைக் கட்டுப்படுத்துவதால் தவிர்க்க முடியும். ஒருவேளை, ஒருவர் தனது இளமைக்காலத்திலேயே, மூளை பக்கவாதம் வராமல் தடுக்க விரும்பினால், ஆரோக்கியமான வாழ்முறையைக் கையாள வேண்டும்,  உணவில் உப்பைக் குறைத்து, துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகளை அதிகம் சேர்த்து, எண்ணெய் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக் கொண்டு, அசைவம் சாப்பிடுவோராக இருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 30 நிமிடம் நடப்பது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை (கொதிப்பை) சரியாகப் பராமரித்து, மதுபானம் மற்றும் புகை பிடித்தலைத் தவிர்க்க வேண்டும்.

மூளை பக்கவாதம் ஏற்பட்டதன் காரணியைப் பொருத்து சிகிச்சை வேறுபடும்
மூளை பக்கவாதத்துக்கான அறிகுறி தென்பட்டதும், ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தத்திட்டு (குருதி ஊட்டக் குறை) கண்டுபிடிக்கப்பட்டு அதிமுக்கிய நேரம் எனப்படும் நாலரை மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட த்ரோம்போலிடிக் சிகிச்சை அளித்து (ரத்தத் திட்டை கரைத்தல்) ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்வதாகும்.

ஒருவேளை இந்த சிகிச்சை தோல்வியடைந்தால், மெக்கானிக்கல் த்ரோம்போலிடிக் (ரத்தத் திட்டை நீக்குதல்)  சிகிச்சை அளிக்கப்படும். மூளை பக்கவாதத்துக்கான அறிகுறி தென்பட்டு அதிமுக்கிய நேரமான நாலரை மணி நேரத்துக்குப் பிறகு மருத்துவமனையை அடையும் நோயாளிக்கு ரத்த அணுக்கள் மற்றும் அதிக ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்தும் இரண்டாம் கட்ட சிகிச்சைதான் அளிக்கப்படும்.

ஒருவேளை மூளை பக்கவாதம், ரத்த நாளத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும் மற்றும் மூளையில் அழுத்தம் அதிகமாக இருந்தால், மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

பக்கவாத சிகிச்சையில் காணப்படும் சவால்கள்

1. மூளை பக்கவாதம் ஏற்பட்ட ஒரு நோயாளியை அந்த அதிமுக்கிய நேரம் எனப்படும் நாலரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம். ஆனால், வளர்ந்த நாடுகளில்கூட, பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளை உரிய நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதிப்பது சவாலாகவே உள்ளது.

2. பக்கவாத சிகிச்சை அமைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சை மையங்கள் பெரும்பாலும் நகர்ப்பகுதிகளிலேயே அதுவும் அதிகமாக தனியார் மருத்துவமனைகளிலேயே காணப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முன்னெடுப்புகள்

இந்தியாவில் ஏற்படும்  மூளை பக்கவாத நோயை எதிர்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு சார்பில் புற்றுநோய், நீரிழிவு, இதய  மற்றும் பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தேசிய திட்டம் (என்பிசிடிசிஎஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசு, நோய்களை முன்கூட்டியே கண்டறிய, நிர்வாகம், கட்டமைப்புகளை உருவாக்குதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கும் அனைத்து நிலையிலான சிகிச்சை அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு எனப்படும் டிஏஇஐ மற்றும் பக்கவாத சிகிச்சை மற்றும் பிளாஸ்மிநோஜென் ஆக்டிவேட்டருடன் அதிவேக இணைப்பு மற்றும் த்ரோம்பெக்டோமி என்ற எஸ்சிஆர்ஐபிடி அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம், அனைத்து மருத்துவக் கல்லூரி, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் இது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் எல்லாம் பக்கவாதத்துக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூளை பக்கவாதத்தின் பாதிப்பு

இந்தியா ஏராளமான தொற்றும் மற்றும் தொற்றா நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மூளை பக்கவாதத்தால் நாட்டில் அதிகளவில்  உயிரிழப்புகளும் மற்றும் உடல் ஊனங்களும் ஏற்படுகின்றன. இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 18 லட்சம் பேர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்க்கு, மிக விரைவாக அளிக்கப்படும் சிகிச்சையால் மட்டுமே நோயின் தீவிரத்தையும் உயிரிழப்பையும் குறைக்க இயலும்.

மூளை பக்கவாதத்தின் பரவல் விகிதமானது கிராமப்புறங்களில் 84-262/1,00,000 ஆகவும், நகர்ப்புறத்தில் 334-424/1,00,000 ஆகவும் இறப்பு விகிதம் 119-145/1,00,000 ஆக உள்ளது.  இந்த நோய் தாக்கி உயிரிழப்போர் விகிதம் மிக அதிகளவாக  கொல்கத்தாவில் 42 சதவீதமாக உள்ளது.

அனைவரும் அறிய வேண்டியது..

  • ஆரோக்கியமான வாழ்முறையைப் பழக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், நோய்களின் அறிகுறிகளை அறிந்து, முன்னதாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒருவேளை மூளை பக்கவாதம் ஏற்பட்டால் நாலரை மணி நேரத்துக்குள்  மருத்துவமனைக்குச் சென்றால் நோயினால் நேரிடக்கூடிய பாதிப்பையும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம்.

    [கட்டுரையாளர் - டாக்டர் ஏ. நித்தியானந்தம்
    மூத்த நரம்பியல் மருத்துவர், சென்னை]

     - அக். 29 - உலக பக்கவாத நாள் -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com