ஜம்மு - காஷ்மீர் சிக்கலுக்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் 370?

ஒரு தேசம் என்பது வரலாற்று ரீதியாக பரிணாமம் அடையும் தன்மை கொண்டது. ஒரு மொழி, பொதுவான நிலபரப்பு, ஒரே வாழ்வியல் முறை, பொதுவான உளவியல் கட்டமைப்பு ஆகிய நான்கின் அடிப்படையாக கொண்டதுதான தேசம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

"ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் 370தான் காரணம்" எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நீக்கினார்.

பாலின சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35ஏ உள்ளது என ஒரு தரப்பு வாதம் முன்வைக்கிறது. இது உண்மையா? உண்மையாகவே, ஜம்மு காஷ்மீரில் நிலவும் சிக்கலுக்கு காரணம் யார்? என பல கேள்விகள் நமக்கு எழுகிறது. இதற்கான விடையை தேட வரலாற்றை புரட்டி பார்ப்பது அவசியமாகிறது.

இந்தியா தேசமா? நாடா?

ஒரு தேசத்திற்கும் நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தேசத்திற்கு என பல அர்த்தங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிஸ கோட்பாட்டின்படி "ஒரு தேசம் என்பது வரலாற்று ரீதியாக பரிணாமம் அடையும் தன்மை கொண்டது. ஒரு மொழி, பொதுவான நிலப்பரப்பு, ஒரே வாழ்வியல் முறை, பொதுவான உளவியல் கட்டமைப்பு ஆகிய நான்கினை அடிப்படையாகக் கொண்டதுதான் தேசம்" என ரஷியாவின் முன்னாள் அதிபர் ஸ்டாலின் கூறுகிறார்.

இதனை ஒரு வாதமாக வைத்து கொள்வோம். தற்போது, இந்தியாவின் வரலாற்றை பார்ப்போம். பல நூறு சமஸ்தானங்களை ஒருங்கிணைத்துதான் இந்தியா என்ற நாடு கட்டமைக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகளாலும், பேச்சுவார்த்தையின் மூலமாகவும் இது சாத்தியப்பட்டது. ஆபரேஷன் போலோ, ஆபரேஷன் விஜய் போன்ற ராணுவ நடவடிக்கைகளால் கோவாவும், ஹைதராபாத்தும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களும் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டதன் விளைவாகத்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அதுதான், அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35ஏ.

என்ன சொல்கிறது அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35ஏ?

பாதுகாப்பு, வெளியுறவு, நிதி மற்றும் தகவல் தொடர்பு ஆகிய நான்கு விவகாரங்களை தவிர்த்து மற்ற அனைத்து விவகாரங்கள் தொடர்பான சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்துவதற்கு இந்திய நாடாளுமன்றத்திற்கு அம்மாநிலத்தின் சட்டப்பேரவை ஒப்புதல் அவசியமாகிறது.

அரசியலமைப்பு சட்டம் 370இன்படி, மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலத்தில் நிதி அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1இல், இந்திய மாநிலங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. "அரசியலமைப்பு 370இன் அடிப்படையில்தான் காஷ்மீருக்கு இந்திய மாநிலங்களின் பட்டியலை கொண்ட சட்டப் பிரிவு 1 பொருந்தும்" என இந்திய அரசியலமைப்பு சட்டம் 370(1)(சி)இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதே இந்திய அரசியலமைப்பு சட்டம் 370. இதை நீக்குவதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை. இதற்கான தனிச் சட்டப்பிரிவுகள் உருவாக்காத பட்சத்தில், 370ஆவது சட்டத்தை நீக்கினால் காஷ்மீர் சுதந்திரமான பகுதியாகிவிடும்.

மத்திய அரசின் நோக்கங்கள் நிறைவேறியதா?

முதலில், ஜம்மு - காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாக சித்தரிப்பதே தவறு. எதிர்க் கருத்துகளை தெரிவித்து போராட்டத்தை நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். 2014க்கு முன்பு, காஷ்மீர் மக்கள் எப்படி சித்தரிக்கப்பட்டார்களோ, அப்படியே எதிர் கருத்துகள் தெரிவிக்கும் அனைவரும் தற்போது சித்தரிக்கப்படுகிறார்கள். எதிர் கருத்துகள் மட்டும்தான் ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும். சுதந்திரமான கருத்து பரிமாற்றமே பரிணாம வளர்ச்சிக்கு உந்து சக்தி.

அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு பிறகு பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதா? ஜம்மு - காஷ்மீரில் நிலவும் மயான அமைதியே இதற்கு விடை அளிக்கும்.

அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு மற்றோரு முக்கிய காரணம், வளர்ச்சி. அரசியமைப்பு சட்டம் 370 நீக்கப்படுவதற்கு முன்பே, மற்ற மாநிலங்களை காட்டிலும் வளர்ச்சி அடைந்த பகுதியாகவே ஜம்மு - காஷ்மீர் திகழ்ந்தது. 

2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்களின் சராசரி ஆயுட் காலம் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே ஏழாவது இடத்திலும் ஜம்மு - காஷ்மீர் இருந்தது. குழந்தை இறப்பு விகிதம், ஏழ்மை குறைவாக உள்ள மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீரும் ஒன்று. மனித வளர்ச்சி குறியீடுகளில் குஜராத், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை காட்டிலும் ஜம்மு - காஷ்மீர் மேம்பட்ட மாநிலமாகவே இருந்தது.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் காஷ்மீர் பின் தங்கியிருப்பதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் 370 அல்ல. ஏனெனில், குத்தகை நிலங்களின் மூலம் தனியார் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருக்கலாம். பல ஆண்டுகளாக, இதுதான் வழக்கமாக இருந்தது.

தொழிற்சாலைகளை அமைக்க நிலங்களை கையகப்படுத்துவது பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்ததில்லை. காஷ்மீரில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யாததற்கு பயங்கரவாதம் காரணமாக இருந்தது. ஏற்கனவே இருந்த போர் சூழல் காரணமாகவே பயங்கரவாதம் அதிகரித்ததே தவிர அரசியலமைப்பு 370 சட்டத்தால் அல்ல. 

ஒரு குறிப்பிட குடும்பங்களே இசட்டத்தால் பயன்பெற்றுள்ளது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மேகபூபா முஃப்தி ஆகியோரின் கூட்டணியை 'குப்கர் கும்பல்' என அமித் ஷா விமர்சித்தார்.

சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், மின் நிலையங்கள் என தற்போது, மத்திய அரசால் திறக்கப்படும் அனைத்துமே முந்தைய அரசுகளால் கட்டப்பட்டவை ஆகும். இப்போது உள்ள மருத்துவ கல்லூரிகள் யாவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தபோது கட்டப்பட்டது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ஜம்மு - காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான், ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் நான்கு வழிச்சாலை, பனிஹால் மற்றும் சேனானி-நஷ்ரி சுரங்கப்பாதைகள் ஆகியவை கட்டப்பட்டன.

ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மேகபூபா முஃப்தி ஆகியோர்தான் ஜம்மு  - காஷ்மீரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளார்கள் என தெரிவித்துவிட்டு, இவர்களை அழைத்து ஏன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால், எதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஜம்மு - காஷ்மீரின் சிக்கல்கள்

இந்தியாவின் தேசியவாதமே ஒரு சில அடிப்படை விஷயங்களைக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று காஷ்மீர். ஊடகங்கள், சினிமாக்கள் மூலமாகத்தான் காஷ்மீர் குறித்து பொய்யான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்தான், ஒற்றுமை, தேசியவாதம் ஆகியவை பொய்யாக வளர்க்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் இன்று வரை சிக்கல் நிலவ இதுவும் ஒரு காரணம்.

காஷ்மீரில் பயரங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகிறது. இப்படி, ஜம்மு - காஷ்மீரை சுற்றி பல சிக்கல்கள் உள்ளன. இப்படியான, சிக்கல்களிலிருந்து வெளிவந்தால் மட்டுமே, காஷ்மீர் பிரச்னை முடிவுக்கு வரும். 

ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை குறித்த எண்ணம் வரும்போது, "பறவையை பறக்கவிடு, வாழ்வா? சாவா? என அதுவே முடிவு பண்ணிக்கட்டும்" என்ற கபாலி படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com