ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!

உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசி இன்றுடன் 76 ஆண்டுகள் முடிகிறது.
ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!

உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசி இன்றுடன் 76 ஆண்டுகள் முடிகிறது.

இரண்டாம் உலகப்போரில் மகுடம் சூடும் முனைப்பில் ஹிட்லரின் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அச்சு அணியிலும் பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் உள்ளிட்டவை நேச நாடுகள் அணியிலும் போரிட்டு வந்தன.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், அச்சு நாடுகளின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஜெர்மனியும், இத்தாலியும் தோல்வியின் விளிம்பிற்குச் சென்ற நிலையிலும் தெற்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை  நிலைநிறுத்திய ஜப்பான், நேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இதனிடையே, போரில் நேரடியாக பங்கேற்காத அமெரிக்கா, நேச நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை மட்டும் வழங்கி உதவி செய்து வந்தது. மேலும், அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தில் மிக சக்தி வாய்ந்த அமெரிக்க போர்க் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பசிபிக் பெருங்கடலிலுள்ள பேர்ல் துறைமுகத்தில்  நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போர்க் கப்பல்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த ஜப்பான், துறைமுகத்தில் தாக்குதல் நடத்த முடிவு செய்து களம் கண்டது.

டிசம்பர் 7, 1941ஆம் ஆண்டு அதிகாலையிலேயே பேர்ல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பல்கள் மீது ஜப்பானின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிய தொடங்கின.

இதை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கப் படையினர் அந்த இடத்திலேயே ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து போர்க்கப்பல்களும் கடலில் மூழ்கின. அதிலிருந்த ராணுவ தளவாடங்கள் அனைத்து அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்குப் பிறகுதான் இரண்டாம் உலகப்போரில் நேரடியாக களமிறங்கியது அமெரிக்கா. இதற்கு தக்க பதிலடி தருவதற்காகவும், தனது ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பல்வேறு உத்திகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது.

‘தி மன்ஹாட்டன்’ என்ற திட்டத்தை உருவாக்கிய அமெரிக்கா, பல நாட்டு விஞ்ஞானிகளின் உதவியுடன் அணுகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தது. இந்த திட்டம் மூலம் தான் 'லிட்டில் பாய்' மற்றும் 'ஃபேட்மேன்' என்ற கொடூர குண்டுகள் தயாரிக்கப்பட்டன. உலகளவில் தயாரிக்கப்பட்ட முதல் அணுகுண்டு இது.

அணுகுண்டு தாக்குதலுக்கு பின் ஹிரோசிமா 
அணுகுண்டு தாக்குதலுக்கு பின் ஹிரோசிமா 

இறுதியாக ஜூலை 26, 1945-ம் தேதி ஜப்பானை சரணடைய கோரி அமெரிக்கா கேட்டுக் கொண்டது. சரணடையவில்லையெனில் அழிவு ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. இதைக் கண்டுகொள்ளாத ஜப்பான், தொடர் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க ராணுவம், ஜப்பானில் குண்டு போடவேண்டிய இடங்களைத் தேர்வு செய்தனர். ஜப்பானின் முப்படைகளுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை தயார் செய்யும் ஹிரோஷிமாவும், தொழில் நகரான நாகசாகியும் தேர்வு செய்யப்பட்டன.

வழக்கமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்த ஒன்றுமறியா மக்களுக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை விடிந்தவுடன் வாழ்நாள் இருளில் மூழ்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய ஹிரோஷிமா மீது அமெரிக்க போர் விமானம் தாங்கி வந்த "லிட்டில்பாய்” வீசப்பட்டது.

அணுகுண்டு வெடித்த இரு விநாடிகளில் சுமார் 2000 அடி உயரத்திற்கு 4000  செல்சியஸ் வெப்ப நிலை ஏற்பட்டு அங்கிருந்தோர் கருகி சாம்பலாகினர்.  ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். 

தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானின் வேறு எந்த பகுதிகளுக்கும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஹிரோஷிமாவில் என்ன நடக்கிறது என்பதை அந்நாட்டு அதிகாரிகளால்கூட கணிக்க முடியவில்லை. இந்த நிகழ்வு நடந்து பதினாறு மணி நேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் மூலம்தான் உலக அரங்கிற்கே என்ன நடக்கிறது எனத் தெரிய வந்தது. 

ஹிரோஷிமாவின் இந்தப் பேரழிவை உலக நாடுகள் அறிவதற்குள், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகியில் “ஃபேட் மேன்” என்ற அணுகுண்டு வீசப்பட்டது.

குண்டுகள் வீசப்பட்ட 2 முதல் 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் அரசு அறிவித்தபடி, 90,000 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த மாதங்களில் இறந்தவர்களுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை சுமார் 1,66,000 ஆக உயர்ந்தது.

நாகசாகியில் 60,000 முதல் 80,000 வரையிலானோர் உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் பாதிப் பேர் குண்டு வெடிப்பு நடந்த கணத்திலேயே அந்தந்த இடங்களிலேயே உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

இதுமட்டுமல்லாது, தற்போது வரை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறந்து வருகின்றது.

இந்த குண்டுவீச்சு நடந்து 6-வது நாளில் அமெரிக்காவிடம் சரணடைவதாக  தெரிவித்த ஜப்பான் செப்டம்பர் 2ஆம் தேதி கையெழுத்திட்டது. இந்த அணுகுண்டு வீச்சுதான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசிப் பேரழிவை ஏற்படுத்தாதபட்சத்தில் இரண்டாம் உலகப் போர் மேலும் பல மாதங்கள் நீடித்து, இதைவிட அதிகமான மக்கள் இறந்திருப்பர் என்று நியாயப்படுத்தியது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டுகளின் விளைவை அறிந்த பின்பும் அணுகுண்டுகளின் தாகம் உலக நாடுகள் மத்தியில் அடங்கவில்லை. அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்துவரும் அமெரிக்காவும், ரஷியாவும் தங்களது நட்பு நாடுகளுடன் அணுகுண்டு தொடர்பாக பல ஒப்பந்தங்களில் கையெலுத்திட்டு, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து வருகின்றன.

அணுவை அழிவிற்கானதாகப் பார்க்காமல், நாட்டின் வலிமையை மற்ற நாடுகளின் மத்தியில் காட்டும் பொருளாக பார்க்கத் தொடங்கியதன் விளைவு, கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் 1000-க்கும் அதிகமான முறை அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

உலகளவில் அணுகுண்டுகள் வைத்திருக்கும் ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில், ஆசிய கண்டத்தை சேர்ந்த 3 நாடுகள் அடங்கும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் என அருகருகே உள்ள நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன. ஒருவேளை மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இயற்கையால் உலகம் அழியாவிட்டாலும், மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அணுவால் அழியும் என்பதையும், அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு தொடக்கப் புள்ளி வைத்தது அமெரிக்கா என்பதையும் யாரும் மறுக்க முடியாது!

(படங்கள் நன்றி : National Museum of Nuclear Science & History)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com