பங்களாவில் வசிப்போர் குடிநீருக்கு அதிகக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்

தமிழகத்தின் கடந்த 10 ஆண்டு கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.
பங்களாவில் வசிப்போர் குடிநீருக்கு அதிகக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
பங்களாவில் வசிப்போர் குடிநீருக்கு அதிகக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்

சென்னை: தமிழகத்தின் கடந்த 10 ஆண்டு கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை தொடர்பான பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் பல தகவல்கள் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் உண்மை.

அதில் ஒரு முக்கியத் தகவல் என்னவென்றால், சென்னை மாநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களை விடவும், அதில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மிக அதிகம் என்பதுதான். ஊழியர்களை விட, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகளவில் குடிநீர் வழங்கல் வாரியத்திலிருந்து ஓய்வூதியமாக செலவிடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, 2021, மார்ச் 31 நிலவரப்படி, சென்னை மாநகர குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு ரூ.548.91 கோடி கடன்பாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கல் வாரியத்தில் மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 2,621 ஊழியர்கள் உள்ளனர். ஆனால், ஓய்வூதியதாரர்கள் 5,818 பேர் உள்ளனர்.  அதன்படி, ஊழியர்களுக்கு ஓராண்டுக்கான செலவினம் ரூ.140.50 கோடியாக உள்ளது. ஓய்வூதியச் செலவினம் ரூ.127.92 கோடியாகும்.

மேலும், குடிநீர் வழங்கல் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.286.44 கோடியும், மின்சாரம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.497.68 கோடியும் செலவிடப்படுவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் தொகை மற்றும் அதிகளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்கள் பராமரிப்பு, வாரியத்தின் மூலமாகச் செய்யப்படாமல் வெளி முகமைகளின் வழியாகச் செயல்படுத்தப்படுவதால், பராமரிப்புச் செலவினம் ஆகியவை அதிகரித்து கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளுக்கான காரணிகளாகும்.

இயக்கச் செலவுகளை குறைவாக வசூலிப்பதே பற்றாக்குறைக்கான முக்கிய காரணியாகும். கிலோ லிட்டர் ஒன்றுக்கான இயக்கச் செலவு சுமார் 20.81 ரூபாயாக இருக்கும் போது, 2020-21 ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிலோ லிட்டருக்கு ரூ.10.42ம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிலோ லிட்டருக்கு ரூ.8.11 ரூபாயும் குடிநீர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2020-21ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீடுகளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட தொகை 44.21 சதவீதம் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. 

சென்னையில் அளவிடும் கருவியில்லாமல், நிலையான கட்டணத்தை, பெரிய வீடுகளில் வசிப்போர் செலுத்தி ஆதாயம் பெறும் இந்த சமமற்ற முறையினால், சிறிய குடியிருப்புகளில் வசித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் போன்றோர் அளவிடும் கருவியின் மூலம் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2,621 ஆகும்.

மின் விநியோகம், குடிநீர் வழங்கல் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பொதுப் பயன்பாடுகளை செயல்படுத்துகின்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் இக்கட்டான நிதிநிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

அவற்றின் மோசமான நிதிநிலைமை அவை வழங்கி வரும் சேவைகளின் தரத்தில் சரிவுக்கு வழி வகுப்பதோடு மட்டுமல்லாது, ஏற்கனவே மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நிதி ஆதாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவதாக உள்ளது. எனவே, மேற்குறித்த நிறுவனங்களில் சீர்திருத்தத்தை மேலும் ஒத்திவைக்க இயலாது சூழ்நிலை உருவாகியுள்ளது என்று  வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பங்களா போன்ற பெரிய வீடுகளில் வசிப்போருக்கு, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com