சொன்னதைச் செய்தாரா அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?
By கி.ராம்குமார் | Published On : 14th August 2021 04:10 PM | Last Updated : 14th August 2021 04:28 PM | அ+அ அ- |

திராவிட முன்னேற்ற கழக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். நடப்பு காலத்தில் உள்ள இடைக்கால பட்ஜெட்டில் திருத்தங்கள் மேற்கொண்டு எஞ்சிய 6 மாத காலத்திற்கு தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் உணர்த்தும் செய்திகள் என்ன?
தேர்தலுக்கு முன்பாகவே முந்தைய அதிமுக அரசின் நிர்வாகத் தோல்விகளை சுட்டிக்காட்டி வந்த பழனிவேல் தியாகராஜன் ஊடகங்களில் முக்கியக் கவனம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநிலம் சந்தித்துவரும் கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை குறித்த பல அதிர்ச்சிகர விவரங்களை வெளியிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துவந்த தமிழ்நாடு அரசின் கடனானது தற்போதைய அரசின் திட்டங்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பைக் கிளப்பின அவரது அறிக்கை. சுமார் ரூ.5.7 லட்சம் கோடி கடன் தமிழக அரசின் தலை மேல் தொங்கும் கத்தியாக உள்ளதைக் குறிப்பிட்ட நிதியமைச்சரின் உரை இந்த பட்ஜெட்டில் எப்படி எதிரொலிக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்தனர்.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: அறிய வேண்டிய அனைத்து விவரங்களும்..
தற்போதைய நிலைகளிலேயே இருந்தால்கூட பரவாயில்லை புதிய வரி ஏற்றங்கள் இல்லாமல் இருந்தாலாவது தப்பித்துக் கொள்ளலாம் என பேச்சுகள் அடிபட்டன. இவற்றுக்கு மத்தியில் நிதியமைச்சர் தனக்கு வைக்கப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றாரா? இல்லையா? தமிழக பட்ஜெட் சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு மாநில அரசின் பட்ஜெட் தாக்கல் என்பது வியக்கத்தக்க அறிவிப்புகளின்றி வழக்கமான சம்பிரதாயமிக்க அறிவிப்பு என்கிற அளவிலேயே மாறியுள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் எதிரொலிக்க இன்னும் சில காலம் தேவைப்படலாம் என கருத்து எழத் தொடங்கிய நிலையில் பெரிய பாதிப்புகளின்றி தனது பணியை முடித்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். புதிய நலத்திட்டங்கள் பெருவாரியாக இல்லை என்கிற போதிலும் முதலுக்கு மோசமில்லாமல் வெளியாகி இருக்கிறது தமிழக பட்ஜெட்.
வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தபோது குறிப்பிடப்பட்ட மாநில கடன்சுமையானது மின்கட்டணம் உயர்வு, பேருந்து போக்குவரத்து கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வில் எதிரொலிக்கும் என கருதப்பட்டது. ஆனால் அவற்றை தவிர்த்ததில் அரசின் மீதான விமர்சனங்களுக்கான வாய்ப்பை மறுத்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் மேலும் இந்த அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நிதி சிக்கலை கையாள சர்வதேச அறிஞர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது தொடங்கி தற்போதைய பட்ஜெட் தாக்கல் வரை நிதானமாக அதே சமயம் ஆழமான அடியை எடுத்து வைத்திருக்கிறது திமுக அரசு.
இதையும் படிக்க | முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்ட நாள்கள் அதிகரிக்கப்பட்டு 150 நாள்களாக உயர்த்தப்பட அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. இவற்றிக்கான ஊதியமும் ரூ.273 யிலிருந்து ரூ.300ஆக உயர்த்த பரிந்துரைப்பதாக தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
தேர்தல் காலத்தில் திமுகவின் முக்கிய வாக்குறுதியாக கவனிக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகுறைப்பு. பட்ஜெட் தாக்கலாவதற்கு சில நாள்கள் முன்பு எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக இதுதொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தந்திருக்கும் தமிழக அரசு இதன் மூலமாக மத்திய அரசின் மீது அரசியல் காய் நகர்த்தலையும் மேற்கொண்டுள்ளது.பாஜகவிற்கு இது அரசியல் நெருக்கடியாக இது அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ஆளும் பாஜக அரசுக்கு இதனை சுட்டிக்காட்டி கோரிக்கையை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
நடப்பு நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்புக்கு வாய்ப்பில்லை என கருதிய நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு மாநில அரசின் நிதிச்சுமைக்கு மேலும் இடராக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம் டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பின் கால அளவு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது, தமிழகத்தின் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் உருவாக்கம், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கும் தொழில்நுட்ப பூங்காக்கள் விழுப்புரம், திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுவது அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவல்லது.
மத்திய அரசு அறிவித்த புதியக் கல்விக் கொள்கையை நிராகரித்து வந்த தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கென தனிக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தும் என தெரிவித்திருப்பது உடனடியாக அமலுக்கு வருமா என்பதில் சந்தேகம் உள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர ரூ. 8017.41 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32599 கோடி போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்து துறைகளும் மின்னணு மயமாக்கப்படுவது, புதிய கொள்முதல் இணையதளம் ஆகியவை முறையாக நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் உரிய பலனை எதிர்பார்க்கலாம்.
தமிழக அரசின் மற்றொரு கவனிக்கத்தக்க அறிவிப்புகளாக தென்படுபவை தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் பருவநிலை மாற்ற இயக்கம். சூழலியல் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படவிருக்கிற செலவினங்கள் பாராட்டத்தக்கவை.
இதையும் படிக்க | ஆறுமுகசாமி ஆணையம் 90 சதவீத விசாரணையை முடித்து விட்டது: தமிழக அரசு தகவல்
பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது தொடர்பானது. இல்லத்தரசிகள் குடும்பத்தலைவர்களாக பெயர்மாற்றம் செய்யத் தேவையில்லை என தெரிவித்த அமைச்சர் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு பயன்பெறச் செய்யப்படுவர் என்கிற அளவில் சுருங்கி விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
இருந்தாலும் அவர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டதைப் போல் தமிழகத்தின் நிதிநிலையில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என்கிற அளவில் அவர் முன்வைத்துள்ள இந்த பட்ஜெட் சிறப்பு வாய்ந்தது.
17,000 மெகா வாட் மின்னுற்பத்தி புதிதாக நிறுவப்படும் என்கிற அறிவிப்பு, 10 நகரங்களில் சிப்காட் தொழில்பேட்டைகள், 1000 தடுப்பணைகள், புதிய மேம்பாலங்கள் முக்கிய அறிவிப்புகள் பல நீண்டகால பலனை தரக்கூடியவை.
மத்திய அரசுடனான தமிழக அரசின் நிதி சிக்கலைகளை கையாள தனிக்குழு அமைப்பது போன்றவை பலனளித்தால் மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களில் நிலவும் பெரிய இடைவெளிகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி, பற்றாக்குறை, வருவாய் மற்றும் செலவினங்கள் என நிலவும் பல சிக்கலுக்கு மத்தியில் தனக்கான தேர்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போதைக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.