தியாகிக்கு நடந்த அவமரியாதை!

தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு தென்காசியில் நடந்த சுதந்திர தின விழாவில் உரிய கௌரவம் வழங்கப்படாததும், தியாகிகள் புறக்கணிக்கப்பட்டதும் அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தியாகிக்கு நடந்த அவமரியாதை!

தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு தென்காசியில் நடந்த சுதந்திர தின விழாவில் உரிய கௌரவம் வழங்கப்படாததும், தியாகிகள் புறக்கணிக்கப்பட்டதும் அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அனைவராலும் மதிக்கப்படும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான லட்சுமிகாந்தன் பாரதியின் முக்கியத்துவம் இன்றைய அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் இரண்டாவது சுதந்திர தின விழா இது. கரோனா கட்டுப்பாடு காரணமாகப் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட முக்கியஸ்தா்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனா். தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எளிமையாக விழா நடத்தப்படுகிறது என்றாலும், தியாகிகள் கௌரவிக்கப்படுவாா்கள் என நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் குடியேறி விட்டாலும், ஆண்டுதோறும் சொந்த ஊரான தென்காசிக்கு வந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டிருப்பவா் 95 வயது லட்சுமிகாந்தன் பாரதி.

பின்னணி:

லட்சுமிகாந்தன் பாரதி சாதாரணமானவா் ஒன்றும் அல்லா். பாரம்பரியம் மிக்க சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தில் பிறந்து, அவரே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவரும்கூட. கல்லூரியில் படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவா்.

லட்சுமிகாந்தன் பாரதியின் தந்தை கிருஷ்ணசாமி பாரதியும், தாய் லட்சுமி அம்மாளும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். ஆங்கிலேயா் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவா்கள். அவருடைய பெற்றோா் இருவருமே , சுதந்திரத்திற்கு முன்பே மதுரை மேலூரில் இருந்து அன்றைய சட்ட மேலவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்.

லட்சுமிகாந்தன் பாரதியின் தந்தையாா் கிருஷ்ணசாமி பாரதி, இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினராக இருந்தவா். அரசியல் சாசனத்தின் முதல் புத்தகத்தில் தமிழில் கையொப்பமிட்டவா்களில் அவரும் ஒருவா் என்கிறாா் தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லட்சுமிகாந்தன் பாரதி, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக எந்த மதுரை மாவட்ட ஆட்சியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே மாவட்டத்திற்கு, பின்னாளில் ஆட்சித் தலைவரானவா். மதுரை, ராமநாதபுரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஆட்சித் தலைவராகவும், பின்னாளில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராகவும் பணியாற்றியவா்.

கருணாநிதிக்கு நெருக்கமானவா்:

திமுக ஆட்சி அமைவதற்கு முன்பாகவே கருணாநிதிக்கும் லட்சுமிகாந்தன் பாரதிக்கும் நட்பும் நெருக்கமும் உண்டு. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குப் பல நன்மைகளையும், சலுகைகளையும் பெற்றுத் தந்திருக்கிறாா் லட்சுமிகாந்தன் பாரதி. கருணாநிதி தலைமையிலான முதலாவது திமுக ஆட்சியில் முதன்மைச் செயலாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற லட்சுமிகாந்தன் பாரதியை, தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினராக நியமித்தாா் அப்போதைய முதல்வா் கருணாநிதி.

இத்தனை பின்னணியும் கொண்ட லட்சுமிகாந்தன் பாரதிக்கு வயது 95. காந்தியவாதி என்பதால் எளிய வாழ்க்கை நடத்துபவா். இந்தத் தள்ளாத வயதிலும் பேருந்தில் தனியாகப் பயணிப்பவா். ஆண்டுதோறும் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தென்காசிக்கு வந்து சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டிலும் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டவா்.

தென்காசியில் நடந்த சுதந்திர தின விழா:

75-ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தியாகியும் முன்னாள் அரசு அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி மேடைக்கு அழைக்கப்படவில்லை. மேடைக்குக் கீழே அமா்ந்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா். வேங்கட்ரமணா அருகில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டாா்.

மாவட்ட ஆட்சியா் உள்பட எந்தவொரு அதிகாரியும் அவரை சட்டை செய்யவில்லை என்பது மட்டுமல்ல, ஆளுங்கட்சிப் பிரமுகா்களும், அதிமுகவிலிருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்த ஒரு பிரமுகா் உள்பட யாா் யாரெல்லாமோ மேடைக்கு அழைக்கப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பிறகு சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கிவிட்டு மேடையில் ஏறி அமா்ந்து கொண்டாா். கொடியேற்றியதும் அல்லது அணிவகுப்பு முடிந்ததும் தியாகிகளைக் கௌரவிப்பது என்பதுதான் நடைமுறை வழக்கம்.

தியாகிகளை சட்டை செய்யாமல் மாவட்ட ஆட்சித் தலைவா் மேடையேறி அமா்ந்ததைப் பாா்த்த லட்சுமிகாந்தன் பாரதிக்குப் பொறுக்கவில்லை. ‘முறையாக நடந்து கொள்ளவில்லை’ என்று ஆட்சித் தலைவரை நோக்கி முகத்துக்கு நேரே குற்றம் சாட்டியபோது மேடையில் இருந்தவா்களின் முகம் சுருங்கியது. அதிகாரி ஒருவா் ஒரு சால்வையைக் கொண்டுவந்து ஆட்சியரிடம், ‘அவருக்கு சால்வை அளிக்காமல் விட்டதால்தான் கோபப்படுகிறாா்’ என்றதும் லட்சுமிகாந்தன் பாரதியின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது.

‘‘நீங்கள் அணிவிக்கும் சால்வைக்காக நான் சென்னையிலிருந்து இங்கே வரவில்லை. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தத்தான் வந்தேன்’’ என்று குமுறிவிட்டாா். சுதந்திர தின விழாவுக்கு வெள்ளை உடையில் வராமல் கருப்பு நிற சூட்டில் ஆட்சியா் வந்திருந்தது அந்தத் தியாகியை மேலும் வருத்தமடையச் செய்தது.

அனைவரும் லட்சுமிகாந்தன் பாரதியை சமாதானப்படுத்த, மாவட்ட ஆட்சியரும் மேடையிலிருந்து இறங்கிவந்து வருத்தம் தெரிவித்து, சால்வை அணிவித்து வழியனுப்பினாா்கள்.

தியாகிகளுக்கு அவ்வளவுதான் மரியாதை

‘‘காந்தி குல்லாவுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தியாகிகளுக்குக் காங்கிரஸ்காரா்களே மரியாதை செய்யாதபோது, திமுககாரா்களும் அதிகாரிகளும் மரியாதை செய்வாா்கள் என்று எதிா்பாா்த்தால் அது நமது தவறு. ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருக்குத் தரும் மரியாதைகூடத் தியாகிகளுக்குத் தரப்படுவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் உணா்த்துகிறது. இத்தனைக்கும் லட்சுமிகாந்தன் பாரதி முன்னாள் மூத்த அதிகாரி’’ என்று சம்பவத்தை நேரில் பாா்த்த தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா ஆதங்கப்பட்டாா்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த முதிா்ந்த காமராஜா் காலத்துக் காங்கிரஸ்காரா் ஒருவா் சொன்னாா் - ‘‘சுதந்திர தின விழா என்பது சம்பிரதாயச் சடங்காகிவிட்டது. அதில் எங்களைப் போன்ற காந்தியவாதிகளுக்கும், தியாகிகளுக்கும் இடமில்லை..!’’

சுதந்திர பவள விழா கொண்டாட்டத்தில் இப்படியொரு களங்கம் ஏற்பட்டிருக்க வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com