தலிபான்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் உலகம்: ஆப்கனில் நடப்பதென்ன?

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா, டென்மார்க், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
காபூல் விமான நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பாதுகாப்பு படையினர்.
காபூல் விமான நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பாதுகாப்பு படையினர்.

கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள் ஆப்கானிஸ்தான், தலிபான், காபூல் விமான நிலையம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இன்றுடன் ஒரு வாரமாகிறது. 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப்படைகள் வேகமாக வெளியேற்றப்பட்டதன் விளைவு, யாரும் கணிக்க முடியாதவாறு ஒரே வாரத்தில் ஆப்கனைத் தலிபான்கள் கைப்பற்றினார்கள்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றவுடன் அன்றைய இரவே அதிபர் மாளிகைக்குள் புகுந்த தலிபான்கள் வெளியிட்ட காணொலியால் ஆப்கன் நாட்டினர் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் சற்று அதிர்ந்துதான் போனார்கள்.

அமெரிக்க கட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிடியில் தற்போது நாடு சிக்கியுள்ளதால் மேலும் அவர்கள் 20 ஆண்டுகள் பின்நோக்கி கொண்டு செல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பெண்கள் உள்பட அந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்த அச்சம் அண்டை நாட்டின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஒருவர் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு உதாரணமாக காபூல் விமான நிலைய சம்பவங்களை சுட்டிக்காட்டினால் மறுப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்களைக் கண்டு உலக மக்கள் கலங்கிப்போனார்கள். முந்தைய ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை தலிபான்கள் தேடிக் கொல்வார்கள் என்ற உளவுத் துறையின் எச்சரிக்கையும், தலிபான்களால் இனி சுதந்திரம் பறிபோகும் என்ற அச்சத்திற்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

விமான நிலையத்தில் குவிந்தவர்கள் யாரும் இந்த நாட்டிற்குத்தான் போக வேண்டும் என நினைக்கவில்லை. எந்த விமானத்தில் இடம் கிடைக்கின்றதோ அந்த நாட்டிற்குச் சென்று உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

குழந்தைகள், பெண்களுடன் விமான நிலையத்தில் குவிந்த ஆப்கானியர்கள் எந்த விமானம் தரையிறங்கினாலும் அதில் முந்தியடித்து ஏறினர். கூட்டநெரிசலில் சிக்கிய பலர் தங்கள் உயிரைப் பலி கொடுத்தனர். மேலும் சிலர், அமெரிக்கா நாட்டினரை மீட்டுச் சென்ற விமானப் படையின் விமானத்தின் இறக்கையில் அமர்ந்து பயணம் செய்ய துணிந்ததன் விளைவு, வானிலிருந்து கீழே விழுந்து உயிரைப் பலி கொடுத்தனர். 

விமான நிலையங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். இதையடுத்து ஆப்கன் வான்வழி எல்லைக்குத் தடை விதிக்கப்பட்டு, விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

காபூல் விமான நிலையங்களில் நடந்த சம்பவங்களில் 50 பேருக்கு மேல் பலியாகியிருக்கலாம் என தலிபான் தளபதி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தங்கள் நாட்டு மக்களை மீட்க அனைத்து அரசுகளும் வியூகங்கள் வகுத்து சிறப்பு அனுமதியுடன் தங்களின் விமானப்படை மூலம் நாட்டு மக்களை தாயகம் அழைத்துச் சென்று கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய தலிபான் தலைவர்கள், ஆப்கனில் முந்தைய தலிபான்களின் ஆட்சியைப் போல் இல்லாமல் இஸ்லாம் சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாலின பாகுபாடு காட்டப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். மேலும், முந்தைய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவித்தனர்.

ஆனால், பல்வேறு நாடுகளின் உளவுப்பிரிவுகள் ஐ.நா.விடம் அளித்த அறிக்கையில்,  ஆப்கன் ராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறையில் பணியாற்றவா்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தலிபான்கள் கைது செய்து வருவதாகவும், அவர்கள் வீட்டில் இல்லையெனில் உறவினர்களை கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தானில் டாய்ச் வெல்லே நிறுவனத்தில் பணிபுரிந்த பத்திரிகையாளரை தேடிச் சென்ற தலிபான்கள், அவரது உறவினரை சுட்டுக் கொன்றதாக ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில், இருபாலரும் இணைந்து கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்தது, அவர்களது வாக்குறுதியை மீறியதற்கான சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கனைவிட்டு வெளியேறுவதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 31-ஐ அமெரிக்கா நிர்ணயித்துள்ள நிலையில், அதற்குள் அனைத்து போராட்டக் குழுவினரும் அடங்கிய புதிய அரசை உருவாக்குவதில் தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

மறுபக்கம், ஆப்கன் நாட்டு பெண்களும், சமூக ஆர்வலர்களும் தலிபான்களின் பிற்போக்குத்தன்மை அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி ஆப்கன் கொடியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, டென்மார்க், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தலிபான்களுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் ஆப்கன் மக்களோ, தங்கள் நாட்டிற்கு செல்ல அஞ்சி அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தூதரங்களுக்கு சென்று விசா கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பிற ஆசிய நாடுகளான வங்கதேசம், இந்தியா உள்ளிட்டவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க நாளை (ஆகஸ்ட் 24) ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது. அதேபோல், பிரிட்டன் தலைமையில் ஜி-7 நாடுகளும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

யார் ஆட்சியை நடத்தினாலும், வயிற்றுக்கு உழைத்துப் பிழைக்கத்தான் வேண்டும் என்பதால் காபூல் போன்ற பெருநகரங்களில் மீண்டும் பணிகளும் திரும்ப தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com