அறிவியல் ஆயிரம்: ராணி எலிசபெத்தின் அறிவியல் ஆலோசகர் 'ஜான் டீ'

ஜான் டீ ஒரு பிரபலமான ஆங்கிலேயே வெல்ஷ் விஞ்ஞானி, கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடர், புவியியலாளர், மறைநூல் அறிஞர் மற்றும் முதலாம் மகாராணி எலிசபெத்தின் அறிவியல் மற்றும் சோதிட  ஆலோசகர். 
ஜான் டீ
ஜான் டீ

ஜான் டீ ஒரு பிரபலமான ஆங்கிலேயே வெல்ஷ் விஞ்ஞானி, கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடர், புவியியலாளர், மறைநூல் அறிஞர் மற்றும் முதலாம் மகாராணி எலிசபெத்தின் அறிவியல் மற்றும் சோதிட  ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவர் ரசவாதம், முன்கணித்தல் மற்றும் ஹெர்மீடிக் தத்துவத்தையும்(எகிப்திய மற்றும் கிரேக்க கடவுள் மத தத்துவங்கள் ) பயின்றார். ஜான் டீ ஒரு பல்துறை வித்தகர். 

(பிறப்பு: ஜூலை, 13, 1527 - இறப்பு :1609) 

ஜான் டீயின் காலத்தில் அறிவியல், மந்திரம் மற்றும் ஜோதிடம் அனைத்தும் வழக்கத்தில் இருந்தன. அறிவியலுக்கும் மந்திரத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை/வேறுபாட்டை மக்கள் அறிந்து கொண்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.  ஜான் டீ அவரது காலத்தின் மிகவும் கற்றறிந்த மனிதர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.  ஜான் டீ தனது இருபதுகளின் துவக்கத்தில் இருந்தபோது பாரிஸ் பல்கலைக்கழகத்தில் வடிவியலின் பிதாமகனான யூக்லிட் பற்றி உரையாற்ற அழைக்கப்பட்டார். கணிதம், வானியல் மற்றும் வான் வழித்தடம் ஆகியவற்றில் நிபுணராக இருந்தார். ஜான் டீ இங்கிலாந்தில்  கண்டுபிடிப்பு நோக்கிய பயணங்களில் ஈடுபடும் மக்களுக்கு பயிற்சி அளித்தார். "பிரிட்டிஷ் பேரரசு" என்ற வார்த்தையை உருவாக்கியவரும் இவர்தான். 

இளமைக் காலம்

ஜான் டீ, லண்டனில்  உள்ள டவர் வார்டு என்ற இடத்தில், வெல்ஷ் குடும்பத்தில், ரௌலன்ட் டீ (Rowland Dee) மற்றும் ஜோஹான்னா(Johanna) தம்பதிக்கு 1527, ஜூலை 13 ஆம் நாள் பிறந்தார். ஜொனாதன் டீ என்பதுதான் அவரது உண்மையான பெயர். டீ 1535-1542 இல் செல்ம்ஸ்ஃபோர்ட் சாண்ட்ரி பள்ளியில் (இப்போதைய பெயர்: கிங் எட்வர்ட் VI இலக்கணப் பள்ளி) கல்வி பயின்றார். நவம்பர் 1542 இல் கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்து தனது 18 ஆவது வயதில், 1545 இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.  அங்கு அவரது திறமைகள் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டன. அவர் கிரேக்கம், லத்தீன், புவியியல், வானியல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைப் படித்தார். அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்கினார். அவர் ஒரு இரவில் நான்கு மணிநேரம் தூங்கினார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படித்தார். அவர் 1546 இல் ஹென்றி VIII ஆல் நிறுவப்பட்ட கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியின் நிறுவன உறுப்பினர் மற்றும் ஊழியரானார். டிரினிட்டியில், அரிஸ்டோபேன்ஸ் அமைதியின் தயாரிப்புக்காக அவர் தயாரித்த புத்திசாலித்தனமான மேடை விளைவுகள் அவரை  ஒரு மந்திரவாதியாக நீடித்த மதிப்பையும் புகழையும் தந்தன. . 1540 களின் பிற்பகுதியிலும், 1550 களின் முற்பகுதியிலும், அவர் ஐரோப்பாவிற்குபயணித்தார். கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனத்தில் உரை நிகழ்த்தினார். பின்னர் அவர் ஐரோப்பாவில் படிப்பதற்காகவும், பாரிஸ் மற்றும் லூவெய்னில் உரையாற்றுவதற்கவும் இங்கிலாந்தை விட்டு சென்றார். மீண்டும் 1540ல் இங்கிலாந்துக்கு வந்தார்.

ஜான் டீயின் திறமைகள்

லூவைன் (1548) மற்றும் பிரஸ்ஸல்ஸில் படித்து, பாரிஸில் வடிவியலின் பிதாமகன், யூக்லிட் பற்றி  விரிவுரை செய்தார். அவர் ஜெம்மா ஃப்ரிசியஸின் கீழ் படித்தார் மற்றும் கார்ட்டோகிராஃபர்களான ஜெரார்டஸ் மெர்கேட்டர் மற்றும் ஆபிரகாம் ஆர்டெலியஸ் ஆகியோருடன் நட்பு கொண்டார். இத்தாலியில் ஃபெடரிகோ கமாண்டினோ போன்ற பிற நாடுகளின் கணிதவியலாளர்களையும் சந்தித்தார். அவர்களோடு  பணியாற்றி கற்றுக்கொண்டார். கணித மற்றும் வானியல் கருவிகளின் முக்கிய தொகுப்போடு இங்கிலாந்து திரும்பினார். 1552 ஆம் ஆண்டில், அவர் லண்டனில் ஜெரோலாமோ கார்டானோவைச் சந்தித்தார். 1554 ல் அவருக்கு ஆக்ஸ்போர்டு கல்லூரயில் கணிதப் பேராசிரியர் பதவி கொடுத்தபோதும், அதனை வேண்டாம் என மறுத்தார்.

அறிவியல், சோதிடம் மற்றும் ஹெர்மீடிக்

ஜான் டீ-க்கு அறிவியல் தெரிந்திருந்தாலும், அவர் அதேநேரத்தில், மந்திரம் மற்றும் ஹெர்மீடிக் தத்துவத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி மூன்றில் ஒரு பகுதியை பெரும்பாலும் இந்த பாடங்களைப் படிப்பதிலும், இதனைத் தொடர்வதிலுமே செலுத்தினார். அவரது காலத்தில், இந்த சோதிடம் தொடர்பான பாடங்கள் அறிவியலை எதிர்ப்பதாக கருதப்படவில்லை. அவை அறிவியலின் ஒரு பகுதி என்று கருதப்பட்டது.

புத்தகங்கள் வடிவமைப்பு

ஜான் டீ 1564 இல் மோனாஸ் ஹைரோகிளிபிகா என்ற ஹெர்மீடிக் படைப்பைப் பற்றிய புத்தகம் எழுதினார். இது ரசவாதம் பற்றியதும்கூட.  இது அனைத்து படைப்புகளின் மாய ஒற்றுமையையும் குறிக்கிறது. இந்த வேலையை டீயின் அதீதப் பணி என மக்கள் மிகவும் மதிப்பிட்டனர். இருப்பினும், இது பற்றி ஒரு ரகசியம் இருந்தது. இது புத்தகத்தை இன்று புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. அவர் 1570 இல் ஹென்றி பில்லிங்ஸ்லியின் யூக்லிட்டின் கூறுகளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு "கணித முன்னுரை" ஒன்றை வெளியிட்டார். மற்ற கலை மற்றும் அறிவியலுக்கு கணிதம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி அவர் எழுதினார். இந்த புத்தகம் பொதுமக்களுக்காக எழுதப்பட்டதால் இது டீயின் மிகவும் பிரபலமான படைப்பாக பேசப்படுகிறது. அவர கணிதத்தில் +, -, ÷, & x என்ற குறியீடுகளை அறிமுகப்படுத்தினார்.

ராணியின் ஆலோசகர்

ஜான் டீ சூனியம் செய்ததாகவும் ராணி மேரி மற்றும் இளவரசி எலிசபெத் ஆகியோரின் ஜாதகங்களை வைத்திருந்ததற்காகவும் 1555 ஆம் ஆண்டில், அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்; குற்றச்சாட்டுகள் ராணி மேரிக்கு எதிரான தேசத்துரோகமாக விரிவுபடுத்தப்பட்டன. 3 மாதம் சிறையில் இருந்தார். பின்னர்  ஜான் டீ,  ஸ்டார் சேம்பரில் நின்று தனக்காக தானே வாதாடி, அவரை விடுவித்துக்கொண்டார். அவர் விடுவிக்கப்பட்ட பின்னர், 1558இல் எலிசபெத் சிம்மாசனத்தில் அமருவதற்கான வெற்றி பெற்றபோது, ​​டீ அறிவியல் ஆலோசகராகவும் சோதிடக் கணிப்பாளராகவும் மற்றும் ஆசானாகவும் பொறுப்பு ஏற்றார். அவரது முடிசூட்டு தேதியைக்கூட தேர்ந்தெடுத்தார். பின்னர் டீ மற்றும் எலிசபெத் சில நேரங்களில் ரகசியமாக தொடர்பு கொண்டனர். அவர்கள் ரகசிய குறியீட்டில் எழுதப்பட்ட கடிதங்களை அனுப்புவார்கள். அவர் தனது குறியீட்டு கடிதங்களில் “007” கையெழுத்திடுவார். 

1550 முதல் 1570 வரை, இங்கிலாந்தின் கண்டுபிடிப்பு தொடர்பான  பயணங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். 1570ல் அவர் பிரிட்டிஷ் அரசுக்காக அதனை உருவாக்க அதன் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக செயல்பாடு குறித்து பிரிட்டானிக்கே ரிபப்ளிக்கே சினாப்ஸிஸ் (Bryttanicae Republicae Synopsis) என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். இதுதான் ஒரு "பிரிட்டிஷ் பேரரசை" பல நூற்றாண்டுகளுக்கு சரியாக உருவாக்க வழிவகை செய்தது. மேலும் அரசை வழிநடத்தி ராணுவ ஆற்றலையும் வளர்க்க அரசியல் தொழில்நுட்ப உதவிகளை வழங்கினார்,

அவர் முதலாம் எலிசபெத்தின் பணத்துடன் ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் சென்ற காரணம், அவர் ராணி எலிசபெத்துக்காக ஒரு உளவாளியாக செயல்பட்டிருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. அதன் பின் அவர் ராணி எலிசபெத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர் ஹம்ப்ரி கில்பர்ட் போன்ற தொழில்முனைவோரின் நெருங்கிய கூட்டாளியானார் ஜான் டீ. .

இங்கிலாந்தின் பெரிய நூலகம்

பழைய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பதிவுகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு தேசிய நூலகத்தை நிறுவுவதற்கும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை 1556 ஆம் ஆண்டில் டீ ராணி மேரியிடம் தெரிவித்தார். ஆனால் அது எடுபடவில்லை. அதற்குப் பதிலாக, மோர்ட்லேக்கில் தனது தனிப்பட்ட நூலகத்தை விரிவுபடுத்தினார். அவரது நூலகம் இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்தது. அதில் சுமார் 4,000 புத்தகங்கள் இருந்தனர். அங்குள்ள பல்கலைக்கழக நூலகத்தை விடப் பெரியது அது. இங்கிலாந்திலும் மற்றும் ஐரோப்பா கண்டத்திலும் புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைப் பெற்றார். பல்கலைக்கழகங்களுக்கு வெளியே கற்றல் மையமான டீயின் நூலகம் இங்கிலாந்தில் மிகப் பெரியதாகி பல அறிஞர்களை ஈர்த்தது. ஜான் டீ அவரின் புத்தகங்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்தின் தேசிய அருங்காட்சியகமாக வைக்கபடும் என நம்பினார்.

பிற்கால வாழ்வு

அப்போது ஜான் டீ தனது செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் மற்றும் அறிவிலும்கூட போதுமான  திருப்தி அடையவில்லை. தனக்கு இன்னும் அதிக தேடல் மற்றும் அறிவு சில விஷயங்களில் தேவை என்பதை உணர்ந்தார். எனவே 1580களின் முற்பகுதியில், அவர் அதிக அறிவைப் பெற இயற்கைக்கு மேம்பட்ட அறிவியல் அல்லாத வழிகளைப் பயன்படுத்த விரும்பினார். அவர் தேவதைகள் மற்றும் தேவதூதர்களிடமிருந்து அறிவைப் பெற விரும்பினார்.

பின்னர் ஜான் டீ  1582 இல் எட்வர்ட் கெல்லி என்பவரைச் சந்தித்து அவருடன் நண்பரானார். இவர்கள் இருவரும் சேர்ந்து இயற்கைக்கு மேம்பட்ட பல விஷயங்களைச் செய்ய விரும்பினார்கள். இறந்தவர்களின் ஆவியுடன் பேசுவதற்கு ஏற்பாடு நடந்தது. ஒரு படிக பந்தைப் பயன்படுத்தி தேவதூதர்களிடமிருந்து தரிசனங்களைப் பெற கெல்லி டீக்கு உதவினார். தேவதூதர்கள் அவர்களுக்கு ஏனோச்சியன் என்ற மொழியைக் கொடுத்து கெல்லி மூலம் பல புத்தகங்கள் எழுத ஆணையிட்டதாக கூறப்பட்டது.  டீயின் படிக பந்து இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இன்னும் கூட ஜான் டீயின் பெரும்பாலான ஆவணங்களும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன.

வானியலாளர் டைகோ பிரஹெவின் நட்பு

டீ டைகோ பிரஹேவின் நண்பராக இருந்தார். நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் படைப்புகளை அறிந்திருந்தார். அவரது வானியல் கணக்கீடுகள் பல கோப்பர்நிக்கசின் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை, இருப்பினும் அவர் ஒருபோதும் சூரிய மையக் கோட்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. காலண்டர் சீர்திருத்தத்தின் சிக்கலுக்கு கோப்பர்நிக்கசின் கோட்பாட்டை டீ பயன்படுத்தினார். 1583 ஆம் ஆண்டில், அக்டோபர் 1582 முதல் போப் கிரிகோரி XIII ஆல் அறிவிக்கப்பட்ட புதிய கிரிகோரியன் நாட்காட்டியில் ராணிக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஏழு குறிப்பிட்ட திருத்தங்களுடன் இருந்தாலும், இங்கிலாந்து அதை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

காலண்டர்

டீ வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து ஜூலியன் காலெண்டரைப் பயன்படுத்தியது மற்றும் ஆங்கில புத்தாண்டு மார்ச் 25 அன்று தொடங்கியது. தனது சொந்த வானியல் கணக்கீடுகளை மேற்கோள்காட்டி, மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொள்ளுமாறு ராணி மற்றும் அவரது சபையை டீ கெஞ்சினார். சபை மறுத்துவிட்டது. கிரிகோரியன் நாட்காட்டி ஒரு கத்தோலிக்க யோசனை என்று கூறினார்கள் (இது எல்லாவற்றிற்கும் மேலாக, போப் கிரிகோரி XIII க்கு பெயரிடப்பட்டது). 1752 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜான் டீயின் இறுதிக் காலம்

1583 ஆம் ஆண்டில் இடையில் கொஞ்ச நாட்கள் ஐரோப்பா சென்று அங்கு  டீ இருந்தபோது, இங்கிலாந்தில் ​​மோர்ட்லேக் என்ற ஊரில் உள்ள  அவரது வீடும் நூலகமும் ஒரு கும்பலால் அழிக்கப்பட்டன. மேலும் அவர் பல புத்தகங்கள் அவரது முன்னாள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் திருடப்பட்டதையும்  அவர் அறிந்தார். இந்த கால கட்டத்தில் ஜான் டீ எலிசபெத் மகாராணியிடம் உதவி கேட்டார். மகாராணி ஜான் டீயை  1592 இல் மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்துவின் கல்லூரியின் வார்டனாக்கினார். இதில் அவருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அவருக்கு இது மரியாதை குறைவானதாகக் கருதினார். ஆனாலும் அந்த பொறுப்பில் 1603இல் தானாகவே விலகினார்.

பின்னர் 1603இல் முதலாம் எலிசபெத் இறந்தபோது, ​​டீயின் செல்வாக்கும் அவ்வாறே இருந்தது. ஆனால் அவர் மோர்ட்லேக்கிலுள்ள தனது வீட்டிற்கு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர் வறுமையில் 1608/1609 ல் இறந்தார்.

அவர் இறந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்கால ராபர்ட் காட்டன் சில டீ எழுத்துக்களை/தரவுகளைக் கண்டுபிடித்தார், அவை பெரும்பாலும் டீ தேவதூதர்களுடனான தொடர்புகளின் பதிவுகள். இந்த எழுத்துக்களை அறிஞர் மெரிக் காசாபோனிடம் கொடுத்தார். அவர் அவற்றை 1659ல் புத்தகமாக வெளியிட்டார். புத்தகம் மிகவும் பிரபலமானது மற்றும் விரைவாக விற்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

டீ மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு எட்டு குழந்தைகள் இருந்தன. இவரது மூத்த மகன் ஆர்தர் டீ. அவர் ஒரு இரசவாதி மற்றும் ஹெர்மீடிக் எழுத்தாளராகவும் இருந்தார்.

மர்மமான மனிதர்

டீயின் புத்தகத் தொகுப்பு கவிதை முதல் கணிதம் வரை ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கியது. ஆனால் அவரது தொகுப்பில் மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் நிச்சயமாக பிரபலமான வொயினிக் கையெழுத்துப் பிரதி(Voynich Manuscript) ஆகும். அறியப்படாத எழுத்து முறைமையில் எழுதப்பட்ட மர்மமான கையெழுத்துப் பிரதி அது. 21 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு காலத்தில் டீக்கு சொந்தமானது என்றும்  நம்பப்படுகிறது. டீ தான் அதை எழுதியதாக சிலர் நினைக்கிறார்கள்.

[ஜூலை  13 - ஜான் டீ -யின் பிறந்தநாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com