எழுத்தாளர் 'மோகமுள்' தி. ஜானகிராமனின் நூற்றாண்டு
By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | Published On : 28th June 2021 11:22 AM | Last Updated : 28th June 2021 11:23 AM | அ+அ அ- |

தி. ஜானகிராமன்
புகழ்பெற்ற எழுத்தாளர் 'மோகமுள்' தி. ஜானகிராமன் பிறந்த நூற்றாண்டு இது.
கல்லூரியில் 1970-களில் படிக்கும்போது மதுரை மீனாட்சி பதிப்பகம் செல்லப்பன் வெளியிட்ட தி. ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி சிறுகதைத் தொகுப்பு பாட நூலாக இருந்தது. அதைப் படிக்கும்பொழுதுதான் தி.ஜானகிராமன் மீது ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது.
அப்போது, ஒரு முறை மதுரை சென்றபோது மேலக்கோபுர வாசல் தெருவிலிருந்த சென்ட்ரல் டாக்கீஸ் அருகிலிருந்த மீனாட்சி பதிப்பகத்தில் அக்பர் சாஸ்திரியின் 20 பிரதிகளை வாங்கி நண்பர்களுக்குப் பரிசாக அளித்த நினைவுகளெல்லாம் இருக்கின்றன. அப்படி ஒரு ஈர்ப்பு அவர் எழுத்தின் மீது இருந்தது. தஞ்சாவூரில் நடந்த திருமணத்தில் ஒரு முறை 1976 இல் இவரைப் பார்த்ததுண்டு.
ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் மாதம் 28-ம் தேதி, 1921-ம் ஆண்டு.
தி. ஜா. பிறந்த ஊர் தேவங்குடிதான். அம்மாவின் சொந்த ஊரில்தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அதுதான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர் தஞ்சை ஜில்லா, அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.
அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில்தான், பள்ளிப்படிப்பு காலம்.
கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில்.
தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவசனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட், வால்மீகி ராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து வரிவரியாக விளக்கித் தமிழில் ஹரிகதா செய்வதுதான் பிரவசனம். ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார்.
தி. ஜானகிராமனின் அண்ணன் பெயர் ராமச்சந்திரன். அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட். வேத பாடசாலையில் சமஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட். ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன்தான்.
'கமலம்' குறுநாவல் தொகுப்பை, "இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டிருந்தார் தி.ஜா. மீனாட்சி பதிப்பகம் வெளியிட்டபோது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது.
இந்த ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் வாழ்ந்த ஊர்தான் 'கீழவிடயல் சுருப்பூர்'. அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர். முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில்தான் செட்டில் ஆனார்கள்.
ஜானகிராமன் தில்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குதான் பெற்றோரைக் காண்பதற்கு வரவேண்டியிருந்தது. ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர்தான்.
ஜானகிராமன் தில்லி போகுமுன் சென்னை மயிலாப்பூர் ராக்கியப்ப முதலி தெருவில் குடியிருந்தார்.
சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப் புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். நடந்தாய் வாழி காவேரி என சிட்டியுடன் இணைந்து இவர் எழுதியது அற்புதமான ஆவணம். இன்றைக்கும் என்றைக்கும் தமிழின் மிகச் சிறந்த பத்து நாவல்கள் என யார் பட்டியலிட்டாலும் அந்தப் பட்டியலில் தி. ஜானகிராமனின் மோகமுள் இருக்கும்.
பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டுவசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார். தி.ஜானகிராமன் இறந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டுதான். இறக்க வேண்டிய வயதா? ஆனால் ஜானகிராமன், "வயசானா இருக்கக் கூடாது. அறுபது வயதுக்கு மேல் இருக்கக் கூடாது" என்று அடிக்கடி சொல்வாராம்.
இன்று அவர் இல்லை. ஆனால், அவருடைய எழுத்துகள் எல்லாம் அழியாப் புகழுடன் உயிர்த்திருக்கின்றன.
[தி. ஜானகிராமன் பிறந்த நாள் இன்று]