பெண்ணின் பெருந்தக்க யாவுள

பெண்ணைவிடப் பெருமையுடையவை ஒன்றும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.
பெண்ணின் பெருந்தக்க யாவுள
பெண்ணின் பெருந்தக்க யாவுள

பெண்ணைவிடப் பெருமையுடையவை ஒன்றும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு. பெண் ஒரு தெய்வப்பிறப்பு என்பதால்தான் உயிர்வாழ இன்றியமையாத நீர், நிலம் போன்றவை பெண்ணாகவே கருதிப் போற்றப்படுகின்றன. கண்ணையும் கருத்தையும் கவரவல்ல கலைத்தாயாகவே வழிபடப்படுகின்றன. உலக இயக்கத்திற்குக் காரணமான சக்தி பெண்ணாகவே கருதப்படுகின்றாள். பெண் செழுமையின் அடையாளம்; மனித குலம் தழைக்க வந்தவள்; ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கான தாய்ப்பால் எனும் அருமருந்தை வழங்குபவள்; அன்பிற்கினியவள், கருணை வடிவானவள். மனிதனால் முதலில் அறிந்துகொள்ளப்பட்ட உறவாகத் தாய் உறவு மட்டுமே இருந்திருக்க முடியும்.

விலங்குத் தன்மையிலிருந்து மாறி ஆற்றங்கரை ஓரங்களில் நிலையான வாழ்க்கை வாழ்ந்த வேளாண் சமுதாயத்தில் தாய்வழிச் சமூகம் கடைபிடிக்கப்பட்டது. ஆண்கள் வேட்டையாடச் சென்றபோது பெண்கள் பயிர்த்தொழிலை மேற்கொண்டதோடு, கொடிய விலங்குகள், நோய்கள், இயற்கைச் சீற்றங்களிலிருந்து குடும்பத்தைப் பாதுகாத்தனர். எனவேதான், நாகரிகத்தின் துவக்க காலம் (புதிய கற்காலம்) முதற்கொண்டு பெண் வணங்கத்தக்கவளானாள். பழம்பெரும் உலக நாகரிகங்களில் தாய்மைக்குரிய பெருத்த வயிறு, பருத்த மார்பகங்கள் போன்ற உடலமைப்புகளுடன் கூடிய பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிக தொல் பொருள்களும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்புக்கால தாயுருவ சிற்பமும் (பொ.ஆ. மு. 1000) இதற்குச் சான்று பகர்கின்றன. எனவே, பால் கொடுப்பது, வளர்ப்பு, காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடும்பத் தலைவி மரியாதைக்குரியவளாகி தெய்வமானாள்.

கோயில் வழிபாடு தோன்றியதும் கோயில்களில் இடம்பெற்றுள்ள பெண் சிற்பங்களின் இடைப்பகுதியை ஆடைகள் அலங்கரிக்க, மேற்பகுதி மட்டும் திறந்த மேனியாகவே காட்சியளிக்கின்றன. இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வரும் நிலையில் இதன் உண்மைத் தன்மையினைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

முற்காலப் பெண்கள் மேலாடை அணிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு அறியலாம். கோயில் பெண் சிற்பங்களை உற்றுநோக்கின் ஒருசில பெண்சிற்பங்கள் மார்புக் கச்சையுடன் காணப்படும். தமிழ்நாட்டில் பல்லவர் காலம் முதற்கொண்டு சுமார் ஆயிரத்து நானூறு கால கலைவரலாற்றில் இதனை நாம் கண்டறியலாம்.

நாக கன்னிகைகள், சப்தகன்னியர், மகிடாசுரமர்த்தினி, துர்க்கை, வள்ளி, ருக்குமணி, ஸ்ரீதேவி, புஷ்கலை போன்ற கன்னியர்கள் மார்பில் கச்சை அணியப்பட்டுள்ளது. இது கன்னிப் பெண்கள் மேலாடை அணிவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

தாய்மையின் அடையாளமாகக் கருதப்படும் சிற்பங்கள் குறிப்பாக, பூதேவி, சரசுவதி, தெய்வானை, உமாதேவியார், பூரணி ஆகியவற்றில் மேலாடையின்றி அமைந்திருக்கும். இது தாய்மையின் பரிவைக் காட்டக்கூடியதே தவிர விரசம் ஏதுமில்லை. தாய்மை ஒரு பூரண அழகு. அது தெய்வீக அம்சத்தை அளிக்கவல்லதாகும்.

இந்தியாவிற்கு வருகைபுரிந்த பயணிகள் தங்களது குறிப்புகளில் பெண்கள் மேலாடையின்றிக் காணப்பட்டதாகக் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் இதனை இன்றும் நாம் காணமுடிகின்றது. வயதானவர்கள், குழந்தைகளைப் பெற்றவர்கள் மேலாடை அணிவதைத் தவிர்த்துள்ளனர்.

சிற்பங்கள் காலக்கண்ணாடி எனக் கூறப்படினும் பெண் சிற்பங்கள் மேலாடையின்றி இருப்பதால் அக்காலப் பெண்டிரும் அவ்வாறே இருந்திருப்பர் என்பது அர்த்தமற்றதாகும்.

திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலங்களில் கோயில்கள் சமுதாயத்தின் மைய இடமாகத் திகழ்ந்தன. கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி வாழ்வியல் நெறிகளைப் புகட்டும் தகவல் களஞ்சியங்களாகும். கோயில்களுக்கு வருபவர்கள் பயனுறும் வகையில் உணர்ச்சிகளை நன்னெறிக்கண் செலுத்தக்கூடிய சிற்பங்கள் கோயில்களில் இடம்பெற்றுள்ளன. பெண்மை போற்றப்பட வேண்டும் என்பதை குறியீடு ரீதியாக வெளிப்படுத்தும் ஆற்றல் இந்தியக் கலைப் பண்பாட்டிற்கே உரிய தனித்தன்மையாகும். சொல்லால் வெளியிட முடியாத கருத்தைத் திருவுருவங்கள் அங்க இலட்சணங்கள் மூலம் தெரிவிக்கின்றன.

உலகக் கலை வரலாற்றில் இந்தியக் கலைக்கென்று தனிச்சிறப்புண்டு. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டது இந்தியா என்பதால் புகழ்மிக்க வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம், "அதிசயம் அதுதான் இந்தியா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கலை ஆன்மீகம் தொடர்புடையதாக விளங்குவதால் வழிபாட்டிடங்களை அலங்கரிக்கச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இந்தியக் கலை உள்ளதை உணர்ந்தவாறு அமைவது. உலகளாவிய விஷயங்களும் இறையியலும் இணைந்த குறியீட்டு முறையில் அமையும்.

சிற்பம் பிரதிபலிக்கும் உடல் அமைப்பொழுங்கு, கை அமைதிகள், பங்க அமைதிகள், ஆசன அமைதிகள் மூலம் வெளிப்படும். அத்தகைய சிற்பங்கள் நம்முள் உறையும் பேரானந்த மெய்ப்பொருளை உணர்ந்துகொள்ள உதவும் ஊடகங்களாகின்றன.

கலைஞன், படைத்தல், இரசனை தொடர்பான விதிமுறைகளை இந்தியக் கலை மரபு வகுத்தளித்துள்ளது. சிற்பத்தை இரசிக்கும் முறை ஏனைய கலைகளை இரசிக்கும் முறையிலிருந்து வேறுபட்டது. இதனை சிற்பத்தின் தோற்ற வெளிப்பாட்டிலிருந்தே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

இந்திய சிற்பங்கள் சமய அடிப்படைக் கொண்டனவாக இருப்பினும், அது ஒரு கலைப்படைப்பாக, அழகியல் அனுபவத்தைத் தரவல்லதாக, இரசனைக்குரியதாக அமைந்திருக்கும்.

இந்திய நாட்டுச் சிற்பி தன் விருப்பத்திற்கிணங்க சிற்பங்களை அமைக்க இயலாது. காலந்தோறும் போற்றப்படும் சிற்ப மரபை அடியொட்டி, சிற்ப சாஸ்திரங்கள் கூறும் இலக்கண முறைப்படி, விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் அமைக்க இயலும். எனவேதான், இந்திய சிற்பங்கள் உலகளாவிய அளவில் இன்றும் சிறப்பிடம் பெற்றுள்ளன.

நுண்ணறிவும் உள்நோக்கும் கற்பனை வீச்சும் உடையவரே தெய்வீக சிற்பிகளாவர். உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்டு அத்துடன் தனது கற்பனையையும் புகுத்தி ஆன்மீகத்தை அடியொற்றி சிற்பங்கள் கலைஞனால் படைக்கப்படுகின்றன.

தாய்மை எனும் உள்ளழகு புற அழகிலே ஔிபெற வேண்டும் என்னும் உயரிய கொள்கையின் அடிப்படையிலே கலைஞன் தனது ஒப்பற்ற சிற்பங்களில் படைத்துள்ளான். இதனையே நாம் மேலாடையின்றிக் காணப்படும் பெண் சிற்பங்களில் காணலாம்.

அத்தகைய சிற்பங்கள் கூறும் உண்மைகளை ஊனக்கண்களால் கண்டுணர முடியாது. அகக் கண்களால் கண்டு மெய்யுணர்வால்தான் உணர முடியும். அவ்வாறு உணர்ந்தவர்களே பெண்மையைப் போற்றுவர்.

கட்டுரையாளர் : 
சிற்பத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com