நேதாஜி கண்ட தமிழ் வீராங்கனை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இராணுவப்படையில் இளம் வயதிலேயே தன்னை இணைத்துக்கொண்ட வீரத்தமிழ்ப்பெண் ஜானகி.
ஜானகி
ஜானகி

இந்திய விடுதலை நூற்றாண்டுகள் கடந்த போராட்ட வரலாற்று செய்திகளைப் பின்புலமாகக் கொண்டது. பல்வேறு தலைவர்கள் தோன்றி விடுதலை வேள்வித்தீயை மக்களிடையே மூட்டினர்.

தலைவர்களின் போராட்ட முறையினைக் கொண்டு விடுதலை வரலாறு தீவிரவாதமாகவும் மிதவாதமாகவும் பார்க்கப்பட்டது. புரட்சிப் பாதையில் சென்ற ஆயுதம் தரித்த போராளிகளும் அவர்களை வழிநடத்தும் திடமான தலைவர்களும் ஒருபக்கம் அதிலும் குறிப்பாக காந்திய வருகைக்கு முன்னர் இந்திய விடுதலைக்கான காலகட்டம் காந்திய வருகைக்குப் பின்னர் நடைபெற்ற அகிம்சா வழியிலான போராட்ட முறை என இருவேறு பிரிவுகளாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

காங்கிரசில் இருந்து காந்தியோடு இணைந்து ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பெற்று அத்தேர்வினை மகாத்மா காந்தி விரும்பாததால் தலைவர் பதவியைத் துச்சமாகத் தூக்கி எறிந்து பட்டாபி சீதாராமய்யாவுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

பதவியின்மீது இவருக்குப் பற்று இல்லாததையே இச்செயல் காட்டுகிறது. பின்னர் இந்தியாவை விட்டுப் புலம் பெயர்ந்து ஜெர்மன் ஜப்பான் போன்ற நாட்டு அரசுகளோடும் தலைவர்களோடும் நெருங்கிய நட்புகொண்டு இந்திய விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

அவரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் அதிக அளவில் உணர்வுபூர்வமாக இணைத்துக்கொண்டு போராட்டக் களங்களில் தமிழர்கள் முன்னின்றனர். ஐசூஹ அமைப்பில் இணைந்து போராடுவதை தன்னுடைய வாழ்நாள் பிறவிப் பயனாகக் கருதினர்.

தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல இளம் பெண்களும் இப்படையினில் சேர்ந்து கொண்டதுதான் பெருமைக்குரிய ஒன்றாகும். அப்படி தன்னை இணைத்துக் கொண்டவர்தாம் வீரத்தமிழ்ப்பெண் ஜானகி.

மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்திய விடுதலைக்காக தங்கள் பங்களிப்பினை வழங்குங்கள் என்று சுபாஷ் சந்திரபோஸ் கேட்டபோது உடனடியாக தாம் அணிந்திருந்த தங்க கம்மல்களைக் கழட்டித் தந்தவர்தான் இந்த ஜானகி ஆதிநாகப்பன்.

அதுமட்டுமா இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று முடிவு செய்தார். அப்படி முடிவு செய்தபோது அவருக்கு வயது பதினெட்டு.

சராசரிப் பெண்கள் தன் வீடு, குடும்பம் என்று வாழக்கூடிய நிலையில் வசந்தமான வாழ்வைத் தொடங்க வேண்டிய பருவ வயதில் குடும்பத்தின் எதிர்ப்பையும் தந்தையாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தன் கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்து இறுதியில் பெற்றோரின் சம்மதம் பெற்று இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார்.

முதல்நாள் படையில் கொடுக்கப்பட்ட உணவு உண்ணக்கூடிய நிலையில் இல்லை. தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளும் அமைப்பின் விதிமுறைகளும் இவரைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது.

இருந்தும்கூட நாட்டின் மீதுள்ள பற்றினால் அவைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு செயலாற்றினார். அவருடைய உறுதியாலும் துணிவாலும் அங்கு நடைபெற்ற படை அதிகாரிகளுக்கான தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார்.

அதன்பிறகு இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி இராணிப் படைப்பிரிவில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். அவ்வாறு அப்படையின் துணைத்தளபதியாகப் பணியேற்ற காலம் தொடங்கி பணிசெய்த அனுபவங்களைக் குறித்து ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

ஒன்பது வயதில் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் ஏறி மலாயா நாட்டின் பினாங்கிற்கு வந்தவர், படிப்படியாக வாழ்வில் முன்னேறி எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் அரசியல்வாதியாகவும் பின்னர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் அதன்பிறகு சட்டத்துறை துணை அமைச்சராகவும் அடுத்த இரண்டாண்டுகளில் பிரதமர் துறையில் முழு அமைச்சராகவும் சேவை செய்து, உயர்நிலையில் இருந்து டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஜான்சி ராணி படையின் தலைவிகளில் ஒருவராகத் திகழ்ந்த ஜானகியை கலப்பு மணம் செய்துகொண்டார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தொடங்கப்பெற்ற காலத்தில் இருந்தே இந்த அமைப்பில் ஆதிநாகப்பன் செல்வாக்குடன் திகழ்ந்தார். அதேநேரத்தில் நேதாஜி அமைத்த விடுதலை இயக்கத்திலும் பங்குபெற்று இந்திய சுதந்திரக் கழகத்தின் பிரசார பகுதியில் நியமனம் செய்யப்பெற்று பணியாற்றி வந்தார்.

பர்மா இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி போரிட்ட வீராங்கனை ஜானகி. சுபாஷ் சந்திரபோசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து செயல்பட்டார்.

இந்திய விடுதலைக்கு இப்பெண்மணி ஆற்றிய அரிய செயல்களைப் பாராட்டி இந்திய அரசு 1977-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனால் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருதினைப் பெரும் முதல் மலேசியர் என்ற பெருமை இவரையே சாரும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜானகி ஆதிநாகப்பன் தன்னை முழுமையாகப் பொதுநலச் சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இவருக்கும் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

அதன்பிறகு 1949ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தன் கணவருக்கு அனைத்து பணிகளிலும் பக்கபலமாக இருந்த இப்பெண்மணி அவருடைய இறப்புக்குப்பின் தன்னுடைய கணவர் பெயரால் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது என்ற விருதினை மலேசிய எழுத்தாளர்களுக்கு அளித்து சிறப்பு செய்தார்.

இத்தகைய பெருமைகளுக்குச் சொந்தமான வீர மங்கையின் புகழ் என்றென்றும் ஔிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com