பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்...

பிரதமர் இந்திரா காந்தி தனது காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் மதவாதம், வன்முறைகள் ஊக்கம் பெறுவதை எதிர்த்து
டாக்டர் ஜீவா
டாக்டர் ஜீவா

பிரதமர் இந்திரா காந்தி தனது காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் மதவாதம், வன்முறைகள் ஊக்கம் பெறுவதை எதிர்த்து சமூகசேவகர், விடுதலைப் போராளி பாபா ஆம்தே, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தேச ஒற்றுமைக்கான யாத்திரை வந்து கொண்டிருந்தார். நாமக்கல் கல்லூரியில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லூரியில் கூட்டம் துவங்கியது. மாணவ, மாணவியர் எதிரே தனித்தனியாகத் திரண்டு அமர்ந்திருந்தனர். பேசத் துவங்கிய பாபா ஆம்தே,  ”பெண்களும், ஆண்களும் தனித்தனியாகப் பிரிந்து அமர்ந்திருப்பது ஏன்? விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் பெண்கள், ஆண்களால் தங்களுக்கு ஆபத்து என்|று விலகி இருப்பது நமது சுயமரியாதைக்கான கேள்வியல்லவா? நாம் நம் பெண்களைத் தயக்கமின்றிப் பழகும் நம்பிக்கையை, பாதுகாப்பு உணர்வை உருவாக்க முடியாதிருப்பது நமது பண்பாட்டுத் தோல்வியல்லவா?” என்றார்.

அந்தக் கூட்டத்தில் எவ்வித சலனமுமோ, மாற்றமுமோ ஏற்படவில்லை. நாம் பண்படவில்லை என்பது புரிந்தது. நம் பெண்களின் நம்பிக்கைக்குரியவர்களாக ஆண்கள் மாறவில்லை என்பதன் சாட்சியாகவே அன்றைய கூட்டம் அமைந்தது. அந்த நம்பிக்கை இன்று வரை உருவாகவில்லை. இந்த நிலை மாறுவதற்கு எத்தனை காலமாகுமோ?

விடுதலை இந்தியா பற்றிய மகாத்மாவின் கனவுகளில் முக்கியமான ஒன்று, ஒரு நகரின் வீதியில் நள்ளிரவில் ஓர் இளம்பெண் நகைகளுடன் அச்சமின்றி நடந்துசெல்லும் துணிவைத் தருவதாக இருக்க வேண்டுமென்பதுதான். அவர் ஆசைப்பட்டார், அது இன்றுவரை நடக்கவில்லை. பகலிலேயேகூட பெண்கள் அச்சமின்றி நடக்க முடியாத நிலையே உருவாகியுள்ளது.

தன்னை இழந்த பின், என்னை இழக்கத் தருமனுக்கு ஏது உரிமை என்று முழக்கமிட்டாள் பாரதியின் பாஞ்சாலி. அண்ணன் தவறு செய்தால் அவன் கையை எரித்திடுவோம் என எரிதழல் கேட்டான் பீமன். இன்றும் பாஞ்சாலிகள் மானம் பறிக்கப்படுகிறது, சீதைகள் எரிக்கப்படுகின்றனர், பெண்களை தேவரடியார்களாக்கிய கொடுமைகள், பொருளாதாரக் காரணங்களால், ஜாதிக்கொடுமையால், ஆணாதிக்க ஆணவத்தால்  அந்த நிலை தொடர்கிறது. ஆனால் அவர்கள் கைகளை எரிக்கும் துணிவு கொண்ட எரிதழல் கேட்கும் "பீமசேனை” இன்று வரை எழவில்லை.

பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பெண் அறிஞர்களோ தொடர்ந்து வெகுண்டு எழுதிக்கொண்டுள்ளனர். எம் பெண்களை இழிவுபடுத்துவோரை அழித்துப் பழி வாங்குவோம்  என்று கூறுவோர் இல்லை. எதிரிக்கும் கேடு செய்யக் கூடாது என்று கூறிய அகிம்சாமூர்த்தி கூட, உங்கள் பற்களையும் விரல்களையும் ஆயுதமாக்கி நரசிம்ம அவதாரமெடு எனப் பெண்களுக்கு அனுமதி தந்தார். அகிம்சை விரதம் ஏற்ற பாம்பு அடிபட்டுக் கிடந்ததைக் கண்ட பரமஹம்சர், நீ ஏன் சீறியெழவில்லை என்றே கேள்வி கேட்டார். காளியும் துர்க்கையும் வெறும் வழிபடும் பொம்மைகளல்ல, வழிகாட்டும் முன்னோடிகளாக ஏற்றுப் பெண்கள் களம் இறங்க வேண்டிய காலம் இது.

வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவோர் பெரும்பாலும், கிராமப்புற, கல்வி மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை தலித் இளம் பெண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு “சாகா” நடத்திப் பயிற்சி தந்து, பெண் புலிப்படைகளை உருவாக்கத் தலித் உரிமை பேசும் அமைப்புகள்கூட ஏன் முன்வரவில்லை? பெண்ணடிமை, பெண் போகப்பொருள் என்கிற ஆதிக்க உணர்வு, ஜாதிமதம் கடந்து ஒவ்வோர் ஆணின் மனதிலும் உள்ளதா? தன் கணவனுக்காக ஊரை எரித்த கண்ணகிகள், தன்னை அழித்தபோதும் இன்னும் கரிக்கட்டைகளாக வாழ்வது ஏன்?

காட்டைப் பாதுகாக்க வாளேந்திய ஜான்சி ராணிகளும், வேலு நாச்சியார்களும் தம்மைக் காக்க வாளேந்தியது ஏன்? அன்னியரின் ஆயுதக் கிடங்கைத் தகர்த்த குயிலிகளும் கல்பனாக்களும், அநியாயக்காரர்களை எரிக்கும் எரிமலையாகாதது ஏன்? போர்க்களத்தில் காயம்பட்டோருக்கு மருந்து தடவும் நைட்டிங்கேல்களாக அன்றி, பெண்ணின் மானம் காக்கப் போர்க்களம் இறங்கும் காலம் இது எனப் பெண்கள் உணர்ந்து எழுவதே இனித் தேவை.

நள்ளிரவில் திணைக் களத்தில் காவல் நின்று யானையையும் விரட்டிய மறப்பெண்களின் வாரிசாக, தாய் மரபு சமூகத்தின் வாரிசாக, சமூகத் தலைமையையும் பெண்கள் ஏற்றுத் தம்மையும் காத்து, நமது சமூக மானத்தையும் காக்கும் போராளிகளாக மாறுவதே, இனிப் பெண்கள் தம்மைக் காத்துக் கொள்வதற்கான ஒரேவழியாகும். சக ஆண்களையும்  சட்டத்தையும் சமூகத்தையும் நம்பி வாழ்வது பயனற்றதே.

ஆனால்  மனிதகுல வரலாறு சொல்கிறது, மனித குலத்தை முதலில் தலைமையேற்று வழி நடத்தியது தாய்தான் என்று, அதைத் தாய்வழிச் சமூகம் என்றே அழைத்தோம், பெண்ணே தலைமை ஏற்றாள், வழி நடத்தினாள். அப்போது உடைமைகள் யாவும் பொதுவாக இருந்தன. ஒரு குழுவே ஒன்றுபட்டுக் கிடைத்ததைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தது.

உடைமை சமுதாயம் உருவானது. உடைமையைக் காக்க வலிமையும் மோதலும் பகையும் உருவானது. வலிமையான ஆண் பெண்ணின் தலைமையைப் பறித்தான். பகிர்வு சமுதாயம் ஒழிக்கப்பட்டு உடைமை சமூகம் உருவானது. தாய்வழிச் சமூகம் ஒழிய ஓய்வற்ற, நிம்மதியற்ற, போர் மலிந்த ஆண் ஆதிக்க உலகமானது. பெண் தலைமையேற்ற தாய் என்கிற நிலையிலிருந்து ஆணின் அடிமையாக மேலுமொரு உடைமையாக ஆணின் மகிழ்ச்சிக்கும் வக்கிரத்திற்குமான போகப் பொருளாக்கப்பட்டாள் பெண்.

இந்த மாற்றத்தைத்தான் ராமாயணமும் மகாபாரதமும் பிரதிபலிக்கின்றன. அது அரைகுறை மாற்ற காலகட்டம் என்பதால்தான் திரெளபதி கணவன்மார்களை எதிர்த்துச் சீறுகிறாள், அறம் பாடுகிறாள், சபதமேற்கிறாள். பணிந்து பின் நடந்த சீதை இனி பொறுப்பதில்லை என்று கணவனைப் பிரிந்து அரண்மனை விலக்கி  தனது இளம்குழந்தைகளுடன் மீண்டும் வனவாசம் ஏற்கிறாள், அறம் பிறழ்ந்த கணவனை வெல்கிறாள்.

தமிழ் மண்ணின் மகளான கண்ணகியோ, அமைதியாகத் தன் கணவனின் மகிழ்ச்சிக்காக அனைத்தையும் இழக்கிறாள். ஆனால் கணவனை இழந்தபின் அறச்சீற்றத்துடன் அரசவையில் நீயோ மன்னன் என்று சீறுகிறாள். அரசனுடைய அநீதி அரசை எரிக்கிறாள். தனித்து நடந்தாள், வென்றாள்.

கணிகை மகளான மணிமேகலையோ, ஆண் அடிமைத்தனத்தை எதிர்த்துத் துறவு பூண்டு, அறம் வளர்க்க நாடெல்லாம் அலையும் அறச்செல்வியாகிறாள். இல்லாமையும் பசியும் பட்டினியும்தான் உலகின் அறக்கேடுகளுக்கெல்லாம் காரணம் என உணர்ந்து அட்சய பாத்திரமாகிறாள். பெண் நீதிக்கெனப் போராடுவதையும், அநீதிகளின் ஆணிவேரான வறுமையைப் போக்கவுமான சமூகத் தலைமை ஏற்க முயலும் தமிழ்ப்பெண்களைச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்கிறோம். இத்தகைய ஆணின் சர்வாதிகார அநீதிகளை எதிர்த்து அலைபோல் எழும் பெண்ணினப் பிரதிநிதிகளை இன்றும் காண முடிகிறது.

உடைமை ஒழித்த முதல் பொதுவுடைமைச் சமுதாயமாக சோவியத் யூனியன் உருவானபோது, அதன் தலைமையேற்ற லெனின் நிறைவேற்றிய முதல் ஐந்து முடிவுகளில், முதலாவது போர் மறுப்பு, இரண்டாவதாக பெண்ணை போகப்பொருளாக்கிய ஆணாதிக்க சின்னமான விபச்சார ஒழிப்பு என்பதாக இருந்தது. அடுத்து உருவான சீனத்திலும் போதை ஒழிப்பும் பெண்களை அழகுப் பதுமைகளாக - போகப் பொருளாக்கும் விபச்சாரத்தை ஒழித்துப் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது. உடைமை ஒழிப்பு சமுதாயம் அமைந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் பெண் சமத்துவம் முதலிடம் பெற்றது.

எனினும், பெண்ணுக்கான உரிமைகளும், சமத்துவமும் ஆணிடமிருந்து போராடிப் பெறுவதாகவும் இரக்கப்பட்டு வழங்கப்படுவதுமாகவே உள்ளது. வசதி படைச்சவன் தர மாட்டான், அதை வயிறு பசிச்சவன் விட மாட்டான் என்பது போன்றதொரு போராட்டமாகவே பெண்களுக்கான பாலின சமத்துவப் போராட்டம் உள்ளது. இந்த சமத்துவத்திற்கான போராட்டத்தின் அடையாளமாகவே திருமண மறுப்பு, தன் பாலினத் திருமணம் போன்றவற்றை பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நீண்ட சமத்துவம், சம உரிமை, சமநீதிக்கான போராட்டத்தில் மனிதகுலம் ஓரடி பின்னால், ஈரடி முன்னால் என மெல்ல மெல்லவே முன்னேற வேண்டியுள்ளது. அதுவரை நாடு முழுவதும் நிர்பயாக்களும், ஹதராஸ் உள்ளிட்ட பெண்களின் உயிர்ப்பலிகள் தொடருவது தவிர்க்க முடியாதது. ஆனால் ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை, அடிமைத்தனம் என்பவை நிரந்தரமானவையாக என்றென்றும் தொடர முடியாது. சமத்துவம் என்பதே இறுதியான முடிவு. அதை எட்டும் வரை அதற்கான போராட்டங்கள் தொடரும். வாழ்வு என்பதே தொடர் போராட்டம்தானே.

 [அண்மையில் மறைந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வி. ஜீவானந்தம் கடைசியாக எழுதிய கட்டுரை- தினமணி.காம் இணையதளத்துக்கென -]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com