வாழப்பாடியில் அமையுமா மத்திய அரசின் ஜவுளி தொழில்பூங்கா? 1000 ஏக்கர் நிலத்துடன் காத்திருக்கும் 200 கிராமங்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்திலுள்ள 1000 ஏக்கர் நிலத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள 7 ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் பூங்காக்களில் ஒன்று அமைக்கப்படுமா?
வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி பரவக்காடு கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கேற்ப பரந்து காணப்படும் 1000 ஏக்கர் அரசு நிலத்தின் ஒரு பகுதி.
வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி பரவக்காடு கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கேற்ப பரந்து காணப்படும் 1000 ஏக்கர் அரசு நிலத்தின் ஒரு பகுதி.



வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்திலுள்ள 1000 ஏக்கர் நிலத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள 7 ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் பூங்காக்களில் ஒன்று அமைக்கப்படுமா? என, சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள 200 கிராமங்களை சேர்ந்த மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி,  100க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, கல்வராயன்மலை, அறுநூற்றுமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் தர்மபுரி மாவட்டம் சேலூர், வேலனூர், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் 100 கிராமப்புற மக்களின், கல்வி, போக்குவரத்து,  மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புக்கும் வாழப்பாடி மையமாக இருந்து வருகிறது. 

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட வாழப்பாடி பகுதியில், தொடர் வறட்சி, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நலிவடைந்து வருகிறது.  எனவே, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வாழப்பாடி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பொன்னாரம்பட்டி ஊராட்சி பரவக்காடு பகுதியில், ஊராட்சி கட்டுப்பாட்டில் ஏறக்குறைய 1,000 ஏக்கர் பரப்பளவில்  சமதளமான ஊராட்சி வனம் என்ற வகைப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலப்பகுதியில் தமிழக காவல்த்துறையின் காவலர் பயிற்சி பள்ளி அமைக்க 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்பள்ளி மேட்டூர் அருகே அமைக்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில், அரசின் பெருந்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பரந்து காணப்படும் பொன்னாரம்பட்டி பரவக்காடு ஊராட்சி வன புறம்போக்கு நிலத்தில், இப்பகுதி மக்களுக்கு பலனளிக்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில்  குறிப்பிட்ட ஒருங்கிணைந்த ஜவுளி  தொழில் பூங்கா அல்லது தொழிற்பேட்டை அமைப்பதற்கு வாய்ப்புள்ளதா? என்பது குறித்து, சேலம் ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையிலான உயரதிகாரிகள் கடந்த செப்.26 ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு விரும்பம் தெரிவித்துள்ள தமிழ்நாடு, பஞ்சாப், ஓடிஸா, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், அசாம், மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட 7 இடங்களை தேர்வு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடியில்,  மத்திய அரசு வாயிலாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைக்கப்படும். இத்திட்டத்தால், நேரடியாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 14 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 

புதிதாக ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுமென, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு,  மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசின் ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கேற்ற நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து, நிலத்தடிநீர், மனித வளம் மற்றும் இதர அடிப்படை வசதிகளை கொண்ட வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி பரவக்காடு பகுதியில், ஜவுளி தொழில் பூங்காவை அமைப்பதற்கு சேலம் மாவட்ட நிர்வாகவும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களிடையே எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொன்னாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் எம். தீபா, கல்லுாரி மாணவி பெ.விவேகா ஆகியோர் கூறியதாவது: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வாழப்பாடி அருகிலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தை தேர்வு செய்து, மத்திய அரசு அறிவித்துள்ள ஜவுளி பூங்கா அமைத்தால், 200 கிராமங்களை சேர்ந்த கிராமப்புற மக்களும், வேலைவாய்ப்பற்ற  பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் வேலைவாய்ப்பு பெறமுடியும். விவசாயத்தையை நம்பியுள்ள  இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மிகப்பெரிய  மாற்றம் ஏற்படும். எனவே, இத்திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று செயல்படுத்த, சேலம் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முனைப்பு காட்ட வேண்டும். எதிர்வரும் ஆண்டில் இத்திட்டம் நிறைவேறுமென்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com