உலகப் புகழ் பெற்ற மாமியார்: சாரா ரூஸ்வெல்ட்!

உலகப்புகழ் பெற்ற மாமியார்களின் பட்டியலைத் தொகுத்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பெயர் சாரா ரூஸ்வெல்ட்.
மகன் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், மருமகள் எலினோர் ரூஸ்வெல்ட்டுடன் சாரா ரூஸ்வெல்ட்.
மகன் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், மருமகள் எலினோர் ரூஸ்வெல்ட்டுடன் சாரா ரூஸ்வெல்ட்.

உலகப்புகழ் பெற்ற மாமியார்களின் பட்டியலைத் தொகுத்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பெயர் சாரா ரூஸ்வெல்ட். யார் அந்த சாரா ரூஸ்வெல்ட் என்கிறீர்களா? அமெரிக்க அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டின் தாயார் இவர்.

1882 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகன் பிறந்தபோது இனிமேல் குழந்தை பெறுவது ஆபத்து என்று மருத்துவர்கள் சாரா ரூஸ்வெல்டிடம் சொல்லி விட்டார்கள். ஆகவே, ஒரே மகனான பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் சாரா ரூஸ்வெல்ட்.

அந்த கால அமெரிக்காவில் தாதிகள், ஆயாக்களை வைத்து வளர்க்காமல் தனியொரு பெண்ணாக மகனை வளர்த்த ஒரே தாய் சாராதான் என்றால் மிகையாது. 

மகன் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது மகனுக்காகவே மசாசூசெட்ஸ் பகுதிக்கு இடம் மாறினார் அவர். மகன், எலினோர் என்ற தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான் என்று தெரிந்ததும், டிபிகல் அம்மாக்களைப் போலவே மகனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார் சாரா ரூஸ்வெல்ட். எப்படியாவது இந்த திருமணம் நடப்பதைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று சாரா ரூஸ்வெல்ட் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்.

இதுவெல்லாம் வேலைக்கு ஆகாது என்று ஒரு கட்டத்தில் தெரிந்தபோது, மகனின் திருமண விருப்பத்தை ஓராண்டு காலம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சாரா ரூஸ்வெல்ட் உத்தரவிட்டார்.

ஓராண்டு காலத்துக்குள் ஏதாவது செய்து மகனின் மனதை மாற்றிவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் அதையும் மீறி ரூஸ்வெல்ட்- எலினோர் திருமணம் நடந்தே விட்டது. 

ஆரம்பத்தில் மாமியார் - மருமகள் மோதல் இருந்தாலும் பிறகு எலினோரின் சொந்த தாய் போல மாறினார் சாரா. மகன், லூசி மெர்சர் என்ற வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று தெரிந்தபோது அந்த விஷயத்தில் மருமகளுக்கு ஆதரவாக இருந்தார் சாரா. இருந்தாலும் வழக்கமான மாமியாராக, மருமகளை கட்டுப்படுத்தும் வேலையையும் செய்திருக்கிறார் சாரா. 

சாராவின் இந்த மாமியார்த்தனத்தை உளத்தூண்டுதலாக வைத்து ‘சன்ரைஸ் எட் கேம்போபெல்லோ’ என்று ஒரு திரைப்படம் கூட வெளிவந்திருக்கிறது. 
பிராங்கிளின் ரூஸ்வெல்ட், நியூயார்க் நகரத்தில் வீடு கட்டியபோது திருமண நாள் பரிசாக பண உதவி செய்த சாரா, மகனுக்கு போட்ட முதல் நிபந்தனை, ‘வீட்டை இரு பகுதிகளாக பிரித்து கட்ட வேண்டும். அதன் ஒரு பகுதியில் நான் குடியிருப்பேன். மறுபகுதியில் நீங்கள் குடியிருக்கலாம்’ என்பதுதான்.
அந்த வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் போகும் பாதைகள், கதவுகள் எல்லாம் சாராவின் மேற்பார்வையில் கட்டப்பட்டவை.

இது ஒருபுறம் இருக்க, இப்படி ஒரு மாமியாரை சமாளித்து எலினோர் வாழ்ந்தது தனிக்கதை.

ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணாக இருந்த எலினார், நாட்டின் முதல் குடிமகளாக மாறியது மட்டுமல்ல, மாமியாரின் அதிகாரத்தை மீறி அவர் எப்படி மக்கள் உரிமை போராளியாக, அமெரிக்க குடியியல் உரிமைப் போராளியாக மாறினார் என்பது ஒரு பெரிய அதிசயம்தான். 

1933ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று வெள்ளை மாளிகையில் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டும், எலினாரும் குடியேறியபோது அவர்களுக்கு அப்பாடா என்று இருந்திருக்கும். அதன்பிறகு 3 முறை மகன் அதிபரானதை கண்ணால் பார்த்து மகிழ்ந்தார் சாரா.

மகன் என்னதான் அமெரிக்காவுக்கே அதிபராக இருந்தாலும், மகனையும், மகனது குடும்பத்தையும் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சாராதான்.

இதையும் மீறி மருமகள் எலினோர், பன்னாட்டு அரசியலில் ஆர்வம் காட்டியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். உழைக்கும் பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் அவை என்னும் பன்னாட்டு மன்றத்தை உருவாக்கப் பாடுபட்டிருக்கிறார். பன்னாட்டு மன்றம் உருவானபின் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகவும் எலினோர் இருந்திருக்கிறார்.

1941 ஆம் ஆண்டு, தனது 87 ஆவது வயதில் மாமியார் சாரா ரூஸ்வெல்ட் இறந்தார். அதே நாளில்தான் இரண்டாம் உலகப்போர் தொடர்பாக ஜப்பான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கான பிரகடனத்தில் மகன் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார்.

மாமியார் சாரா இறந்தபோது மருமகள் எலினோர் அவரது இரங்கல் குறிப்பில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

’36 ஆண்டுகளாக தெரிந்த ஒருவர் இறந்தும் அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தையோ, இழப்பு உணர்வையோ எனக்கு ஏற்படுத்தவில்லை’
ம்... இதற்கு மேல் ஒரு மாமியார் - மருமகள் உறவைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com