சென்னை உருவாக்கத்தில் முதலியார்கள்!
By வைஷாலி விஜயகுமார் | Published On : 13th September 2021 03:00 PM | Last Updated : 13th September 2021 03:30 PM | அ+அ அ- |

சென்னை உருவாக்கத்தில் முதலியார்கள்!
இன்றைக்கு உலகின் புகழ்பெற்ற நகர்களில் ஒன்றாகத் திகழும் சென்னை மாநகர் உருவான விதமே ஒரு பெரு வரலாறு.
மாநகரின் உருவாக்கத்தில் அடித்தள மக்களில் தொடங்கி எண்ணற்ற வகுப்பினரும் பிரிவினரும் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.
எழுத்தாளரும் வரலாற்று ஆர்வலருமான சுதா உமாஷங்கர் சமீபத்தில் "முதலியார்களும் மெட்ராஸும்" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையொன்றில் கல்வி, அரசியல், சினிமா, சமூக சேவை, கலாசாரம் போன்ற பல்வேறு துறைகளில் முதலியார் வகுப்பினரின் சேவைகளை விவரித்தார்.
"தென்னிந்தியாவில் முதன்முதலாக இந்திய கல்வி நிறுவனமொன்று தோன்றுவதற்கு - சென்னை பச்சையப்பன் பள்ளி - வழிவகுத்தது பச்சையப்ப முதலியார் விட்டுச்சென்ற சொத்துகள்தான்.
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர் அறிஞர் அண்ணா. தென்னிந்தியாவின் முதல் மௌன படத்தை இயக்கியவர் ஆர். நடராஜ முதலியார். இப்படி பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.." என்கிறார் சுதா உமாஷங்கர்.
இணையதளம் வாயிலாக "சென்னை உருவாக்கத்தில் முதலியார்கள்" என்கிற தலைப்பில் உரையாற்றிய அவர் சில பிரபலமான முதலியார்களின் சேவை பற்றியும் பிரபலம் அடையாத.. மறக்கப்பட்ட சில முதலியார்கள் செய்த முக்கிய சேவைகளின் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தார்.
ஆர்வமுள்ள கல்வியாளர்கள்
கல்வித் துறைக்கு முதலியாளர்கள் செய்த பங்களிப்புப் பற்றிய தகவல்களுடன் சுதா உமாஷங்கர் தனது உரையைத் தொடங்கினார். கல்வித் துறையை எடுத்துக்கொண்டால் பச்சையப்ப முதலியார் விட்டு சென்ற சொத்துகளால் நம் நாட்டில் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

1842 ஆம் ஆண்டு, அவர் இறந்து நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின், பச்சையப்பன் எழுதிவைத்த உயிலைச் செயல்படுத்த எழுந்த பிரச்னைகளுக்கு பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவரும் அப்போதைய அரசு தலைமை வழக்குரைஞருமான ஜார்ஜ் நார்ட்டன் எடுத்த முயற்சிகளால் தீர்வு காணப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டதே பச்சையப்பன் பள்ளி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் மிகவும் அழகான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது கிரீஸ் நாட்டின் கோவில் போல் கட்டப்பட்டு 600 மாணவர்கள் வரை படிக்கும் வசதி கொண்டது (அதற்கு முன்னால் வாடகைக்கு ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கியது).
பச்சையப்பன் கல்லூரியில் முதலில் நடுநிலைப் படிப்பு 1880-இல் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1940 ஆம் ஆண்டில் சேத்துப்பட்டுக்கு இடம் மாற்றப்பட்டது.
பச்சையப்ப முதலியார் மிகவும் ஏழ்மையில் பிறந்தவர் (அவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவருடைய தந்தை காலமானார்). பிறகு கடினமான, நேர்மையான உழைப்பால் பௌனி நாராயண பிள்ளையின் உதவியால் தானும் ஒரு துபாஷ் ஆனார். மக்களின் மதிப்பும் அன்பிற்கும் பாத்திரமாகி நிறைய பணம் சம்பாதித்தார்.
இதையும் படிக்கலாமே.. யாருக்கெல்லாம் கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி கிடைக்காது?
கல்வித் துறைக்கு சேவை செய்த மற்றொருவர் டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார். இவர் நோயாளிகளைப் பரிசோதித்து நோயைக் கண்டுபிடிக்கும் விதம் பலராலும் போற்றப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த இவர், தொண்டை மண்டல துளுவ வெள்ளாள பள்ளிக்கு 20 கிரவுண்ட் நிலத்தை அன்பளிப்பாக அளித்தார். சென்னையில் ஒரு பாலத்துக்கும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்துக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பல முதலியார்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கல்வி சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர். பெண் கல்விக்குப் பெரும் ஆதரவு தந்த மற்றொருவர் பிரபலமாக இருந்த வழக்குரைஞர் வி.எல். எத்திராஜ்.
1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எத்திராஜ் கல்லூரிக்காக அவர் ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாகவும் அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும் அளித்தார். அவருடைய சேவையை அங்கீகரிக்கும் வகையில் கமாண்டர்-இன்-சீஃப் சாலை, எத்திராஜ் சாலையாக பெயர் மாற்றப்பட்டது.
கல்வித் துறையில் பெரும் பங்காற்றியவர்கள் வரிசையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நெ.து. சுந்தரவடிவேலு (சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), ஜி விஸ்வநாதன் (நிறுவனர் மற்றும் துணைவேந்தர் வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), மு. ஆனந்தகிருஷ்ணன் (தலைவர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்) ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றார் சுதா உமாஷங்கர்.
தற்போதைய தலைமுறையை எடுத்துக்கொண்டால் அஸ்வத் தாமோதரன், (பேராசிரியர், பெருநிறுவன நிதித் துறை மற்றும் மதிப்பீடு, ஸ்டெர்ன் வணிகப் பள்ளி) சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக பெயர் பெற்றவர்.
மருத்துவத்தின் எதிர்காலத்துக்காக..
மருத்துவத் துறையில் பெரும் புகழும் செல்வாக்கும் பெற்றவர் ஆற்காடு இரட்டையர்களில் ஒருவரான டாக்டர் ஏ. லட்சுமண சுவாமி முதலியார். குழந்தைப் பேறு மருத்துவம் பற்றி அவர் எழுதிய பாடநூல் இன்றும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இவர் கல்வித் துறை மேம்பட அரும்பணியாற்றினார். மெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைச் சேரும். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒன்பது முறை அதாவது இருபத்தி ஏழு வருடங்கள் பணியாற்றினார் இவர்.
மருத்துவத் துறைக்காக சேவையாற்றிய மருத்துவ துறை சார்ந்தவர்களாக அறியப்படுவோர், டாக்டர் பி.எம். சுந்தரவதனன் (அறுவைச் சிகிச்சை நிபுணர்), டாக்டர் ஏ. வேணுகோபால் (சிறுநீரக மருத்துவர்). இவர் தரமணியில் தன் தந்தையின் கனவு நனவாக டாக்டர் ஏ. லட்சுமணசுவாமி முதலியார் அடிப்படை மருத்துவ விஞ்ஞான நிறுவனம் நிறுவ வழி வகுத்தார். டாக்டர் ரங்கபாஷ்யம் (இரைப்பை - குடல் சிகிச்சை நிபுணர் ), டாக்டர் ஆற்காடு கஜராஜ் (கதிரியக்க நிபுணர் ) ஆகியோரும் மருத்துவ சேவை புரிந்தவர்கள்.
டாக்டர் என். பாண்டியன், குழந்தைப் பேறு உருவாக்க சிகிச்சையில் நிபுணராவார். இவர் சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முறையைத் தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர்.
அரசியலில் முக்கிய பங்கு வகித்தோர்
அரசியல் துறையை எடுத்துக்கொண்டால் பல முதலியார்கள் குறுகிய காலமே அரசியலில் தீவிரமாக இருந்திருந்தாலும், சிலர், முதல்வர் பதவியை வகித்து, தமிழக மக்களுக்காகப் பணியாற்றினர்.
பி.டி. ராஜன் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். இவர் நீதிக் கட்சியின் கடைசித் தலைவர். இவருடைய மகன் பழனிவேல் ராஜன் திமுக ஆட்சியில் அமைச்சராகவும், தமிழ்நாடு பேரவைத் தலைவராகவும் பணியாற்றினார். தற்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இவருடைய மகன்.
எம். பக்தவத்சலம் சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. அவர் உப்பு சத்தியாகிரகத்திலும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்திலும் பங்கேற்றவர். தமிழ்நாட்டில் கடைசியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் (1963-1967).
அனைவராலும் அண்ணா என்று அன்பாக அழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சினிமாவின் சக்தியை நன்கு அறிந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர். மெட்ராஸின் கடைசி முதலமைச்சரும் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட மாநிலத்திற்கு முதல் முதலமைச்சரும் ஆவார்.
திமுகவில் முக்கிய பங்களிப்பைச் செய்த மற்ற முதலியார்கள் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ. மதியழகன் போன்றோர். அதனால் தானோ என்னவோ திமுகவை திராவிட முதலியார் கழகம் என்று ஒரு காலத்தில் அழைத்திருக்கிறார்கள்.
நீதிக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் நடேச முதலியார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஓ.வி. அளகேசன் அந்தக் காலத்தின் அரசியல்புள்ளிகள். ஜெயந்தி நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் செயலாற்றியவர்.
அரசியலைத் தாண்டிப் பார்த்தோம் என்றால் ஆற்காடு ராமச்சந்திரன் ஐ.நா. அவையின் மக்கள் குடியேற்ற மையத்தின் துணை முதன்மைச் செயலர் ஆகவும், டாக்டர் ஏ. கிருஷ்ணஸ்வாமி ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத் தலைவராகவும் பணியாற்றிய பெருமை பெற்றவர்கள்.
மூத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி. சபாநாயகம் மற்றும் வி. கார்த்திகேயனையும் இங்கே நினைவுகூரலாம்.
ஆற்காடு இரட்டையர்களில் மற்றொருவர் ஏ. ராமசுவாமி முதலியார். இவர் ஒரு சிறந்த வழக்குரைஞர், நாடாளுமன்ற உறுப்பினர், நீதிக் கட்சியின் பத்திரிகையான நீதி பத்திரிகையின் ஆசிரியர், துணைவேந்தர் என ராமஸ்வாமியின் பன்முகத் திறமையை அடுக்கிக்கொண்டே போகலாம். அரசியலிலிருந்து விலகிய பிறகு பல பெருநிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பணியாற்றினார்.
கொடை வள்ளல்கள்
முதலியர்களில் சிலர் புகழ்பெற்ற கொடை வள்ளல்களாக இருந்தனர். பணம் இருந்தாலும் கொடுக்க மனம் வர வேண்டுமே!
அத்தகையவர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார். மெட்ராஸ், பிரான்ஸ் நாட்டவரால் கைப்பற்றப்பட்டு 1749 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மூலம் திருப்பி அளிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டவர் இங்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் முறையில் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே ஒரு இடையூறு இல்லாத பகுதியை உருவாக்க விரும்பி இப்போது உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்திலிருந்த பட்டணம் கோவில்களான சென்ன மல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவ பெருமாள் கோவில்களை இடித்தார்கள். அப்போது இந்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில், அந்தக் கோயில்களைக் கட்ட தேவராஜ முதலி தெருவில் இடம் கொடுத்தார்கள். இந்த கோயில்களைக் கட்ட கிழக்கு இந்திய கம்பெனி சிறிய தொகையும் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் 5000 பகோடாக்களும் நன்கொடையாக அளித்தனர்.
சவலை ராமசாமி முதலியார் பல மருத்துவமனைகளையும் நூலகங்களையும் சத்திரங்களையும் கட்டினார். இவருடைய நன்கொடையால் உருவானதுதான் சென்னையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் 1888ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சவலை சர் ராமஸ்வாமி முதலியார் சத்திரம் விரைவில், மெட்ரோ ரயில் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்படவுள்ளது.
திரைக்குப் பின்னால்..
சமூக மேம்பாட்டைத் தாண்டி, தமிழக திரைப்படத் துறையிலும் நாடகத் துறையிலும் முதலியார்கள் தங்களுடைய முத்திரையைப் பதித்தனர்.
அவர்களில் ஒருவர் நாடகத் தந்தை என்று பெயர் சூட்டப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார். இவர் பத்மபூஷண் விருது வழங்கப் பெற்றவர். சுகுணவிலாச சபாவை நிறுவியவர். இவருடைய நாடகங்கள் முதலில் விக்டோரியா பொது அரங்கில் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடகங்களின் தரத்தை உயர்த்தப் பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டார். நாடகக் கலைஞர்கள் கூத்தாடிகள் என்று இழிவாக அழைக்கப்பட்ட நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, படித்துப் பட்டம் பெற்றவர்கள் தன் நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். சத்தியமூர்த்தி, சி.பி. ராமஸ்வாமி ஐயர் முதலியோர் அவருடைய நாடகங்களில் நடித்தனர். புஷ்பவல்லி என்ற அவருடைய முதல் நாடகத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்களின் வருகை இல்லாவிட்டாலும் அவர் மனம் தளரவில்லை. கிட்டத்தட்ட அறுபது நாடகங்களை எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி அவர் சில நாடகங்களை எழுதினார். உதாரணமாக மனோகராவைக் குறிப்பிடலாம். அவற்றில் சதி சுலோசனா, இராமலிங்க ஸ்வாமிகள், ரத்னாவளி போன்ற நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டன.
மற்றொரு முக்கியமான பங்களிப்பு ஆர். நடராஜ முதலியாரிடமிருந்து வந்தது. அவர் மோட்டார் வாகனம் மற்றும் சைக்கிள் விற்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். தமிழ் சினிமாவின் தந்தை என்ற பட்டம் இவருக்கு உண்டு.
தமிழில் முதல் மௌனப் படத்தை (கீசகவதம்) இவர் ஒளிப்பதிவு செய்து, இயக்கி, தயாரித்தார். ஸ்டீவர்ட் ஸ்மித் என்றவரிடம் புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு கலையைக் கற்று சினிமாவில் இறங்கினார்.
35,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 15000 ரூபாய் லாபம் கண்டது. இந்தியன் ஃபிலிம் கம்பெனியை மெட்ராஸில் மில்லர்ஸ் ரோட்டில் ஆரம்பித்தார்.
இதை அடுத்து திரௌபதி வஸ்திராபஹரணம், லவகுசா, மயில்ராவணா போன்ற படங்களைத் தயாரித்து இயக்கினார். அவருடைய ஸ்டுடியோவில் தீப்பிடித்து, பிறகு மகனை இழந்ததும் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய 'தெய்வ மகன்' தென்னிந்தியாவிலிருந்து அகாதெமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படம்.
ஏவிஎம் பேனரில் 'நானும் ஒரு பெண்' தேசிய விருது பெற்றது. ஏவிஎம்-ன் ஐம்பதாவது படமான 'அன்பே வா' மற்றும் 'எங்கிருந்தோ வந்தாள்', 'தர்மம் எங்கே?' ,'எங்க மாமா' ஆகியவை இவர் இயக்கிய சிறந்த படங்கள்.
பிற துறைகளிலும்
கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் தவிர மற்ற முக்கிய பதவிகள் வகித்த முதலியார்களின் விவரங்கள்..
கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத், கணபதி தணிகைமணி, இவர் மகரந்தம் (போலன்) தொடர்பான ஆராய்ச்சி செய்து விருதுகளைப் பெற்றவர். (ஒரு விமானப் பயணத்தின்போது தீவிரவாதியால் கொல்லப்பட்டார்).
ஒப்பந்ததாரர் சி.எஸ். லோகநாத முதலியார், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் எல்லாம் முதலியார்கள்தான்.
ஆர்.என். மாணிக்கம், காவல்துறை உயர் அதிகாரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குத் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். சிறந்த காவல்துறை அதிகாரியான வி.ஆர். ராஜரத்தினத்தின் பெயர், சென்னையில் விளையாட்டரங்கத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணியாற்றிய எம்.பி. நிர்மல், எக்ஸ்னோராவின் நிறுவனர், சென்னை மாநகரம் சிங்காரச் சென்னையாக மாற அரும்பாடுபட்டார்.
வங்கித் துறையில் சிறப்புற பணியாற்றியவர்கள் கே.எஸ்.டி. பானி என்று அறியப்படும் கே.எஸ். தண்டாயுதபாணி, துரைக்கண்ணு முதலியார் மற்றும் கச்சாபகேச முதலியார்.
மோட்டார் வாகன விற்பனையாளர்களாகப் பெயர் பெற்றவர்கள் விஎஸ்டி மோட்டார்ஸ்.
கோவூர் சுந்தரேச முதலியார், தியாகபிரம்மத்தை பந்தர் தெருவிலுள்ள தனது இல்லத்தில் வரவேற்று விருந்தோம்பல் செய்தவர்.
வியாசர்பாடி விநாயகம் முதலியாரின் பொம்மை சத்திரம் மயிலையில் பெயர் பெற்றது.
டாக்டர் நவீன் ஜெயக்குமார் (குவிஸ்மாஸ்டர்) மற்றும் அவர் தாயார் சரண்யா ஜெயக்குமார் வினாடி வினா நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றவர்கள், பல பரிசுகளையும் வென்றவர்கள்.
பெருநிறுவனங்களில் பெயர் சம்பாதித்தவர்கள்..
லார்சென் அண்ட் டியூப்ரோ இணை மேலாண்மை இயக்குநர் சி.ஆர். ராமகிருஷ்ணன் மற்றும் இம்பீரியல் ரசாயன தொழிற்சாலை (ஐசிஐ) மற்றும் டைடன் நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.எல். முதலியார் உள்ளிட்டோரும் முதலியார்களே.
தன்னுடைய பேச்சில் பெரும் பங்கு ஆண்கள் பற்றியே விரிவாக பேசினாலும், பெண்களின் பங்கையும் சுதா உமாஷங்கர் விவரித்தார்.
பெண்களின் பங்கு..
சமூக சேவைத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற சரோஜினி வரதப்பன், பெண்களின் நலம் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பாடுபட்டவர். ஆண்டாள் தாமோதரன் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அரிய பல முயற்சிகளை மேற்கொண்டவர்.
கீதா விஸ்வநாதன், தமிழ்நாடு சமூகநலத் துறை வாரியத் தலைவராக இருந்தவர், பரத நாட்டிய கலைஞர்கள் அலர்மேல்வள்ளி, மீனாட்சி சித்தரஞ்சன் ஆகியோர் பந்தநல்லூர் பாணியைப் பிரபலமாக்கியவர்கள். சபிதா ராதாகிருஷ்ணா, எழுத்தாளர், தொலைக்காட்சி, வானொலி தொகுப்பாளர், சமையல் நிபுணர் மற்றும் கைத்தறி மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர். ஹேமு ராமையா சென்னையில் மிகவும் பிரபலமான லாண்ட்மார்க் புத்தகக் கடையை நிறுவியவர்.
பெண் சாதனையாளர்கள் வரிசையில் டாக்டர் யசோதா ஷண்முகசுந்தரம் பற்றி அவசியம் கூற வேண்டும். பொருளாதாரத் துறை பேராசிரியரான அவர் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டார். எத்திராஜ் கல்லூரி பொருளாதாரத் துறை தலைவர், கல்லூரி முதல்வர், மதர் தெரசா பல்கலைகழகத் துணைவேந்தர் என பல பதவிகளை வகித்த பெருமைகள் இவரைச் சேரும். தற்போது சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார். இவருடைய கணவர் டாக்டர் வேதகிரி ஷண்முகசுந்தரம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.
சுபாஷினி முருகேசன் இந்திய வெளியுறவு பணியில் சிறப்புற சேவை செய்தார். இவர் சுரிநாம் நாட்டிற்கு இந்திய தூதுவராக இருந்தவர்.
சாலைகளின் பெயர்களில் பிரபலமான முதலியார்கள்
நெல்சன் மாணிக்க முதலியார் - அச்சிடுதல் தொழில்நுட்பத்தில் ஒரு வல்லுநர் மற்றும் முன்னோடி. இவருடைய மகன் ஏ.எம். சம்பந்த முதலியார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ, கொடையாளர்.
தற்போதைய ஆற்காடு ரோடு, ஆற்காடு ராஜாபாதர் முதலியார் ஞாபகமாக ஆற்காடு முதலியார் தெரு எனப் பெயர் சூட்டப்பட்டது. அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் முதலில் குடியேறியவர் நினைவாக சாலைகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் இருந்தது.

இவர் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியர். இந்தத் தெருவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் வாழ்ந்தார்கள்.
புகைப்படத் துறையில் பிரபலமானவர்கள் ஜி.கே. வேல் மற்றும் போட்டோ எம்போரியம் கதிரேசன்.
கன்னிமாரா ஹோட்டல் கடந்த 1854-ஆம் ஆண்டில் ரத்னவேலு முதலியார் என்பவரால் கட்டப்பட்டு இம்பீரியல் என்று பெயர் சூட்டப்பட்டது.
சிறு பாக்கெட்டில் ஷாம்பு என்பதை முதல் முறையாகக் கொண்டு வந்தவர் வெல்வெட் ஷாம்பு சி.கே ராஜ்குமார்.
இறுதியாக சுதா உமாஷங்கர் தனது உரையை நிறைவு செய்யும் போது, இன்னும் எத்தனையோ குறிப்பிடத்தக்க முதலியார்கள் இருக்கலாம். ஆனால் இவ்வளவு குறுகிய நேரத்தில் அவர்கள் எல்லோரையும் நினைவு கூறுவது என்பது இயலாத காரியம். விட்டுப் போன பெயர்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனைத் தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறி முடித்தார்.
[சுதா உமாஷங்கர் அளித்த கூடுதல் தகவல்களுடன் விரிவாக்கப்பட்ட கட்டுரை]