தொழிலாளர் வர்க்க எழுத்தாளர்!

தனது இலக்கிய நோக்கத்தைப் பொட்டிலடித்தாற்போல் பிரகடனப்படுத்தியவர் எழுத்தாளர் விந்தன்.
தொழிலாளர் வர்க்க எழுத்தாளர்!

"நாற்பது வருட காலம் இரவும் பகலுமாக மாறி மாறி உழைத்த பிறகு, ஓய்வு பெற்று வருகிறான் ஒரு மில் தொழிலாளி. அவனோடு சேர்ந்து "லொக்' "லொக்' என்ற இருமல் ஓசையும் வருகிறது. அவன் வரவுக்காக குடிசை வாசலில் காத்திருக்கும் அவன் மனைவி, தன் கணவன் வெறுங் கையுடன் வரமாட்டான். ஆயிரமோ இரண்டாயிரமோ கொண்டு வருவான். பத்து வருடங்களாகக் கல்யாணத்துக்குக் காத்திருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம். பையன்களில் யாரையாவது பத்து வகுப்பு வரையாவது படிக்க வைக்கலாம். குடிசையைப் பிரித்துக் கட்டலாம். மாற்றிக் கொள்ள மறுசேலை வாங்கலாம் என்றெல்லாம் எண்ணமிட்டாள். அவன் அவளை நெருங்கினான்.

"லொக்'... "லொக்'...

"கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா?'

என்று கேட்கிறாள் அவள்.

"கொண்டு வா' என்றான் அவன்.

அவள் வெந்நீர் கொண்டு வந்தாள்.

அதற்கு மேல் ஆவலை அடக்க முடியவில்லை அவளால்.

"என்ன கிடைத்தது?' என்று கேட்கிறாள் அவள்.

"டி.பி.' என்கிறான் அவன்.

அப்பொழுது அவள் விடுகிறாளே ஒரு பெருமூச்சு அந்த மூச்சிலிருந்து என் நாவல் பிறக்கிறது.'

இவ்வாறு தனது இலக்கிய நோக்கத்தைப் பொட்டிலடித்தாற்போல் பிரகடனப்படுத்தியவர் எழுத்தாளர் விந்தன்.

செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் 22.9.1916 அன்று பிறந்தார் விந்தன். (பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் கோவிந்தன்.) அவரது பெற்றோர் வேதாசலம் - ஜானகியம்மாள்.

கொடிதிலும் கொடிதான "இளமையில் வறுமை'யை இவர் முழுமையாக அனுபவித்ததால் நடுநிலைப் பள்ளி கல்வியைக்கூட முடிக்க முடியாமல் தனது தந்தையுடன் இரும்புப் பட்டறை வேலைக்குச் சென்றார். ஆயினும் இலவச இரவுப் பள்ளியில் சேர்ந்து பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார். பொருளாதார நெருக்கடியால் ஓவியப் படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

பின்னர் ஜெமினி ஸ்டுடியோவின் விளம்பரப் பிரிவில் ஓவியராகச் சேர்ந்தார். சில காலம் அங்கு பணியாற்றிய பின் மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த "தமிழரசு' அச்சகத்தில் அச்சுக் கோக்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். அப்போது "தமிழரசு' இதழில் அடிக்கடி கவிதைகள் எழுதி வந்தார் பாரதிதாசன். அவர் எழுதி மிகவும் புகழ்பெற்ற கவிதையான "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று தொடங்கும் கவிதையை முதன் முதலில் அச்சுக் கோத்தவர் விந்தனே.

சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த விந்தன் தங்கசாலையில் இருந்த "தமிழரசு' அலுவலகத்திற்கு தினமும் காலையில் நடந்தே செல்வார். பணி முடிந்த பின் மாலையில் நடந்தே வீடு திரும்புவார். அப்போது அவர் அந்தப் பகுதியில் வசித்து வந்த எளிய மனிதர்களான தொழிலாளர் குடும்பங்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். அந்த வாழ்க்கை முறைகளையெல்லாம் படைப்புகளில் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

தமிழரசு அச்சகத்தில் தரப்பட்ட ஊதியம் அவருக்குப் போதுமானதாக இல்லாததால் அங்கிருந்து விலகி "ஆனந்த போதினி', "தாருல் இஸ்லாம்' போன்ற அச்சகங்களுக்கு மாறி அதன் பின்னர் "ஆனந்த விகடன்' அச்சகத்தில் சேர்ந்தார்.

"ஆனந்த விகடன்' அச்சகத்தில் சேர்ந்த பின்னர்தான் விந்தன் கதைகள் எழுதத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில்தான் அதாவது 1939-இல் (தனது 23-ஆவது வயதில்) நீலாவதி என்னும் பெண்மணியை மணந்தார். அவருக்கு இரு குழந்தைகள் பிறந்தன.

தனக்கென ஒரு குடும்பம் ஏற்பட்டு விட்டதால் ஒரு நிரந்தர வருவாய் தேவை என்பதை உணர்ந்து, தான் வசித்த புளியந்தோப்பு பகுதியிலேயே "ராயல் ஹோட்டல்' என்ற பெயரில் ஓர் அசைவ உணவகத்தைத் தொடங்கினார்.

ஆனால், போதிய வருமானமின்மையால் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே அந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டது. அப்போது அவரது மனைவியும் இரு குழந்தைகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர்.

செய்வதறியாது திகைத்த விந்தன், ஒரு முடிவாக தனது மனைவியையும் குழந்தைகளையும் பொன்னேரியில் இருந்த மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றார். வேலூர் அச்சகங்கள் நிறைந்த ஊரானதால் அங்கிருந்த "விக்டோரியா பிரஸ்' என்ற அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் விந்தன். கையில் ஓரளவு பணம் சேர்ந்ததும் அந்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பினார். மனைவியையும் குழந்தைகளையும் தனது வீட்டிற்கு கூட்டி வந்தார்.

மீண்டும் வெளியூர் சென்று வேலை செய்ய விருப்பம் இல்லாததால் சென்னையிலேயே வேலை தேட ஆரம்பித்தார். அவருடைய நண்பர் ஒருவரின் பரிந்துரையால் கல்கி அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். ("கல்கி' பத்திரிகை தொடங்கப்பட்ட காலம் அது.)

"கல்கி' பத்திரிகையின் தீபாவளி மலருக்காக அதன் ஆசிரியர் கல்கி எழுதிய "வீணை பவானி' என்ற குறுநாவலை ஒரு பிழையுமின்றி அச்சுக் கோர்த்த விந்தனை அழைத்து கல்கி பாராட்டினார். அப்போது விந்தனின் கதை எழுதும் விருப்பத்தை அறிந்து அவரை கதைகள் எழுதும்படி கூறினார்.

மறுநாளே விந்தன் வி.ஜி. என்ற புனைப் பெயரில் (வி. கோவிந்தன் என்பதன் சுருக்கம்) ஒரு சிறுவர் கதையை எழுதி ஆசிரியர் கல்கியிடம் தர, அவர் அதனைப் படித்துப் பாராட்டியதோடு உடனே "கல்கி' பாப்பா மலரில் வெளியிடவும் செய்தார். அதுமட்டுமல்ல, அதுநாள்வரை வி. கோவிந்தன் என்று அறியப்பட்டு வந்தவருக்கு விந்தன் என்ற புனைப் பெயரைச் சூட்டியவரும் கல்கியே.

விந்தன் "கல்கி'யில் தொடர்ந்து பல கதைகள் எழுதலானார். அவரது படைப்புத் திறனை உணர்ந்து கொண்ட ஆசிரியர் கல்கி, ஒரு தொழிலாளியாக இருந்த அவரை கல்கியின் ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டார். அப்போது அக்குழுவில் துமிலன், வசந்தன், நாடோடி போன்றவர்கள் இருந்தனர். "கல்கி'யில் பணிபுரிந்த பலருக்கும் விந்தனின் "முன்னேற்றம்' பிடிக்காமல் போனாலும் ஆசிரியர் கல்கி தொடர்ந்து விந்தனை ஆதரித்தும் ஊக்குவித்தும் வந்தார்.

1942-இல் விந்தனின் மனைவி நீலாவதி காலமானார். இரண்டு குழந்தைகளை வளர்க்க இயலாமல் திண்டாடிய விந்தன் 1944-இல் சரஸ்வதி என்னும் பெண்மணியை இரண்டாம் தாரமாக மணந்தார். இவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள். அவற்றில் ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் அம்மை நோய் கண்டு இறந்துவிட்டன. இதனால் மனம் உடைந்த விந்தன் சென்னையை விட்டுப் பொன்னேரிக்குக் குடிபெயர்ந்தார். அங்கிருந்து சென்னை சேத்துப்பட்டில் இருந்த "கல்கி' அலுவலகத்துக்கு தினமும் வந்து சென்றார். 

1946-இல் விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான "முல்லைக் கொடியாள்' வெளிவந்தது. அந்த ஆண்டுதான் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தைத் தொடங்கி சிறந்த படைப்புகளுக்குப் பரிசு தரும் நடைமுறையை உருவாக்கியது. முதல் ஆண்டிலேயே அந்தப் பரிசை விந்தனின் "முல்லைக் கொடியாள்' சிறுகதைத் தொகுப்பு பெற்றது.

1948-இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த "பொன்னி' இலக்கிய இதழில் "கண் திறக்குமா?' என்ற தலைப்பிலான தொடர்கதையை "நக்கீரன்' என்ற புனை பெயரில் எழுதினார் விந்தன். அதனைப் படித்த எழுத்தாளர் கல்கி விந்தனிடம் "கல்கி' பத்திரிகைக்கு தொடர்கதை எழுதுமாறு கூறினார். அப்போது விந்தன் எழுதிய கதைதான் "பாலும் பாவையும்'. அந்தக் கதை வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிற மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டது. இதனால் விந்தனின் புகழ் தமிழகம் தாண்டியும் பரவியது.

தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட "மனிதன் மாறவில்லை', "காதலும் கல்யாணமும்', "சுயம்வரம்' போன்ற நாவல்களை எழுதிப் பெரும்புகழ் பெற்றார் விந்தன்.

விந்தனின் கதைகளைப் படித்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் அவரைத் தேடி வந்தனர். விந்தனுக்கும் திரைப்படத் துறையின் மீது காதல் இருந்ததால் திரைத்துறையில் நுழைந்தார். "வாழப் பிறந்தவன்', "அன்பு', "கூண்டுக்கிளி', "மணமாலை', "குழந்தைகள் கண்ட குடியரசு', "பார்த்திபன் கனவு', "சொல்லு தம்பி சொல்லு' ஆகிய ஏழு படங்களுக்கு வசனம் எழுதினார் அவர்.

சில படங்களுக்கு விந்தன் பாடல்களும் எழுதினார். "அன்பு' படத்தில் இவர் எழுதிய "சுத்தாத இடமில்லே / கேக்காத பேரில்லே / சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே' என்ற பாடலும், "கூண்டுக்கிளி' படத்தில் இடம்பெற்ற "கொஞ்சுங் கிளியான பெண்ணைக் / கூண்டுக்கிளியாக ஆக்கிவிட்டு / கெட்டிமேளம் கொட்டுவது சரியா? தப்பா?' என்ற பாடலும், "குலேபகாவலி' படத்தில் வரும் "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ / இனிக்கும் இன்ப இரவே நீ வா வா' என்ற பாடலும் இன்றும் புகழ்மிக்க பாடல்களே.

அந்த காலகட்டத்தில் விந்தனுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவர் எழுத்தாளர் ஜெயகாந்தனை விந்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஜெயகாந்தனும் விந்தனுக்கு மிகவும் பிடித்த நண்பரானார். விந்தன், ஜெயகாந்தன், தமிழ்ஒளி மூவரும் மும்மூர்த்திகளாக இலக்கிய உலகில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

திரையுலகில் ஏற்ற இறக்கம் இயல்பு என்பதால் தனக்கு இலக்கியத் துறையில் ஒரு பிடிமானம் வேண்டும் என்று கருதிய விந்தன், "மனிதன்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். சிறந்த கருத்துகள் நிறைந்த இதழாக அது மலர்ந்தது. அதில் வெளிவந்த கட்டுரைகள், மேலான மனிதர்கள் என்று சமூகத்தால் கருதப்பட்டவர்களின் கீழான குணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதில் வெளிவந்த "தெரு விளக்கு' என்னும் தொடர்கதை சினிமா உலக மாய்மாலங்களைத் தோலுரித்துக் காட்டியது. அந்தக் கதைக்கு திரையுலகப் பிரபலங்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அஞ்சவில்லை விந்தன். ஆயினும் ஒன்பது இதழ்களோடு நின்றுவிட்டான் "மனிதன்'.

விந்தன் மீண்டும் திரைப்பட உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபருடன் இணைந்து மல்லிகா புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சிவாஜி, பத்மினி ஆகியோரை ஒப்பந்தம் செய்து "பதிவிரதா' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுக்கத் தொடங்கினார். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டார். ஆனாலும் ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

விந்தன் தான் தொடங்கிய "புத்தகப் பூங்கா' என்ற பதிப்பகத்தின் மூலமாக ஜெயகாந்தனின் சிறுகதைகளைத் தொகுத்து "ஒரு பிடி சோறு' என்ற பெயரில் வெளியிட்டார். தொடர்ந்து சாண்டில்யன், இளங்கோவன், க.நா.சு. போன்ற எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டார்.

நாள்தோறும் பல போராட்டங்களைச் சந்தித்து வந்த விந்தன் ஏதேனும் ஒரு வேலையில் சேருவதே சரி என முடிவெடுத்து "தினமணி கதிர்' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அந்த இதழில் குழந்தைகளுக்கான கதைகள் நிறைய எழுதினார். அவை தவிர "ஓ மனிதா', "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்' போன்ற கதைகளும், "பாட்டில் பாரதம்' கவிதையும் தினமணி கதிரில் வெளிவந்தவையே. மேலும் விந்தனுக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்த "எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாறு', "எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்' ஆகிய தொடர்களும் தினமணி கதிரில் வெளிவந்தவையே.

எம்.ஆர். ராதா பற்றிய தொடரை விந்தன் எழுதும்போது அவருக்கும் எம்.ஆர். ராதாவுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. விந்தன் மீது பரிவும் மதிப்பும் கொண்ட எம்.ஆர். ராதா, அவருடைய மணி

விழாவை தான் நடத்தப் போவதாகவும் அப்போது ஒரு கணிசமான தொகையை நிதியுதவியாக வழங்கப் போவதாகவும் கூறி இதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்ற விந்தனுக்கு அன்புக் கட்டளையிட்டார்.

பிறர் தனக்குச் செய்ய விரும்பிய உதவிகளையெல்லாம் அதுவரை மறுத்து வந்த விந்தனால் எம்.ஆர். ராதாவின் அன்பை நிராகரிக்க இயலவில்லை. சம்மதித்தார்.

ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. ஆம். 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று - தனது மணிவிழாவுக்கு மூன்று மாதங்களே இருந்த நிலையில் - இயற்கை எய்தினார் விந்தன்.

எழுத்தாளர் விந்தன் அடிக்கடிக் குறிப்பிடும் ஒரு வாசகம்:

வாழ்ந்தாலும் "லோ சர்க்கி'ளோடுதான் வாழ்வேன்

செத்தாலும் "லோ சர்க்கி'ளோடுதான் சாவேன்!

அது உண்மையாயிற்று!

22.9.2015 - எழுத்தாளர் விந்தன் பிறந்த நூற்றாண்டு தொடக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com