மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது?

பெண்களைத் தெய்வத்திற்கு நிகராகப் பொருத்திப் பார்க்கத் துளியும் தயங்காத நாடு, பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகளாகத் தயக்கம் காட்டுவது ஏனோ?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது?

பெண்களைத் தெய்வத்திற்கு நிகராகப் பொருத்திப் பார்க்கத் துளியும் தயங்காத நாடு, பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகளாகத் தயக்கம் காட்டுவது ஏனோ?

1996-இல் தேவெ கௌடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். இதற்கு அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் தேவை. ஆனால், கால்நூற்றாண்டைக் கடந்தபோதிலும், மசோதாவானது இன்னும் கிடப்பில்தான் உள்ளது.

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது மசோதாவானது மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. 2010-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும்,  மக்களவையில் நிறைவேற்றப்படாததால் அது காலாவதியாகிவிட்டது.

1996-க்குப் பிறகு ஐக்கிய முன்னணி, இரண்டு முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி என ஆட்சிகள் மாறினாலும், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் காட்சிகள் மாறவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் இதை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்கள் தரப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.  

2014, 2019 மக்களவைத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதியளித்தது. பாஜக இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகும் இது நிறைவேற்றப்படாமலே உள்ளது.

கடந்தாண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருந்தபோதிலும், அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

2019-21 காலகட்டத்தில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின்படி, மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர்.

இந்தத் தரவுகளை முன்வைத்தே கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். 

அப்போது மக்களவையில் பேசிய அவர், "2014 முதல் நேரடியாகவும் எழுத்துபூர்வமாகவும் சுமார் 22-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரேவிதமான பதில்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. நானே மூன்று முறை கேள்வி கேட்டும், 'அரசு ஆழ்ந்து ஆய்வு செய்து வருகிறது, கவனமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முயல்கிறது' என ஒரேவிதமான பதிலைத்தான் பெற்றுள்ளேன்" என்றார் அவர்.

மேலும், இந்தப் பதில்கள் எப்போது முடிவுக்கு வரும், எப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்றார் கனிமொழி.

33 சதவீத இடஒதுக்கீடு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு, மக்கள்தொகை கணக்கிற்கேற்ப மகளிருக்கான இடஒதுக்கீடு விகிதம் அதிகரிக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 33 சதவீதத்துக்கே 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த 25 ஆண்டுகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கப்போகிறதோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com