தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழர் ஆர். நல்லகண்ணு.
தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு விருதாளராக சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தருணத்தில் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு அவர்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம் வாருங்கள்.

1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதிரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர் நல்லகண்ணு. பெற்றோர்கள் ராமசாமி-கருப்பாயி.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கல்வி: ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். பின்னர், தமிழில் பி.ஓ.எல் படிப்பு இரண்டாண்டுகள் படித்த நிலையில் தீவிர அரசியல் ஈடுபாட்டால் அந்த படிப்பு முழுமையடையாமல் போனது. 

போராட்டங்கள்: 1936 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் அரசுக்கெதிராகச் செயல்படத் தொடங்கினார். 1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களோடு சிறுவனாகக் கேட்டுக்கொண்டபோது அவருக்கு வயது 12.

1938 ஆம் ஆண்டு நடந்த ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது பெரியவர்களுக்கு உதவியாகச் சென்று அரிசி வசூலில் ஈடுபட்டார். அரிசிப் பெட்டிகளைத் தலையில் சுமந்து சென்றார்.

1939ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது போர் ஆதரவுப் பிரசார நாடகம் நடத்தப்பட்டது, சுதந்திரப் போராட்ட தாகம் கொண்ட மாணவர்கள் துணையுடன் அந்நாடகத்தை எதிர்த்து முன்னணியில் நின்று குரல் கொடுத்தார். அப்போது காவல் அதிகாரி ஒருவர் மாணவர்களை அடித்தார், உடனே அதைக் கண்டித்து மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது காவல்துறைக்கு ஆதரவாகச் செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிமையை நிலைநாட்டினார்.

1940 ஆம் ஆண்டு நடைபெற்ற போர் நிதி வசூலை எதிர்த்து இவர் குரல் கொடுத்தபோது ‘மாணவர்‘ என்ற காரணத்தால் கைது செய்யப்படாமல் அடித்து விரட்டியடிக்கப்பட்டார்.
 
1943-44 இல் ‘கலைத் தொண்டர் கழகம்‘ எனும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராகச் செயல்பட்டார்.

எட்டையபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்ட அவ்வமைப்பின் சார்பில் ரூ.400 நிதி வசூல் திரட்டிக் கொடுத்தார். 

1944 இல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து ‘ஜனசக்தி‘ அலுவலத்தில் செய்திக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தார்.

நகர வாழ்க்கை பிடிக்காததால் சென்னையிலிருந்து புறப்பட்டு நாங்குனேரி தாலுகாவில் விவசாய சங்க ஊழியராகச் செயல்பட்டார். அம்பாசமுத்திரம். சிவகிரி. புளியங்குடி. தென்காசி. நாங்குனேரி பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஜீயர் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்த மக்களை பல மைல்கள் நாள்தோறும் நடந்தே சென்று பேசிப்பேசி அவர்களை ஒன்று திரட்டி மடங்களுக்கு எதிராகப் போராடச் செய்தார். மிரட்டல்களுக்குப் பணியாமல் துணிச்சலாக விளைவித்த நெல்லை அவரவர் வீடுகளுக்குக்கே கொண்டு செல்லும் நிலையினை ஏற்படச் செய்தார். மடங்கள் தரப்பில் வழக்குகள் போடப்பட்டும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

95 ஆவது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள்.

நாங்குநேரிக்கு ஒரு மே நாளன்று வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அங்கு சில தெருக்களில் பிற சமூகத்தினருக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் ஆயிரக்கணக்கான பேர் மீறிச் சென்றதால் ஜீயர் மடத்து ஆள்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டம் முடிந்து இரவு திரும்பிய நல்லகண்ணுவை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்து அடித்தனர் மடத்து அடியாள்கள்,

1948 இல் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவானார். 1949 டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டபோது கூட்டாளிகளைப் பற்றியும் அவர்களது மறைவிடங்கள் பற்றியும் கேட்டு அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீசார் சித்திரவதை செய்தபோது தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் இருந்தார்.

நாங்குனேரி கிளைச் சிறையில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் நெல்லைச் சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டதால் அவரது 29 ஆவது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரகுளம் சிறையில் ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்து 1956 இல் விடுதலையானார்.

விடுதலையாகி வெளியில் வந்ததும் அப்போதைய முதல்வர் காமராஜரைச் சந்தித்து சிறையிலிருக்கும் மற்ற தோழர்களையும் விடுதலை செய்யுறுமாறு கேட்டுக்கொண்டார்.

கூட்டணி கட்சி தலைவர்களுடன்

மாநில அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்றும், மத்திய அரசின் சட்டங்களுக்கு உள்பட்டவர்களை விடுதலை செய்ய இயலாது என்றும் கூறினார் காமராஜர். இவரது முயற்சியின் காரணமாக சிறையிலிருந்த பலருக்கும் ‘பி‘ வகுப்பு சிறை கிட்டியது. (மதுரை சிறையில் நல்லகண்ணு இருந்தபோது அரசியல் கைதிகளுக்கான ‘பி‘ வகுப்பு சிறை கேட்டு 12 நாள்கள் உண்ணாவிரதமிருந்தது குறிப்பிடத்தக்கது)

இல்லறம்: சிறையிலிருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமியின் மகள் ரஞ்சிதம் என்பவருடன் 5.6.1958 அன்று நெல்லையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.  (வாழ்க்கைத் துணையாகவும் உற்ற தோழராகவும் இருந்த இவரது மனைவி 2016 ஆம் ஆண்டு காலமானார்).

கடனா நதியில் அணை: விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இவர் 1966 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள கடனா நதியில் அணை கட்டவேண்டும் என்று 11 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். பக்தவத்சலம் ஆட்சியின் பிடிவாதம் தளர்ந்து அக்கோரிக்கை ஏற்கப்பட்டு அணை கட்டப்பட்டது.
 
1967 ஆம் ஆண்டு நொச்சிக்குளத்தில் விவசாயிகள் அவர்கள் பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து இவரது தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து பன்னிரண்டு நாள்கள் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தி அப்பிரச்னைக்குத் தீர்வு கண்டார்.

ரேஸ் கோர்ஸ் எதிர்ப்பு: சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்ட இவர் தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர்,  1985 இல் குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை எதிர்த்து ‘தாமரை’யில் கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது. 

மணல் கொள்ளை: 2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை உத்தரவு பெற்றார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை நடப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார்.

1969 இல் விவசாயிகள் பிரதிநிதியாக கிழக்கு ஜெர்மனிக்குச் சென்றார். 20 நாள்கள் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் மாஸ்கோ, லெனின்கிராடில் ஐந்து நாள்கள் தங்கியிருந்து பின்னர் நாடு திரும்பினார்.

1973 இல் சோவியத் யூனியன் சென்று மூன்று மாதங்கள் மார்க்சியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு நாடு திரும்பினார்.

சிறையில் இருந்த காலத்தில் உண்டான வாசிப்புப் பழக்கத்தை தொடர்ந்த காலங்களில் விசாலப் படுத்திக்கொண்டார். வாழ்நாள் முழுதும் ஏராளமான புத்தகங்களை வாசித்துக் குறிப்புகளை எடுத்து வைக்கும் பழக்கம் சிறையிலிருந்து தொடங்கியவர், அவ்வப்போது கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்தார். ஏதேனும் இதழ்களில் நல்ல கட்டுரையை வாசித்துவிட்டால் சிறியவர் பெரியவர் என்றில்லாமல் கட்டுரையாளரைத் தொடர்பு கொண்டு பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டார். 

நூல்கள்: காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார். ‘பி,சீனிவாசராவின் வாழ்க்கை வரலாறு (1975)', விடுதலைப் போரில் விடிவெள்ளிகள் (1982), கங்கை காவிரி இணைப்பு(1986), பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள் (1986), நிலச்சீர்திருத்தம், மடம், கோயில் நிலங்கள்.., கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் எனும் பயண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார். “இந்திய விவசாயிகள் பேரெழுச்சி‘ எனும் நூலை மொழிபெயர்த்துள்ளார்.

தலைவர் பொறுப்பு: சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

அவரது 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.  அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

விருதுகளும் பரிசுகளும்:  தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவர் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். 

தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் கொண்டவராக ஒருபோதும் அவர் இருந்ததில்லை என்பதன் எளிய சான்றுகளே இவை.

இன்றளவும் விவசாயிகள், தொழிலாளர் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், கார்ப்பரேட்களுக்கு  எதிராகவும், சாதி-மத வெறிக்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார் ஆர்.நல்லகண்ணு.

தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும்,  தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு “தகைசால் தமிழர் விருது" அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானது பாராட்டுக்குரியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com